'மரியாதைக் குறைவு.. அலைக்கழிப்பு' - கோவை தனியார் ரயில் நிர்வாகத்தின் மீது பயணிகள் புகார்

கோவை - ஷீர்டிக்கு இயக்கப்பட்ட தனியார் ரயில் தன் முதல் பயணத்திலேயே ஏராளமான சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறது.

Published:Updated:
கோவை ஷீர்டி தனியார் ரயில்
கோவை ஷீர்டி தனியார் ரயில்
0Comments
Share

கோவை – ஷீர்டிக்குக் கடந்த சில நாள்களுக்கு முன்பு `சவுத் ஸ்டார் ரயில்’ என்கிற தனியார் நிறுவனம் தன் சேவையைத் தொடங்கியது. பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் நிறுவனம்தான் ரயிலை இயக்குவதற்கான அனுமதியைப் பெற்றிருக்கிறது. கடந்த 14-ம் தேதி இந்த ரயில் வடகோவை ரயில் நிலையத்திலிருந்து ஷீர்டிக்குப் புறப்பட்டது.

மார்ட்டின்
மார்ட்டின்

பயணிகளை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகளைச் செய்திருந்தது தனியார் நிறுவனம். ஆனால், ஏற்கெனவே கட்டணம் அதிகம் என்கிற புகார் எழுந்திருந்த நிலையில், தற்போது அதன் சேவை குறித்தும் புகார் எழுந்திருக்கிறது.

அந்த ரயிலில் பயணித்த பயணிகள் நம்மிடம் கூறுகையில், ”எதுவுமே சரியில்லை. ரயிலுக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர்கள் வி.ஐ.பி ரூமில் சென்று படுத்துக்கொண்டனர். மற்ற ஒருங்கிணைப்பாளர்களும் சரியாக பதில் சொல்லவில்லை. பேக்கேஜ் முறையில் எங்களுக்கு ரூமெல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகக் கூறினார்கள்.

தனியார் ரயில்
தனியார் ரயில்

ரூமிலிருந்து காலி செய்தபோது காசு கொடுக்கவில்லை என லாட்ஜ்காரர்கள் எங்களைப் பிடித்து வைத்துக்கொண்டனர். பலருக்கு போன் செய்து, கொடுத்த பிறகுதான் எங்களை விட்டார்கள்.

காசை முன்பே வாங்கி வைத்துக்கொண்டு எல்லாவற்றுக்கும் அலைக்கழிக்கின்றனர். ஷீர்டி ரயில் நிலையத்திலிருந்து போக்குவரத்து வசதி செய்வதாகக் கூறினார்கள். அதையும் முறையாகச் செய்யவில்லை. பலர் சொந்தச் செலவில் ஆட்டோ வைத்துத்தான் சென்றோம்.

தனியார் ரயில்
தனியார் ரயில்

கடைசி நேரத்தில் ஷீர்டியிலிருந்து ரயில் கிளம்பும் நேரத்தையும் மாற்றிவிட்டனர். தனியார் நிறுவன ஒருங்கிணைப்பாளர்கள், சில பயணிகளை மறந்து அங்கேயே விட்டுவந்துவிட்டனர். அவர்களும் அவசர அவசரமாக வண்டி வைத்துக்கொண்டு வந்து ரயிலைப் பிடித்தனர்.

பயணிகள் கொதித்துப்போயிருக்கிறார்கள். சிலர் அழுதுவிட்டனர். இவர்களின் சேவையில் யாருக்கும் உடன்பாடு இல்லை. மன உளைச்சலில் இருக்கிறோம். பெண்கள் உட்பட அனைவரிடமும் மரியாதை இல்லாமல் பேசுகின்றனர். தரிசனத்துக்கும், ‘அந்த கேட்டுக்கு வாங்க, இந்த கேட்டுக்கு வாங்க’ என்று அலைக்கழிக்கின்றனர். உணவுக்கான கட்டணமும் அதிகம்.

தனியார் ரயில்
தனியார் ரயில்

அதனால் தனியார் நிறுவனத்திடமிருந்து அரசே இந்தச் சேவையை எடுத்து நடத்த வேண்டும்” என்றனர். இந்தப் புகார்கள் தொடர்பாக விளக்கம் கேட்க தனியார் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி முகமது என்பவரைத் தொடர்புகொண்டாம். அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை.