``அதிமுக உள் விவகாரங்களில் தலையிட பாஜக-வுக்கு எல்லா உரிமையும் உண்டு!” - வைத்திலிங்கம் ஓப்பன் டாக்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், தொடர் சரிவில் இருந்த பன்னீரின் தரப்புக்கு ஒரு பிடிமானம் கிடைத்திருக்கிறது. பன்னீரின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து அவருக்கு உறுதுணையாக இருக்கும் வைத்திலிங்கத்திடம் சில கேள்விகளை முன்வைத்தேன்...

Published:Updated:
வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்
0Comments
Share

``பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தக் கூடாது என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

``பொதுக்குழு தொடர்பான தீர்ப்பு சாதகமாக வராது என்று அவர்களுக்கு பயம் வந்துவிட்டது. அதனால்தான் தீர்ப்பு வரும்வரை, பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த மாட்டோம் என்று எடப்பாடி தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. இது எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி. இனி அவர்களுக்குத் தொடர் தோல்விதான்."

``ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், நீங்கள் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?"

``பொதுக்குழு தொடர்பாக தனி நீதிபதி, அமர்வு என இரு வேறு தீர்ப்புகள் வந்துள்ளன. அமர்வு நீதிபதி பொதுக்குழு செல்லும் என்று கூறினாரே தவிர, ஒருங்கிணைப்பாளர் பதவி செல்லாது என்று அறிவிக்கவில்லை. அது தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்துக்குச் செல்ல வழிகாட்டியிருக்கிறார்கள். அதேபோல, மேல்முறையீட்டு வழக்கில் கட்சியின் சட்ட திட்டங்களைத்தான் உச்ச நீதிமன்றம் பகுப்பாய்வு செய்யும். கட்சியின் விதிதான் முக்கியமே தவிர, மெஜாரட்டி முக்கியமில்லை. அதன்படி, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்குச் சாதகமாகத்தான் வரும்."

``சாதகமான தீர்ப்பு வருமென்று அதீத நம்பிக்கையிருந்தால், ஏன் அவசர அவசரமாக நிர்வாகிகளை நியமிக்கிறீர்கள்?"

``எங்களைப் பொறுத்தவரையில் அ.தி.மு.க-வுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்-தான். எடப்பாடி தரப்பால் நீக்கப்பட்டவர்களை நிர்வாகிகளாக நியமிக்கிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது?"

``அதிமுக உள் விவகாரங்களில் தலையிட பாஜக-வுக்கு எல்லா உரிமையும் உண்டு!” - வைத்திலிங்கம் ஓப்பன் டாக்

"என்னதான் நிர்வாகிகளை நியமித்தாலும், உங்களால் தொண்டர்கள் மத்தியில் ஒரு 'மாஸை' உருவாக்க முடியவில்லையே?"

``நெற்கட்டும்சேவலில் செப் 1-ம் தேதி நடைபெற்ற பூலித்தேவர் பிறந்தநாள்விழாவில் ஓ.பி.எஸ்-ஸின் பல ஆயிரம் ஆதரவாளர்கள் கூடினார்களே... கட்சியும் சின்னமும் எடப்பாடி கையில் இருப்பதாக மாயை இருக்கிறது. அது இல்லை என்று தீர்ப்பு வந்ததும், தொண்டர்கள் எங்கள் பக்கம் வந்துவிடுவார்கள். அதன் பின்னர், தமிழகம் முழுவதும் சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் ஓ.பி.எஸ்."

"ஜெயலலிதா மரணத்தில் சசிகலா, தினகரன் மீது சந்தேகத்தை எழுப்பிய ஓ.பி.எஸ்., இப்போது அவர்களை ஆதரிப்பது முரணாக இல்லையா?"

