`அக்னிபத்' ஆள்சேர்ப்பும்... சாதிச் சர்ச்சையும் - பின்னணி என்ன?!

அக்னிபத் திட்டத்தின்கீழ் விண்ணப்பித்தவர்களிடம், சாதி, மதச் சான்றிதழ்கள் கேட்கப்பட்டிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது. இதற்கு இந்திய ராணுவத்தின் பதில் என்ன?

Published:Updated:
இந்திய ராணுவம்
இந்திய ராணுவம்
0Comments
Share

மத்திய அரசு அக்னிபத் திட்டத்தை அறிவித்ததிலிருந்தே பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. வட மாநிலங்களில் இந்தத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இளைஞர்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆனால், அதையெல்லாம் மீறி இந்தத் திட்டத்துக்கான ஆள்சேர்ப்பை சமீபத்தில் தொடங்கியது இந்திய ராணுவம். இந்த நிலையில், தற்போது அக்னிபத் திட்டம் தொடர்பாக புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியிருக்கிறது. `அக்னிபத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்களிடம் சாதி, மதச் சான்றிதழ்கள் கேட்கப்படுகின்றன' என்பதுதான் அந்தப் புதிய சர்ச்சை.

அக்னிபத் திட்டத்தின்கீழ் ராணுவத்தில் சேர லட்சக்கணக்கான இளைஞர்கள் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்த இளைஞர்களிடம் சாதி, மதச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தது இந்திய ராணுவம். இதையடுத்து, ஜூலை 19-ம் தேதி அன்று, ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி சஞ்சய் சிங், ``இந்திய வரலாற்றில் முதன்முறையாக, ராணுவ வீரர்களுக்கான நேர்காணலில், சாதி பற்றிய விவரங்கள் கேட்கப்பட்டிருக்கின்றன. தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடி மக்கள் ஆகியோரை ராணுவத்துக்குத் தகுதியானவர்களாகப் பிரதமர் மோடி கருதவில்லையா... அக்னி வீரர்களை உருவாக்க நினைக்கிறீர்களா... இல்லை சாதி வீரர்களை உருவாக்க நினைக்கிறீர்களா மோடி அவர்களே'' என்று கேள்வியெழுப்பியிருந்தார். இவரைத் தவிர ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் உபேந்திர குஷ்வாஹா (Upendra Kushwaha), பீகார் எதிர்க்கட்சித் தலைவரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் இந்த விவகாரத்தில் கேள்வியெழுப்பியிருந்தனர்.

அக்னிபத் போராட்டம்
அக்னிபத் போராட்டம்

சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது. பா.ஜ.க-வுக்கு எதிராகப் பல தரப்பினரும் கேள்வியெழுப்பினர். அக்னிபத் திட்டத்தைக் கடுமையாக விமர்சிக்கும் சிலர், ``அக்னிபத் திட்டமே ஆபத்தானது எனச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால், அந்தத் திட்டத்தின்கீழ் விண்ணப்பித்தவர்களிடம் சாதி, மதச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. இது கண்டனத்துக்குரியது'' எனக் கொந்தளித்தனர். மேலும் சில சமூக ஆர்வலர்கள், ``இந்திய ராணுவத்தைப் பொறுத்தவரை, மதரீதியிலோ, சாதிரீதியிலோ எந்தவோர் இட ஒதுக்கீடும் வழங்கப்படுவதில்லை. முழுக்க முழுக்க மெரிட் அடிப்படையில்தான் வீரர்கள் தேர்வுசெய்யப்படுகிறார்கள். அப்படியிருக்கையில் அவர்களிடம் சாதி, மதச் சான்றிதழ்கள் கேட்கப்படுவது ஏன்?'' என்று கேள்வியெழுப்பியிருந்தனர்.

இந்த விவகாரம் பெரிதான நிலையில், இது தொடர்பாக இந்திய ராணுவம் விளக்கமளித்திருக்கிறது. ``ராணுவத்தில் சேர விரும்புபவர்களிடம் சாதிச் சான்றிதழ் பெறும் முறை எப்போதுமே பின்பற்றப்படுகிறது. தேவைப்பட்டால் மதச் சான்றிதழ்கூட பெறப்படும் முறையும் ராணுவத்தில் பல காலமாகப் பின்பற்றப்படுகிறது. அக்னிபத் வீரர்களுக்கான விண்ணப்பத்தில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. பழைய முறையைத்தான் பின்பற்றுகிறோம். பயிற்சியின்போதோ, போர் நடைபெறும்போதோ வீரர்கள் உயிரிழந்தால், அவர்களின் மத வழக்கப்படி இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக மதச் சான்றிதழ் பெறப்படுகிறது'' என்று கூறியிருக்கிறது இந்திய ராணுவம்.

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், ``இந்தத் தகவல் ஒரு வதந்தி. சுதந்திரத்துக்கு முன்பிருந்தே ராணுவ ஆள்சேர்ப்புக்கு இருந்த நடைமுறைதான் தொடர்ந்து பின்பற்றப்பட்டுவருகிறது. அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை'' என்று விளக்கமளித்திருக்கிறார்.