``யாருடனும் கூட்டணிவைத்து வளர வேண்டும் என்ற அவசியம் பாஜக-வுக்குக் கிடையாது!" - அண்ணாமலை

``யாருடனும் கூட்டணிவைத்து வளர வேண்டும் என்ற அவசியம் பா.ஜ.க-வுக்குக் கிடையாது. நாங்களாக தனித்தன்மையுடன் வளர்ந்து வந்துவிடுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.'' - அண்ணாமலை

Published:Updated:
அண்ணாமலை
அண்ணாமலை
0Comments
Share

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``தி.மு.க-வின் பேச்சும் செயல்பாடும் பாரதிய ஜனதா கட்சிக்கு நேர் எதிராக இருக்கின்றன. மாநிலத்துக்கு சுயாட்சி வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் இவையெல்லாம் பா.ஜ.க-வின் டி.என்.ஏ-வுக்கு எதிரானது. எந்தக் காலகட்டத்திலும் இப்படிப் பேசுகின்ற தி.மு.க-வோடு கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதுதான் பா.ஜ.க மாநிலத் தலைவராக என்னுடைய கருத்து.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இதைத்தான் கட்சியின் தேசிய தலைமையும் கூறப்போகிறது. ஒரு பிரிவினை பேசக்கூடிய சக்தியோடு, எப்படி பா.ஜ.க இணைந்திருக்க முடியும்... தி.மு.க-வினுடைய கொள்கை பா.ஜ.க கட்சியின் டி.என்.ஏ-வுக்கு எதிரானது. யாருடனும் கூட்டணிவைத்து வளர வேண்டும் என்ற அவசியம் பா.ஜ.க-வுக்குக் கிடையாது. நாங்களாக தனித்தன்மையுடன் வளர்ந்து வந்துவிடுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு இலவசமாக ஓர் இந்திய அரசியலமைப்பு புத்தகத்தை அனுப்பிவைக்கிறேன். அரசியலமைப்புச் சட்டத்தை திறந்து அவர் பொதுப் பட்டியலைப் படிக்க வேண்டும். அவர் அரசியலமைப்புச் சட்டம் குறித்து படித்திருக்கிறாரா என்பது சந்தேகம்தான். பொதுப் பட்டியலில் கல்வி எங்கு இருக்கிறது என்பதை அவர் பார்க்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சிதான் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை பொதுப்பட்டியலுக்குக் கொண்டுவந்தது. கல்வி பொதுப்பட்டியலில் இருக்கும்போது அது குறித்துப் பேசுவதற்கு மாநில, மத்திய அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது.

அண்ணாமலை
அண்ணாமலை

ஒரே ஒரு ராஜ்ய சபா எம்.பி-க்காக அந்தக் கட்சியை அறிவாலய வாசலில் அடமானம் வைத்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி பல்வேறு நபர்கள் உயிர் கொடுத்து வளர்த்த கட்சி.

தற்போது கல்வி பொதுப்பட்டியலில்தான் இருக்கிறது. காங்கிரஸ்தான் எமர்ஜென்சி காலத்தில் கல்வியைப் பொதுப்பட்டியலுக்குக் கொண்டுவந்தது என்பது புரியாமல் பேசுகிறார். கே.எஸ்.அழகிரி அரசியலுக்கு ஃபிட் ஆக (fit) இருக்கிறாரா என அவருடைய மனதையும், இதயத்தையும், மூளையையும் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்'' என்றார்.