பாஜக-வில் இணைந்த 8 எம்.எல்.ஏ-க்கள்: ``ராகுலின் ஜோடோ யாத்திரையை சீர்குலைக்கவே..!" - காங்., சாடல்

கோவாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 8 பேர் பாஜக-வில் இணைந்தனர்.

Published:Updated:
காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுடன் முதல்வர் பிரமோத் சாவந்த்
காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுடன் முதல்வர் பிரமோத் சாவந்த்
0Comments
Share

நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்களை தங்களது பக்கம் இழுக்கும் வேலையில் பா.ஜ.க தீவிரமாக செயல்பட்டுவருகிறது. வடகிழக்கு மாநிலத்திலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை தங்களது பக்கம் இழுத்து ஆட்சியைப் பிடித்துவிட்டது. இது போல் மத்தியப் பிரதேசம், கர்நாடகா என்று சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வரிசையில், தற்போது கோவாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வில் இணைந்திருக்கின்றனர். மொத்தமிருக்கும் 11 எம்.எல்.ஏ-க்களில் 8 பேர் காங்கிரஸ் மூத்த தலைவர் திகம்பர் காமத், மிச்சேல் லோபோ தலைமையில் பா.ஜ.க-வில் இணைந்திருக்கின்றனர். மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ-க்கள் பிரிந்து சென்றிருப்பதால் அவர்கள்மீது கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் எடுக்க முடியாது.

கோவா
கோவா

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி யாத்திரை நடத்தி வரும் நிலையில், கோவா காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வுக்குத் தாவியிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன், ``பா.ஜ.க மத்திய விசாரணை ஏஜென்சிகள், குண்டர்கள், பண பலம் உட்பட அனைத்து யுக்திகளையும் பயன்படுத்தி ராகுல் காந்தியின் யாத்திரையை சீர்குலைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இதைச் செய்திருக்கிறது" என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்
காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்

திகம்பர் காமத்தும், லோபோவும் கடந்த ஜூலை மாதமே காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் சிலருடன் பா.ஜ.க-வுக்குத் தாவ முயன்றனர். ஆனால் அதனை காங்கிரஸ் தடுத்து நிறுத்தியதோடு திகம்பர் காமத், லோபோவின் பதவியை கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பறிக்கவேண்டும் என்று கோரி சபாநாயகரிடம் காங்கிரஸ் மனுக்கொடுத்திருந்தது. ஆனால் சபாநாயகர் அந்த மனுமீது நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்து வந்தார். அதோடு மிச்சேல் லோபோவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து காங்கிரஸ் கட்சி நீக்கியிருந்தது. ஆனால் வேறு எதிர்க்கட்சி தலைவரை நியமிக்காமல் இருந்தது.

பாஜக தலைவர்கள்
பாஜக தலைவர்கள்

இந்த நிலையில், இன்று காலையில் திடீரென காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 8 பேர் சபாநாயகரைச் சந்தித்துப் பேசினர். சட்டமன்றக் கூட்டம் நடைபெறாத நிலையில், சபாநாயகரை சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்புக்குப் பிறகு 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களும் பா.ஜ.க-வில் சேர்ந்துவிட்டதாக மாநில காங்கிரஸ் தலைவர் சதானந்த் தெரிவித்தார். கோவாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில்தான் தேர்தல் நடந்தது. அதற்குள் 8 எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வுக்குச் சென்றுவிட்டனர். கடந்த 2019-ம் ஆண்டும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வில் சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.