'கலைதான் என்னைக் காப்பாற்றுகிறது!’ - லட்ச ரூபாய் நட்சத்திரம்' கே.பி.சுந்தராம்பாள் #AppExclusive

சுந்தராம்பாளின் வாழ்க்கைக்குப் பின்னால் இவ்வளவு சோகங்களா? 15.08.1965 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...

Published:Updated:
K. B. Sundarambal
K. B. Sundarambal
0Comments
Share

திருமதி கே.பி.சுந்தராம்பாள்! 

"குழந்தைகளே! ஆற்றுக்குப் போகலாம் வாருங்கள்'' என்று அழைத்தாள் தாயார். 

தாயைப் பின் தொடர்ந்து சென்ற அந்தக் குழந்தைகள் மூவரும் (இரு பெண்கள், ஒரு சிறுவன்) "எதற்கம்மா எங்களை ஆற்றுக்குக் கூப்பிடுகிறாய், குளிப்பதற்கா?" என்று கேட்டபோது, அந்தத் தாய் துக்கம் தாங்காமல் "என் அருமைச் செல்வங்களே! உங்கள் பசித்த வயிற்றுக்குச் சோறு போட இந்தப் பாழும் ஜன்மத்துக்கு ஒரு வழியும் இல்லை. வறுமையின் கொடுமையை என்னால் தாங்கவும் முடியவில்லை. உங்கள் மூவரையும் ஆற்று வெள்ளத்திலே தள்ளிவிட்டு, நானும் உங்களுடன் உயிரை விட்டுவிடப் போகிறேன்" என்று கதறிவிட்டாள். அதைக் கேட்ட அந்தப் பெண் குழந்தைகளில் ஒருத்தி அம்மாவைத் தடுத்து நிறுத்தி வீட்டுக்குத் திருப்பி அழைத்து வந்து விட்டாள். 

K. B. Sundarambal
K. B. Sundarambal

வறுமையின் கொடுமை தாங்காது கொடுமுடியை விட்டுக் கரூருக்குப் புறப்பட்டுச் சென்ற அந்த ஏழைக் குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பை யாரோ ஒரு புண்ணியவான் ஏற்றுக் கொண்டார். 

அம்மாவைத் தடுத்து அழைத்து வந்த அந்தச் சிறுமி, ஒரு தாள் கரூர் வீதியில் நின்று கொண்டிருந்தபோது, அந்த வழியாகச் சென்ற டெபுடி போலீஸ் சூப்பரிண்டெண்ட் ஆர். எஸ். கிருஷ்ணசாமி அய்யருக்கு என்ன தோன்றியதோ என்னவோ, அந்தச் சிறுமியைப் பார்த்து, "டிராமாவில் சேர்ந்து நடிக்கிறாயா கண்ணு?" என்று கேட்டார். 

அந்தச் சிறுமி மகிழ்ச்சியோடு தலையை அசைத்ததும் அவளை வேல் நாயர் நாடகக் கம்பெனியில் கொண்டு போய்ச் சேர்த்து விட்டார். எட்டு வயதுகூட நிரம்பாத அந்தப் பெண்ணுக்கு அங்கே கிடைத்து என்ன வேஷம் தெரியுமா? நல்லதங்காள் நாடகத்தில் கிணற்றிலே தள்ளப்படும் குழந்தைகளிலே ஒருத்தி! 

பிற்காலத்தில் 'லட்ச ரூபாய் நட்சத்திரம்' என்று புகழப்பெற்ற திருமதி கே. பி. சுந்தராம்பாளின் வாழ்க்கை நாடகம் இப்படித்தான் ஆரம்பமாயிற்று! 

குழந்தை சுத்தராம்பாள் குமரி சுந்தராம்பாளாக வளர்ந்தாள் . 

கம்பெனி நாடகங்களிலும், ஸ்பெஷல் நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்த இவர், 1927-ம் ஆண்டில் இலங்கைக்குச் சென்றபோது, அங்கே எஸ். ஜி. கிட்டப்பாவுடன் இரண்டு ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்க அழைக்கப்பட்டார். 

''என்னுடைய ஸ்வாமியை (கிட்டப்பா) நான் முதன்முதல சந்தித்தது இலங்கையில்தான். அதற்குப் பிறகு அவருடன் சேர்ந்து வாழும் பேறு எனக்கு ஆறே ஆண்டு காலம்தான் கிட்டியது. அப்புறம் 1933-ல் அவர் காலமாகி விட்டார். அன்று முதல் இன்று வரை நான் பால் சாப்பிடுவதில்லை. சோடா கலர் குடிப்பதில்லை. புஷ்டியான ஆகாரங்கள் சாப்பிடுவதில்லை. அமாவாசை தோறும் காவேரி ஸ்நானம் செய்யத் தவறுவதில்லை. இந்த முப்புத்திரண்டு ஆண்டுகளில் ஒரு சில அமாவாசைகளே காவேரி ஸ்நானம் இல்லாமல் விட்டுப் போயிருக்கின்றன" என்கிறார் இந்த ஒளவைப் பிராட்டியார். 

