பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் ஆண்மை நீக்கம்... தாய்லாந்தில் மசோதா நிறைவேற்றம்!

மனநல நிபுணர் மற்றும் மருத்துவ நிபுணரின் ஒப்புதலுடனும், சம்பந்தப்பட்ட பாலியல் குற்றவாளியின் சம்மதத்துடன் மட்டுமே, ஆண்மை நீக்கம் செய்யப் பரிந்துரைக்க முடியும். இவ்வாறு ஆண்மை நீக்கம் செய்ய ஒப்புக்கொள்ளும் குற்றவாளிகளுக்கு, சிறைத்தண்டனை காலத்தைக் குறைக்கவும் மசோதா வழிவகை செய்கிறது.

Published:Updated:
Sexual Harassment  (Representational Image)
Sexual Harassment (Representational Image)
0Comments
Share

தாய்லாந்து நாட்டில், பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு கைதாகி சிறையில் இருந்தவர்கள், விடுதலைக்குப் பிறகு மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.

2013-ம் ஆண்டிலிருந்து 2020-ம் ஆண்டு வரை சிறைகளில் இருந்து விடுதலையான 16,000 பாலியல் குற்றவாளிகளில் 4,848 பேர், மீண்டும் அத்தகைய செயல்களில் ஈடுபட்டதாக, அந்த நாட்டு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Sexual harassment
Sexual harassment

பாலியல் குற்றங்களில் மீண்டும் மீண்டும் ஈடுபடும் குற்றவாளிகளைத் தடுக்கும் வகையில், ரசாயன ஊசி மூலம் ஆண்மை நீக்கம் செய்யும் மசோதாவை, கடந்த மார்ச் மாதம் கீழவையில் தாய்லாந்து அரசு கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து, தற்போது செனட் சபையிலும் மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேறியிருக்கிறது.

இந்த மசோதாவின்படி, மனநல நிபுணர் மற்றும் மருத்துவ நிபுணரின் ஒப்புதலுடனும், சம்பந்தப்பட்ட பாலியல் குற்றவாளியின் சம்மதத்துடனும் மட்டுமே ஆண்மை நீக்கம் செய்யப் பரிந்துரைக்க முடியும். இவ்வாறு ஆண்மை நீக்கம் செய்ய ஒப்புக்கொள்ளும் குற்றவாளிகளுக்கு, சிறைத்தண்டனை காலத்தைக் குறைக்கவும் மசோதா வழிவகை செய்கிறது.

ஏற்கெனவே தென்கொரியா, போலந்து, பாகிஸ்தான், அமெரிக்காவின் சில மாகாணங்களில், ஆண்மை நீக்க தண்டனை முறை அமலில் உள்ளது.

சிறை
சிறை

அதே நேரம், பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்வது என்பது, மனித உரிமை மீறல் ஆகும் என்று இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட நபர், உடலுறவுகொள்ள முடியாத சூழலில், அவரது மனதில் வன்முறை எண்ணங்கள் தலைதூக்கலாம்; பெண்களை முற்றிலும் வெறுக்கும் நபராக அவர் மாறக்கூடும்; கோபம் அதிகரித்த நபராக மாறி, வேறுவகையில் பெண்களுக்கு எதிரான செயல்களில் அவர் ஈடுபட வாய்ப்புள்ளதாக, நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த தண்டனைமுறையை வரவேற்கும் தரப்பினரோ, சமூகத்தில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், அச்செயலில் ஈடுபடக்கூடாது என்ற எண்ணத்தை வலியுறுத்தவும், ஆண்மை நீக்கம் போன்ற கடுமையான தண்டனைகள் தேவை என்கின்றனர்.