`உலகிலேயே பணக்கார அரசியல்வாதிகள் ராஜபக்சேக்கள்தான்' - இலங்கை நெருக்கடியை விவரித்த `CCF' கருத்தரங்கு

``இந்திய மக்கள் மோடியை எவ்வளவு மதிக்கிறார்களோ, அதே அளவுக்கு இலங்கை மக்களும் மதிக்கிறார்கள்.'' - செந்தில் தொண்டமான்.

Published:Updated:
இலங்கை நெருக்கடி குறித்த கருத்தரங்கு
இலங்கை நெருக்கடி குறித்த கருத்தரங்கு
0Comments
Share

ஜூலை 25-ம் தேதி அன்று, `சென்னை சிட்டிசன் ஃபோரம்' (CCF) அமைப்பிலிருந்து, இலங்கையின் தற்போதைய நிலை குறித்து விவரிக்க ஒரு கருத்தரங்கம் நடத்தப்பட்டது. சென்னை தி.நகரில் நடந்த இந்தக் கருத்தரங்கில், இலங்கையைச் சேர்ந்த அரசியல் தலைவர் செந்தில் தொண்டமான், இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் ஏ.பி.மதன், இந்தியாவின் மூத்த பத்திரிகை ஆசிரியர்களுள் ஒருவரான பக்வான் சிங் ஆகியோர் பங்கேற்றனர். இலங்கையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி, அதற்கான தீர்வுகள் குறித்து இந்தக் கருத்தரங்கில் பேசப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து வந்திருந்த மூத்த பத்திரிகையாளர் ஏ.பி.மதன், ``2009 ஈழப் போருக்குப் பிறகு பல விஷயங்களிலும் தவறான முடிவுகளை எடுத்தது, நிர்வாகத்தில் பல குளறுபடிகள் செய்தது உள்ளிட்டவைதான் இலங்கையின் இந்த நிலைமைக்குக் காரணம். உள்கட்டமைப்புகளுக்காகக் கடன் வாங்கி, பல ஆயிரம் கோடிகளைச் செலவு செய்தது இலங்கை அரசு. ஆனால், அந்த உள்கட்டமைப்புகளால் மக்களுக்கும் நாட்டுக்கும் எந்தப் பயனும் இல்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், அம்பாந்தோட்டையில் ஒரு துறைமுகத்தைக் கட்டினார் மகிந்த ராஜபக்சே. ஆனால், அந்தத் துறைமுகத்தில் இப்போது வரை எந்தக் கப்பலும் வருவதில்லை. கப்பல் வராத துறைமுகம் உள்ளிட்ட பல தேவையற்ற உள்கட்டமைப்புகளால் நாட்டின் கடன் அதிகரித்தது. இதனால் தனிநபர் கடனும் அதிகரிக்க, நாடு இந்த நிலைமைக்கு வந்துவிட்டது.

ஏ.பி.மதன்
ஏ.பி.மதன்

இலங்கையின் மொத்த ஜி.டி.பி-யில் (உள்நாட்டு உற்பத்தி) 20 சதவிகிதம், தேயிலை ஏற்றுமதி மூலம் கிடைத்துவந்தது. ஆனால் கொரோனாவும், ரஷ்யா - உக்ரைன் யுத்தமும் தேயிலை ஏற்றுமதியில் பாதிப்பை ஏற்படுத்திவிட்டன. ரஷ்யாதான் அதிக அளவில் இலங்கையிடமிருந்து தேயிலையை இறக்குமதி செய்துகொண்டிருந்தது. ஆனால், இப்போது போரைக் காரணம் காட்டி இறக்குமதியை ரஷ்யா நிறுத்திக்கொண்டது. ஆனால், உண்மைக் காரணம் அதுவல்ல. இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, செயற்கை உரங்களைத் தடைசெய்ததால், ரஷ்யாவிலிருந்து யூரியா இறக்குமதி செய்வது தடைப்பட்டது. அதற்கு பதிலடி கொடுக்கவே தேயிலை இறக்குமதியை நிறுத்திக்கொண்டது ரஷ்யா.

ஒவ்வோர் ஆண்டும் சுற்றுலாத்துறை மூலம் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் முதல் இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர் வரை வருவாய் கிடைத்துக்கொண்டிருந்தது. ஆடை ஏற்றுமதி மூலமும் பல நூறு கோடி அமெரிக்க டாலர் கிடைத்துக்கொண்டிருந்தது. கொரோனா பெருந்தொற்றால் இரண்டுமே தடைப்பட்டுவிட்டன. கொரோனா ஊரடங்கில், வீட்டிலிருந்தே பணிபுரிந்ததால், இலங்கை மக்களே ஆடை வாங்கவில்லை என்பதால், ஆடை உற்பத்தித் தொழில் வெகுவாக பாதித்தது.