K. B. Sundarambal
K. B. Sundarambal

"கிட்டப்பாவை மணந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணம் தங்களுக்கு எப்போது ஏற்பட்ட்து?" என்ற கேள்விக்கு, இவர் கூறிய பதில்: "அது ஒரு கதை! நானும் அவரும் சேர்ந்து நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அவர் நந்தனார் வேதியர் பாட்டுக்களை எனக்குக் கற்றுக் கொடுப்பதற்காக என் வீட்டுக்கு அடிக்கடி வந்து போவார். அப்போது நாங்கள் திருநெல்வேலியில் ஒரு மாடி வீட்டில் குடியிருந்தோம். பாட்டெல்லாம் சொல்லிக் கொடுத்து முடிந்த பிறகு ஒரு நாள் அவர் என் வீட்டுக்கு வந்து என் தாயாரிடம் 'என்ன அக்கா, புள்ளே எங்கே?' என்று கேட்டார். பாட்டுச் சொல்லித் கொடுக்கத்தான் வத்திருக்கிறார் என்று எண்ணிக் கொண்ட என் தாயார் நான் மாடியில் இருப்பதாகக் கூறியதும் அவர் மாடிக்கு வந்து நின்றார். அவர் உள்ளத்தில் கள்ளம் இருப்பதை அவருடைய பார்வை காட்டிக் கொடுத்துவிட்டது. 'எங்கே வந்தீர்கள்?' என்று கேட்டேன். அவர் மெளனமாக என்னையே பார்த்துக் கொண்டு நின்றார். அவர் எண்ணம் எனக்குப் புரிந்து விட்டது. என்னைக் கடைசி வரைக் காப்பாற்றுவதாக, அவரிடம் உறுதிமொழி வாங்கிக் கொண்ட பின்னரே, அவரைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்தேன். இருவரும் வெவ்வேறு ஜாதியாகையால் நாங்களிருவரும் திருமணம் செய்து கொள்வதற்கு என் வீட்டில் பெரிய எதிர்ப்பு இருந்தது. ஆனாலும் நான் அவரைத்தான் மணந்து கொள்வேன் என்று ஒரே பிடிவாதமாக இருந்துவிட்டேன். கொஞ்ச நாட்களுக்கெல்லாம் எங்களிருவருக்கும் மாயவரத்தில் திருமணம் நடந்தது."

கிட்டப்பா இறந்ததும், இவருக்கு அடைக்கலம் தந்து ஆறுதல் கூறியவர்கள் இரண்டு பேர். 'இந்து' பத்திரிகையின் உரிமையாளரான கஸ்தூரி சீனிவாசனும், ஏ. ரங்கசாமி ஐயங்காரும் தேனாம்பேட்டை கிராமணியார் தோட்டத்தில் ஆசிரமம் மாதிரி ஒரு வீட்டை அமைத்துக் கொடுத்து சுந்தராம்பாளை அதிலே குடியிருக்கச் செய்தனர். 

"அவர்களிருவரும் எனக்கு இரு கண்கள் என்றால் திரு ஜி. ஏ. நடேசன் என் சிரசுக்கு ஒப்பானவர்"என்று நன்றிப் பெருக்குடன், கண்ணீர்ப் பெருக்கும் கலந்து கூறுகிறார் இவர். 

கணவரைப் பிரிந்த சோகத்துடன் இவர் அஞ்ஞாதவாசம் புரிந்து கொண்டிருந்தபோதுதான், காந்திஜி சென்னைக்கு வந்திருந்தார். திரு சத்தியமூர்த்தியும், கே.பாஷ்யமும் காந்திஜியை இவர் குடியிருந்த ஆசிரமத்துக்கு அழைத்து வந்து இவரை அறிமுகம் செய்து வைத்தனர். சுந்தராம்பாளின் தேசபக்தியைப் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த காந்திஜி, இவரைப் பார்த்து சுதந்திரத்துக்காகப் பாடுபடும்படி கேட்டுக் கொண்டார். 

"கணவரைப் பிரிந்த சோகத்தில் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் வீட்டைவிட்டு வெளியே செல்வதில்லை" என்று காந்திஜியிடம் இவர் கூறியபோது காந்திஜி, "வீட்டிலேயே இருப்பதால் சாவித்திரியைப் போல தங்கள் கணவர் உயிரை மீட்டு வரும் சக்தி தங்களுக்கு வந்துவிடப் போகிறதா? அப்படி இல்லாதவரை தாங்கள் தேசத் தொண்டு செய்வதையே நான் விரும்புகிறேன். தங்களைப் போன்ற உத்தமப் பெண்மணிகள் இந்த நாட்டின் விடுதலைப் போரில் ஈடுபட்டால், நான் என் வாழ்நாளிலேயே இந்த நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கிவிட முடியும்" என்றார். 

