"கிறிஸ்தவ அமைச்சர் கோயிலுக்கு வரக் கூடாது" - பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி ஆவேசம்

"குங்குமம், திருநீறு பூசாதவர்களைக் கோயில்களில் ஏன் வடம் இழுக்க வைக்கிறார்கள்... இந்துக்களில் யாரும் தகுதி படைத்தவர்கள் இல்லையா /" எனக் கேட்கிறார் பா.ஜ.க எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி.

Published:Updated:
பா.ஜ.க எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி
பா.ஜ.க எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி
0Comments
Share

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில் நிகழ்ச்சிகளில் மாற்று மதத்தைச் சேர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜைத் தலைமை தாங்க அழைக்கக் கூடாது என பா.ஜ.க போராடிவருகிறது. அமைச்சர் மனோ தங்கராஜ் குமாரகோவிலில் தேர் வடம்பிடிக்கச் சென்றபோதும், மண்டைக்காட்டில் திருவிளக்கு பூஜையை தொடங்கிவைக்கச் சென்றபோதும் நேரடியாகச் சென்று போராடியது பா.ஜ.க. போராட்டத்தில் முன்னிலை வகிக்கும் பா.ஜ.க எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தியிடம் இது பற்றிப் பேசினோம்.

எம்.ஆர். காந்தி கூறுகையில், "இந்து அல்லாத, இந்து தெய்வங்களை வணங்காத, இந்து ஆலயங்களுக்குச் செல்லாத, இந்து மத கலாசாரத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இந்து ஆலய நிகழ்ச்சிகளில் தலைமை வகிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தி.மு.க தலைமை தங்கள் கட்சியில் இந்துக்கள் 80 சதவிகிதம் இருக்கிறார்கள் எனக் கூறியிருந்தது. அமைச்சரவையிலும் அப்படித்தான் இருப்பார்கள். இந்து அமைச்சர்களை தேர் வடம்பிடிக்க அனுப்பினால் நாங்கள் வரவேற்போம். குமாரகோவிலில்கூட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை வரவேற்றோம். குங்குமம், திருநீறு பூசாதவர்களை கோயில்களில் ஏன் வடம் இழுக்க வைக்கிறார்கள்?

இந்துக்களில் யாரும் தகுதிபடைத்தவர்கள் இல்லையா... தி.மு.க இந்துக்களுக்கு எதிரானது இல்லை என நிலைபடுத்திக்கொள்ள இந்து ஆலையங்களுக்கு இந்து அமைச்சர்கள் பங்கெடுக்கவைக்க வேண்டும். இந்து அல்லாதவர்கள் இந்து வழிபாட்டு முறைகளை நம்பாதவர்கள், இந்துக்களின் விழாக்களில் முன்னிலைப்படுத்தக் கூடாது. இந்துக் கோயில் நிகழ்ச்சிகளில் தலைமை தாங்க அவர்கள் வந்துவிட்டு, நாங்கள் மதக் கலவரத்தைத் தூண்டுவதாகச் சொல்கிறார்கள். ஆகம விதிகளைக் காப்பாற்ற நாங்கள் போராடுவது தவறா?

தேர் வடம்பிடித்து இழுக்கும் அமைச்சர் மனோ தங்கராஜ்,
தேர் வடம்பிடித்து இழுக்கும் அமைச்சர் மனோ தங்கராஜ்,

