குழந்தைகளுக்கும் பரவும் குரங்கு அம்மை: பத்திரமாக பார்த்துக்கொள்ள பெற்றோருக்கு நிபுணர்கள் எச்சரிக்கை

பெரியவர்களுக்கு குரங்கு அம்மை, உடனடியாக தீவிர ஆபத்தை ஏற்படுத்தவில்லை; அதே நேரம் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு அப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது; அவர்களுக்கு ஏற்படும் அபாயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

Published:Updated:
சித்தரிப்பு படம்
சித்தரிப்பு படம்
0Comments
Share

உலகை புரட்டிப் போட்ட கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில், அடுத்ததாக குரங்கு அம்மைத் தொற்று மிரட்டத் தொடங்கி இருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய, ஆசிய நாடுகளை அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மையால், இதுவரை 5,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவையும் குரங்கு அம்மை விட்டுவைக்கவில்லை. இதன் முதல் பாதிப்பு, கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் கண்டறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அங்கு மேலும் சிலருக்கு குரங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டுள்ளன. காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, உடல் சோர்வு, உடலில் சிறு கொப்புளங்கள் இதன் அறிகுறிகளாக மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

குரங்கு  அம்மை
குரங்கு அம்மை

குரங்கு அம்மை, இதுவரை பெரும்பாலும் பெரியவர்கள் மத்தியில் தான் பரவி வந்திருக்கிறது. அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான பெரியவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைகளுக்கும் குரங்கு அம்மை கண்டறியப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. கலிஃபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஒரு குழந்தை மற்றும் அமெரிக்காவிற்கு சென்றுள்ள ஒரு குழந்தை என, இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை மருத்துவர்கள் தனிமைப்படுத்தி, தீவிர சிகிச்சை அளித்துக் கண்காணித்து வருகின்றனர்.

குரங்கு அம்மையானது இதுவரை, நெருங்கிய தொடர்பு மூலம், கிட்டத்தட்ட பெரியவர்கள் மத்தியில் பரவிய நிலையில், குழந்தைகளுக்கும் பரவத் தொடங்கி இருப்பது, பெற்றோரை கவலையடையச் செய்திருக்கிறது. குழந்தைகளுக்கான குரங்கு அம்மையின் அறிகுறிகளும் பெரியவர்களைப் போலவே இருக்கும். பெற்றோர் தங்களின் குழந்தைகளை அணைப்பது அல்லது முத்தமிடுவது போன்ற நெருங்கிய தொடர்பு மூலம், குழந்தைகளுக்கும் குரங்கு அம்மை பரவும் அபாயம் இருப்பதாக, நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பெரியவர்களுக்கு குரங்கு அம்மை, உடனடியாக தீவிர ஆபத்தை ஏற்படுத்தவில்லை; அதே நேரம் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு அப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது; அவர்களுக்கு ஏற்படும் அபாயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். எட்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டால் தீவிர ஆபத்து நேரிடலாம் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

டென்னசி, நாஷ்வில்லில் உள்ள வாண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் தொற்றுநோய் நிபுணரான டாக்டர் வில்லியம் ஷாஃப்னர் கூறுகையில்,"அமெரிக்காவில் குழந்தைகளுக்கு இந்த நோய்த்தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பதை ஆராய்வதால், குரங்கு அம்மை பரவக்கூடிய வழிகளைப் பற்றி மேலும் தெளிவு பெற முடியும்” என்கிறார்.

குரங்கு காய்ச்சல் ( மாதிரி படம்)
குரங்கு காய்ச்சல் ( மாதிரி படம்)

இந்த இரண்டு குழந்தைகளுக்கு எவ்வாறு குரங்கு அம்மை பரவியது என்பது பற்றிய பல விவரங்கள் இல்லை என்றாலும், பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் நெருக்கமான தொடர்பு மூலம் வைரஸ் பரவி இருக்கக்கூடும் என்று மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.

குரங்கு அம்மைக்கு என்று அதிகாரபூர்வமாக தடுப்பூசி எதுவும் இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், வைரஸ் தடுப்பு மருந்தான Tecovirimat அல்லது TPOXX போன்றவை, பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்தப்படுகின்றன. அமெரிக்காவில், குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு குழந்தைகளுக்கு தற்போது TPOXX சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவத்துறையினர் தெரிவித்துள்ளனர்.