K. B. Sundarambal, Mgr
K. B. Sundarambal, Mgr

"அன்று முதல் என்னால் இயன்ற அளவு சேவை செய்து வருகிறேன். தேர்தல் கூட்டங்களுக்கெல்லாம் சென்று பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு முன்னால் பாட்டுப் பாடி காங்கிரசுக்கு வோட்டுக் கேட்பேன். நாடக மேடைகளில் 'காந்தியோ பரம ஏழை சந்நியாசி' போன்ற பாட்டுக்களைப் பாடி மக்களிடையே தேசிய உணர்ச்சியை வளர்க்கப்பாடுபட்டேன். 

"ஓட்டுடையாரெல்லாம் கேட்டிடுங்கள், இந்த நாட்டின் நலத்தை நாடிப் போட்டிடுங்கள்' என்று நான் அந்தக் காலத்தில் பாடிய பாட்டு எனக்கு இப்போதும் ஞாபகம் இருக்கிறது" என்கிறார் இவர். 

திருமதி சுந்தராம்பாள் கச்சேரி மேடை ஏறியதற்குக் காரணமாயிருந்தவர்கள் கஸ்தூரி சீனிவாஸனும், முசிரி சுப்பிரமணிய ஐயரும்தான். இவருடைய முதல் கச்சேரி மயிலாப்பூர் ஆர். ஆர். சபாவில், தியாகராஜ ஸ்வாமி உற்சவத்தில் நடந்தது. 

இவருடைய 'செங்தூர் வேலாண்டி' 'பண்டித மோதிலால் நேரு' என்னும் பன்னிரண்டு 'இஞ்ச்' ரிகார்டுகள் அந்தக் காலத்தில் மிகவும் பிரசித்தமானவை. 'ஞானப்பழம்' ' தனித்திருந்து வாழும் ரிக்கார்டுகள் இரண்டும் சமீப காலத்தில் புகழ் பெற்றவை. 

சுந்தராம்பாள் இதுவரை நடித்துள்ள படங்கள் ஐந்து. அஸந்தாஸ் நந்தனார், ஜெமினி ஒளவையார், மணிமேகலை, பூம்புகார், திருவிளையாடல் ஆகியவை. 'ஒளவையாரைப் போல் எனக்குப் புகழும் பொருளும் தந்த படம் வேறெதுவுமில்லை' என்று பெருமையுடன் கூறுகிறார். 

'குயிலினும் இனிய குரல் வாய்ந்த கொடுமுடி கோகிலம் ', 'தமிழிசைச் செல்வி' என்றெல்லாம் மக்களால் பாராட்டப்படும் இவருக்கு தருமபுரம் மகா சந்நிதானம் வழங்கிய பட்டம் 'ஏழிசை வல்லபி ' என்பதாகும். 

தலைவர் சத்தியமூர்த்தி பெரிய தெருவில் குடியிருந்தபோது சுந்தராம்பாள் ஒரு நாள் அவர் வீட்டுக்கு சாப்பிடப்போயிருந்தார். உள்ளே ஒரே ஒட்டடையாக இருப்பதைக் கண்ட சுந்தராம்பாள், ''என்ன அண்ணா இது, வீட்டை இப்படி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்டார். 

K. B. Sundarambal
K. B. Sundarambal

"உன் அண்ணாவைப் பற்றி நீ என்ன எண்ணிக் கொண்டிருக்கிறாய் ? இந்த வீட்டுக்கு நான் பதினெட்டு மாத வாடகை பாக்கி. நான் செத்துப் போனால் உன் மன்னியும் (சத்தியமூர்த்தியின் மனைவி) மருமாளும் (மகள் லட்சுமி) நடுத்தெருவில் நிற்கும் நிலையில்தான் இருக்கிறார்கள். நான் என் சொந்த வீட்டில் சாக வேண்டும் என்பது என் ஆசை."என்றார். இந்தத் தேசத்துக்காக மாபெரும் தியாகங்களைச்செய்த அந்தத் தலைவரின் வார்த்தைகள் சுந்தராம்பாளின் நெஞ்சத்தை உலுக்கி விட்டன. உடனே மாம்பலத்தில் நாலரை கிரவுண்ட் நிலத்தை வாங்கி சத்தியமூர்த்தியின் பெயருக்கு எழுதி வைத்து விட்டார். திருமதி சுந்தராம்பாள் ஆறு ஆண்டு காலம் எம்.எல்.சி.யாக இருந்திருக்கிறார். 

கலையைப் பற்றி இவருடைய கருத்து : "கலையைக் காப்பாற்றுவதாகப் பல கலைஞர்கள் கூறிக்கொள்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் கலைதான் என்னைக் காப்பாற்றுகிறது."

- விகடன் டீம்

(15.08.1965 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து... )