இந்துக்களின் உரிமைகளுக்கு பாதிப்பு வரும்போது நாங்கள்தான் பேச வேண்டும். கோயில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள எதிர்ப்பு வந்த பிறகாவது அமைச்சர் வராமல் இருந்திருக்க வேண்டும். அது பெருந்தன்மையைக் காட்டியிருக்கும். கிறிஸ்தவ அமைச்சர் வரக் கூடாது என பக்தர்கள் எதிர்த்ததால்தான் நாங்கள் அவர்களுக்குத் துணையாகப் போராடப் போனோம். இது பா.ஜ.க-வின் திட்டம் இல்லை, பக்தர்களின் முடிவு. கோயில் நிகழ்ச்சிகளில் சாதாரணமாகக் கலந்துகொள்வது வேறு, தலைமை தாங்கி தொடக்கிவைப்பது வேறு. தலைமை தாங்கத்தான் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இனி இது போன்ற பிரச்னை வராமலிருக்க அரசு நடவடிக்கை எடுத்து இந்து அமைச்சர்களை அனுப்ப வேண்டும். இந்த நிலை தொடர்ந்தால் கோயில்கள் இந்துக்களுக்குச் சொந்தமானது அல்ல என்ற மனநிலை ஏற்பட்டுவிடும்.

கோயில்களுக்கு கும்பாபிஷேகம் உள்ளிட்டவற்றுக்கு நிதி ஒதுக்குவது அறநிலையத்துறைதானே தவிர அரசு அல்ல. மதுரை ஆதீனம், கோயில் உண்டியல்களில் காசு போட வேண்டாம் என்று கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது. கோயில் உண்டியலில் பணம் இருந்தால்தான் ஆலயத்தின் வளர்ச்சி வரும். ஆலயத்துக்கு வருமானம் இல்லாமல் இருந்தால் எப்படி வளரும்... ஆதீனத்தின் பார்வை வேறு; என் பார்வை வேறு. ஆலய உண்டியலில் நிறைய பணம் போடணும் என்ற மனப்பான்மை நமக்கு வரணும். மக்களுக்குக் கல்விக்கூடங்கள் போன்றவை அமைத்து மக்களுக்கு சேவை செய்யும் அமைப்பாக அறநிலையத்துறை மாறணும்.

எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ
எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ

இந்து அறநிலையத்துறை இந்துக்களுக்குச் சொந்தமானது. இந்துக்களின் ஆன்மிகம் சார்ந்து செயல்படும் கோயில்களில் இந்துக்கள்தான் பங்கெடுக்க வேண்டும். இந்துக்கள்தான் அதன் வளர்ச்சி பற்றிப் பேச வேண்டும். எல்லோரும் கலந்துகொள்ளலாம் என்றால் இந்து அறநிலையத்துறை தேவை இல்லையே... இந்துக்களின் உரிமையை விட்டுக்கொடுப்பது முறை அல்ல. அடுத்தவர் வழிபாட்டு முறையில் தலையிடுவது சரியில்லை. சட்டசபையில் இது சம்பந்தமாக நான் குரல் கொடுப்பேன். நாங்கள் யாரையும் எதிர்க்கவில்லை, என் கோயிலையும், என் பண்பாட்டையும் பாதுகாக்கத்தானே போராடுகிறேன்... வேறு மத வழிபாட்டுதலங்களுக்கு நாங்கள் வர மாட்டோம். மக்கள் விரும்பாத இடத்துக்கு அவர்கள் ஏன் வரவேண்டும்... 1982-ல் நடந்ததுபோல கலவரம் வர வேண்டும் என நினைப்பவர்கள்தான், கலவரம் என பயமுறுத்துகிறாகள். என் சாமியைப் பாதுகாப்பதை மதவெறி என்று சொல்ல முடியுமா?

தி.மு.க அரசு இந்து விவகாரங்களில் அதிகமாகத் தலையிடுகிறது. இந்துக்களின் பாரம்பர்யத்தை, நடைமுறைகளை தடை செய்ய சில முயற்சிகள் செய்யுறாங்க. என்னுடைய மதத்துக்கு பாதிப்பு வரும் சமயத்தில் நான்தானே குரல் கொடுக்கணும். இனி அறநிலையத்துறை அதிகாரிகள் அழைத்தாலும் இந்து அல்லாத அமைச்சர்கள் கோயில் நிகழ்ச்சிகளில் வராமல் இருப்பது நல்லது" என்றார்.