மும்பை சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்பாளரைத் திரும்பப் பெற்ற பாஜக - என்ன காரணம் தெரியுமா?!

மும்பை சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக தனது வேட்பாளரைத் திரும்பப் பெற்றுக்கொண்டிருக்கிறது.

Published:Updated:
உத்தவ் தாக்கரேயுடன் ருதுஜா
உத்தவ் தாக்கரேயுடன் ருதுஜா
0Comments
Share

மும்பையில் அந்தேரி கிழக்கு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ ரமேஷ் காலமானதால் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு வேட்பு மனுத்தாக்கல் ஏற்கெனவே முடிந்திருந்தது. இன்று வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள். வரும் 3-ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. சிவசேனா சார்பாக ரமேஷ் மனைவி ருதுஜாவும், பாஜக சார்பாக முர்ஜி பட்டேலும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருந்தனர். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ருதுஜாவை வேட்பாளராக நிறுத்தவிடாமல் தடுக்க பாஜக-வும், ஏக்நாத் ஷிண்டேயும் முயன்றுபார்த்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால் அந்த முயற்சி பலனலிக்கவில்லை.

மும்பை சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்பாளரைத் திரும்பப் பெற்ற பாஜக - என்ன காரணம் தெரியுமா?!

இந்த நிலையில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்குக் கடிதம் மூலம் பாஜக வேட்பாளரைத் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். அதோடு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரை ராஜ் தாக்கரே நேரிலும் சந்தித்து இது தொடர்பாகப் பேசினார். இது தவிர தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் பாஜக தனது வேட்பாளரைத் திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

அதோடு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் சிலரும் இதே கோரிக்கையை விடுத்திருந்தனர். இது குறித்து கருத்து தெரிவித்திருந்த தேவேந்திர பட்னாவிஸ் `இந்த விவகாரத்தில் தான் தனித்து முடிவு எடுக்க முடியாது என்றும், கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்’ என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று பாஜக தனது வேட்பாளரைத் திரும்ப பெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்தத் தேர்தலில் ஏற்கெனவே ருதுஜாவுக்கு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதோடு இந்தத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்துவிட்டால் அது வரும் மாநகராட்சித் தேர்தலில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று உணர்ந்தே பாஜக தனது வேட்பாளரைத் திரும்பப் பெற்றிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதோடு இந்தத் தேர்தல் மூலம் உத்தவ் தாக்கரே கட்சியின் சின்னம் மக்கள் மத்தியில் பிரபலமாகிவிடும் என்ற அச்சம் காரணமாகவும் பாஜக இந்த முடிவை எடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. பாஜக தனது வேட்பாளரைத் திரும்பப் பெற்றிருப்பதால் ருதுஜாவின் வெற்றி எளிதாகியிருக்கிறது!