இப்படி ஒவ்வொரு தொழிலும் பாதிக்க, அந்நிய நாடுகளிலிருந்து கிடைக்கும் வருவாய்கள் தடைப்பட்டன. இதனால், அந்நியச் செலாவணி கையிருப்புகள் காலியாக, நாடு பொருளாதார நெருக்கடியில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. இலங்கை மக்களின் புரட்சியில் ராஜபக்சேக்களின் ஆட்சி கவிழ்ந்துவிட்டது. ஆட்சி மாறினாலும், ராஜபக்சேக்களின் ஆட்கள்தான் நாடாளுமன்றத்தில் உட்கார்ந்துகொண்டிருக்கிறார்கள். இன்று இலங்கை மக்கள் ஓரளவுக்கு நன்றாக இருக்கிறார்கள் என்றால், அதற்கு இந்திய அரசு செய்த உதவிகள்தான் காரணம். சிங்கள மக்களுக்கு எப்போதுமே இந்தியாமீது கோபமிருக்கும். ஆனால், தற்போது அது மாறிவிட்டது. எங்கள் நாட்டுக்கு உதவி செய்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றவர் `இதிலிருந்து இலங்கை மீள்வதற்கும் இந்தியாதான் உதவ வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார்.

செந்தில் தொண்டமான்
செந்தில் தொண்டமான்

``இந்த நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டுவருவதற்கு இந்தியாவால் மட்டுமே உதவி செய்ய முடியும். இலங்கையின் தமிழ்ப்பகுதியான யாழ்ப்பாணத்தில் தொழிற்சாலைகளை இந்திய நிறுவனங்கள் தொடங்க வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து பெங்களூரு சென்று பணிபுரிபவர்கள் பலர். ஆனால், அதைவிடக் குறைந்த தூரத்தில்தான் யாழ்ப்பாணம் இருக்கிறது. அங்கு வந்து தொழிற்சாலைகளை நிறுவுங்கள். குறிப்பாக இந்தியாவிலுள்ள ஐடி நிறுவனங்கள், இலங்கையிலும் கிளைகளை உருவாக்க வேண்டும். அங்கு சரியான ஐடி நிறுவனங்கள் இல்லாததால், நன்கு படித்த இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வேலை பார்க்கிறார்கள். அதனால் நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லாமல் போய்விடுகிறது. இலங்கைக்கு இந்த வகையில் உதவுவதால், இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடாது. ஆனால், இலங்கைக்கு அது பேருதவியாக இருக்கும்'' என்றார் ஏ.பி.மதன்.

இந்தக் கூட்டத்தில், இலங்கையிலிருந்து காணொளி வாயிலாகக் கலந்துகொண்டு பேசிய செந்தில் தொண்டமான், ``இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்கான மூல காரணங்களுள் ஒன்றாக இருப்பது செயற்கை உரங்களுக்கான தடை. அந்தத் தடையை கோத்தபய ராஜபக்சே கொண்டுவந்தபோது முதல் ஆளாக எதிர்த்தது நான்தான். அதைத் தொடர்ந்து ஆளும் கூட்டணியிலிருந்து முதன்முதலாக வெளியேறியது எங்கள் `இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்' கட்சிதான். இன்றைக்குப் பல வகையில் எங்கள் நாட்டுக்கு உதவிக்கொண்டிருக்கும் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவில், பிரதமர் மோடியை எந்த அளவுக்கு மக்கள் மதிக்கிறார்களோ, அதே அளவுக்கு இலங்கை மக்களும் மதிக்கிறார்கள். அதேபோல இலங்கைக்குத் தொடர்ந்து உதவி செய்யும் தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்'' என்றார்.

பக்வான் சிங்
பக்வான் சிங்

மூத்த பத்திரிகை ஆசிரியர் பக்வான் சிங், முன்னாள் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவைப் பேட்டி எடுத்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். ``போர் முடிந்த பிறகு, 2010 ஜனவரியில் அப்போதைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை பேட்டி எடுத்தேன். அந்தப் பேட்டியில், `சாலைகள், துறைமுகங்கள், வணிகக் கட்டடங்கள் என எல்லாமே சீனாவின் கட்டுமானங்களாகவே இருக்கின்றனவே?' என்று கேட்டேன். அதற்கு மகிந்த, `இந்த அனைத்துத் திட்டங்களுக்குமே நான் முதலில் அணுகியது இந்தியாவைத்தான். அவர்கள் மறுத்துவிட்டதால்தான் சீனாவுக்கு வழங்கினேன்' என்றார். இது குறித்து இந்திய அதிகாரி ஒருவரிடம் விசாரித்தேன். `அவர் பொய் சொல்கிறார். 100 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள திட்டத்துக்கு, 10 பில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை, டேபிளுக்கு அடியில் வாங்கிக்கொள்வார் மகிந்த. கையூட்டு வழங்க இந்தியா மறுத்தது. சீனா அதைச் செய்யத் தயாராக இருந்ததால், அனைத்துத் திட்டங்களும் அவர்கள் வசம் சென்றுவிட்டன' என்றார். இப்படி டேபிளுக்கு அடியில் வாங்கியதும், சீனாவின் கடன் வலையில் சிக்கியதுமே இலங்கையை இந்த நிலைக்குத் தள்ளிவிட்டது. இன்று, உலகிலேயே பணக்கார அரசியல்வாதிகள் என்றால் அது ராஜபக்சேக்கள்தான். எல்லா நாட்டிலும் அவர்களுக்குச் சொத்துகள் இருக்கின்றன'' என்று கூறினார்.