தீபாவளி: அகலமாகும் சாலை, நோ நெரிசல், இரைச்சல்; சென்னையின் அந்த அமைதி முகம்! #Deepawali2022

தீபாவளி தினத்தின் முதல் நாளோ, அடுத்த நாளோ வாகனத்தில் செல்லும்போது ஏற்படும் சுகமே தனி. தினம் தினம் கடக்கும் பாதையின் அகலமும் நீளமும் ஆச்சர்யப்படுத்தும். வழக்கமான பாதையில் குறிப்பிட்ட இடத்தை அடையும்போது, இந்த தொலைவைத்தான் தினமும் அதிக நேரத்துக்குக் கடந்து வந்திருக்கிறோமா என்று...

Published:Updated:
மெரினா கடற்கரை
மெரினா கடற்கரை
0Comments
Share

சென்னையில் பிறந்து, வாழ்க்கைச் சக்கரம் சென்னையிலேயே சுழன்றுகொண்டிருப்பதால், ஆண்டுக்கான அரசு விடுமுறை அறிவிப்பு வந்ததும், எந்த மாதத்தில், எந்தக் கிழமையில் தீபாவளி வருகிறது என்று பார்ப்பதோடு சரி. பண்டிகைக்கு ஊருக்குச் செல்லும் அவசியங்களோ, அனுபவங்களோ எதுவும் இல்லாத வாழ்வு.

அலுவலகத்தில், எத்தனை நாள்களுக்கு லீவு எடுக்கலாம், தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு எப்போது தொடங்கும் என்கிற அவஸ்தை கிடையாது. ஆனால், ஒரு மகிழ்ச்சி மட்டும் உள்ளத்தில் குடிகொண்டுவிடும். அது... தீபாவளி அன்று தரிசனம் கொடுக்கும் அமைதியான சென்னை.

தீபாவளிக்கு, தொழில், வேலை காரணமாகக் குடிகொண்ட ஊரிலிருந்து சொந்த ஊருக்குச் செல்லும் மனிதர்களின் அனுபவங்களே பெரும்பாலும் பகிரப்படும். ஆனால், மதுரை, கோவை, சேலம், கன்னியாகுமரி எனத் தமிழகத்தையே தீபாவளிக்கு தத்தமது ஊர்களுக்கு அனுப்பி வைத்துவிட்டு பெருமூச்சுவிடும் சென்னையின், சென்னைவாசியின் அனுபவம் இது!

சென்னையில், தீபாவளி அன்றுகூட தொடர் பட்டாசு சப்தம் இருக்காது. குளித்து முடித்து வெளியே வந்து வீதியைப் பார்த்தால் துடைத்துவிட்டாற்போல் இருக்கும். தூரத்தில் எழும்பும் வாகன ஒலி சட்டென்று கடந்து போகும்.

சென்னை
சென்னை

அப்படி வாகனத்தில் செல்பவர்களும் சென்னையில் இருக்கும் தன் உறவினர் வீட்டுக்குச் செல்பவர்களாகத்தான் இருப்பார்கள். தெரு நாய்கள் எந்தவித பயமும் இன்றி சாலையைக் கடக்கும். எதிர்முனையில் இருக்கும் என்னைப் பார்த்து சிநேகமாய் வாலாட்டும்.

தீபாவளி தினத்தின் முதல் நாளோ, அடுத்த நாளோ வாகனத்தில் செல்லும்போது ஏற்படும் சுகமே தனி. தினம் தினம் கடக்கும் பாதையின் அகலமும் நீளமும் ஆச்சர்யப்படுத்தும். வழக்கமான பாதையில் குறிப்பிட்ட இடத்தை அடையும்போது, இந்தத் தொலைவைத்தான் தினமும், அதிக நேரத்துக்குக் கடந்து வந்துகொண்டிருக்கிறோமா என்று நினைக்க வைக்கும்.

சாலையில் கடைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக திறந்திருக்க... அதிலும் கூட்டமிருக்காது. மதியத்துக்குப் பிறகு அதிலும் சில கடைகள் சாத்தப்பட்டுவிடும். மாலையில் வீட்டின் அருகே இருக்கும் சில வீடுகளில் இருந்து வரும் தொலைக்காட்சி ஒலி காதில் வந்தடையும். மாலை மங்கியதும் திரும்பும் இடத்தில் எல்லாம் வானத்தில் வண்ண ஜாலங்கள் தெரியும். அதுவும் எட்டு மணிக்குப் பிறகு அரிது.

தீபாவளி: அகலமாகும் சாலை, நோ நெரிசல், இரைச்சல்; சென்னையின் அந்த அமைதி முகம்! #Deepawali2022
representational image

வீட்டுக்குள் மகனும் மருமகளும் ஆளுக்கொரு செல்போனை தடவிக்கொண்டிருக்க... மனைவி தொலைக்காட்சியில் சிறப்பு திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருப்பார். இரவு உணவுக்கு காலையில் மீதமிருக்கும் இட்லி நிச்சயம்.

படுக்கப்போகும்போது ஓர் ஏக்கம் எட்டிப்பார்க்கும். அது... இது போன்ற அமைதியான சென்னையைப் பார்க்க இன்னும் ஓராண்டு காத்திருக்க வேண்டும் என்ற ஏக்கம்!