``நாங்கள் மிக நெருக்கமான உறவுகள்!" - ராணி எலிசபெத்தின் மறைவுக்கு `டப்பாவாலாக்கள்' இரங்கல்

ராணி இரண்டாம் எலிசபெத் தன் 96-வது வயதில் காலமானார். அவர் மறைவுக்கு மும்பையைச் சேர்ந்த டப்பாவாலாக்கள் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.

Published:Updated:
டப்பாவாலாக்கள்
டப்பாவாலாக்கள்
0Comments
Share

1890 -ம் ஆண்டு முதல், அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு, அவர்களின் இல்லத்திலிருந்து உணவை எடுத்துச் செல்லும் பணியை மேற்கொள்பவர்கள்தான் டப்பாவாலாக்கள். மும்பையில் 5,000 பேர் வரை இருக்கும் இந்தக் குழு வெள்ளை ஆடை, பாரம்பர்ய காந்தி தொப்பியை அணிந்து, தினமும் கிட்டத்தட்ட 2,00,000 மும்பைவாசிகளுக்கு உணவு கொண்டுபோகிறார்கள்.

டப்பாவாலாக்கள்
டப்பாவாலாக்கள்
ட்விட்டர்

இந்த நிலையில், கடந்த 2003-ம் ஆண்டு அப்போதைய இங்கிலாந்து இளவரசரும், தற்போதைய மன்னருமான சார்லஸ் மும்பைக்கு முதன்முறையாக விஜயம் செய்தபோது, ​​எதிர்பாராதவிதமாக மும்பை டப்பாவாலாக்களை ஒரு நண்பர்களாக பாவித்துக்கொண்டார். அந்த உறவின் நெருக்கத்தால் சார்லஸ் ஏப்ரல்-9 2005 அன்று லண்டனில் கமிலா பார்க்கர் பவுல்ஸ் உடனான தன்னுடைய திருமணத்துக்கு டப்பாவாலாக்களை அழைத்திருந்தார். அதேபோல டப்பாவாலாக்கள் 2018-ல், இளவரசர் ஹாரி, நடிகை மேகன் மார்க்கல் ஆகியோரின் திருமணத்தை, அரசு மருத்துவமனைகளிலுள்ள நோயாளிகளுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.

சார்லஸ்
சார்லஸ்
ட்விட்டர்

இந்த நெருக்கமான உறவின் காரணமாகத்தான் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு டப்பாவாலாக்கள் மன்னர் சார்லஸின் துக்கத்தில் பங்குகொள்கிறார்கள். இது தொடர்பாக மும்பை டப்பாவாலா சங்கத் தலைவர் சுபாஷ் தலேகர், "மன்னர் சார்லஸ், இளவரசர் சார்லஸாக இருந்தபோது இந்தியா வந்திருந்தார். அப்போது மும்பை டப்பாவாலா சங்கம் பிரிட்டிஷ் அரச குடும்பத்துடன் மிகவும் நெருங்கிய உறவைக்கொண்டிருந்தது. இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணம் குறித்து நாங்கள் மிகவும் வருத்தமடைந்திருக்கிறோம். மேலும், அனைத்து டப்பாவாலாக்களும் அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.