சேலம்: பெரியார் பல்கலைக்கழகத் தேர்வில் சாதிரீதியான கேள்வியால் வெடித்த சர்ச்சை!

சேலம் பெரியார் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தேர்வில் வினாத்தாளில் சாதிரீதியான கேள்வி கேட்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
சேலம்: பெரியார் பல்கலைக்கழகத் தேர்வில் சர்ச்சை
சேலம்: பெரியார் பல்கலைக்கழகத் தேர்வில் சர்ச்சை
0Comments
Share

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வில், சாதிரீதியான கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. நேற்று பெரியார் பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய கல்லூரிகளில் வரலாற்றுத்துறை இளங்கலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் இரண்டாம் தேர்வு நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்வில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில் 11-வது கேள்வியாக, `தமிழ்நாட்டிலுள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது?’ என்று மாணவர்கள் மத்தியில் சாதிய உணர்வை ஏற்படுத்தும்விதமாகக் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. இதை மாணவர் ஒருவர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்துப் பதிவுசெய்திருக்கிறார். இந்தச் செய்தி சமூக வலைளங்களில் வைரலாகப் பரவத் தொடங்கியிருக்கிறது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகம்
சேலம் பெரியார் பல்கலைக்கழகம்

இது தொடர்பாக கல்லூரிப் பேராசிரியர்கள் சிலரிடம் பேசினோம். ``சமீபகாலமாக பல்கலைக்கழகத்தில் சாதியப் பாகுப்பாடு என்பது தலைவிரித்தாடுகிறது. சமீபத்தில்தான் சமூகநீதி ஆய்வுக்குழு பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் தற்போது இது மாதிரியான செயலில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய கல்லூரிகளுக்ப்கு பல்கலைக்கழகம்தான் வினாத்தாளைத் தயார் செய்து கொடுக்க வேண்டும். ஆனால் இதை யாரும் பின்பற்றுவதில்லை. வெளியிலுள்ள ஆசியர்களைவைத்து வினாத்தாள் தயார் செய்கின்றனர். மேலும் வினாத்தாளைச் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு தேவையானவற்றைப் பல்கலைக்கழகம்தான் பிரின்ட் செய்து தர வேண்டும். ஆனால் இதில் எதையும் பல்கலைக்கழகம் பின்பற்றுவதில்லை” என்றனர்.

மேலும் பல்கலைக்கழகத் தேர்வு விதிமுறைகள் குறித்து பெரியார் பல்கலைக்கழகப் பொறுப்பு பதிவாளர் கோபி பேசியபோது, “வினாத்தாளில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்கள் குறித்து உரிய விசாரணை செய்துவருகிறோம். சம்பந்தப்பட்ட கேள்வியைத் தயார் செய்த ஆசிரியர் யார் என்று கண்டறிந்து, அவர்மீது துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கக்கூடிய கல்லூரிகளில் தேர்வு நடத்துவதுதான் பல்கலைக்கழகத்தின் வேலை. வினாத்தாள் அனைத்தையும் அதற்கென அமைக்கப்பட்ட தனிக்குழுவினர், தலைவர் ஆகியோர்தான் தயார் செய்வார்கள்” என்றார்.