"சின்னம்மாவைக் குற்றவாளி என்று யாரும் சொல்லவில்லை. அன்றைய தினத்தில், அம்மா மரணத்தில் தொண்டர்கள் மனநிலையை ஓ.பி.எஸ் பிரதிபலித்தார். தற்போது விசாரணை ஆணையம் தனது அறிக்கையை அரசுக்குச் சமர்பித்திருக்கிறது. அதில் ஒரு முடிவு வந்துவிடும். இதற்கிடையே, சின்னம்மாவால் முதல்வரான எடப்பாடி, கட்சியைச் சீரழித்துவிட்டார். தனது சர்வாதிகாரப் போக்கால், தொடர் தோல்வியைச் சந்திக்கவைத்துவிட்டார். இதனால், கட்சியைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஓ.பி.எஸ் நினைக்கிறார். இதில் முரண் இல்லை. கட்சியின் நலன்மட்டும்தான் இருக்கிறது."

``உங்கள் தரப்புக்கு சசிகலா பணம் கொடுப்பதாகவும், அதனால்தான் நீங்கள் அவரை ஆதரிப்பதாகவும் கூறப்படுகிறதே?"

``எடப்பாடியைப்போல எங்களால் பணம் செலவழிக்க முடியவில்லை என்றுதான் எல்லாரும் சொல்கிறார்கள். சின்னம்மா பணம் கொடுப்பது உண்மையாக இருந்தால், இஷ்டத்துக்குச் செலவு செய்திருப்போமே... ஆனால், நாங்கள் அப்படி எதுவும் செய்யவில்லையே... அதேநேரத்தில், கட்சியின் வளர்ச்சிக்காகத் தேவையான பணத்தைச் செலவு செய்துகொண்டுதான் இருக்கிறோம்."

``அதிமுக உள் விவகாரங்களில் தலையிட பாஜக-வுக்கு எல்லா உரிமையும் உண்டு!” - வைத்திலிங்கம் ஓப்பன் டாக்

``தர்மயுத்த காலகட்டத்தில் ஓ.பி.எஸ் பக்கமிருந்த கே.பி.முனுசாமி எடப்பாடி தரப்புக்கும், அங்கிருந்த நீங்கள் இங்கு வந்ததற்கும் என்ன காரணம்?"

``எடப்பாடி முதல்வராக இருந்தபோது கல்குவாரி, கிரானைட் குவாரி உள்ளிட்ட பல ஒப்பந்தங்களைப் பெற்று நன்றாகவே சம்பாதித்துவிட்டார் கே.பி.முனுசாமி. தற்போது எடப்பாடியுடன் இருக்கும் பலரும் அப்படிப் பயனடைந்தவர்கள்தான். அவர் கட்சியைச் சீரழிக்கிறார் என்று புரிந்தவுடன் அவ்வளவு டிக்கெட்டும் சிதறிவிடும். என்னைப் பொறுத்தவரை கட்சியின் நலனுக்காக ஓ.பி.எஸ் சிந்திக்கிறார். அவருக்குப் பக்கபலமாகத் துணை நிற்கிறேன்."

``ஆனால், உங்களுக்கு முதல்வர் கனவு இருப்பதால்தான் ஓ.பி.எஸ்-ஸை இயக்குவதாக நத்தம் விசுவநாதன் கூறுகிறாரே?"

``மூத்த அரசியல்வாதியான அண்ணன் இப்படிப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. என் உயரம் எனக்குத் தெரியும். அப்படி ஓர் எண்ணம் எனக்குச் சிறிதளவும் இல்லை."

``சமூகம் சார்ந்து லோக்கல் அரசியலுக்கு சசிகலா ஆதரவு உங்களுக்குத் தேவைப்படுவதாகக் கூறுகிறார்களே?"

``அப்படியெல்லாம் இல்லை. டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க., எனது தொகுதியில் 26 ஆயிரம் ஓட்டுகள் வாங்கியது. அதையும் மீறித்தான் 29 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றேன். அப்படியிருக்கும்போது எனக்கு என்ன சொந்த லாபமிருக்கிறது... 2021-ம் ஆண்டுத் தேர்தலில் அ.தி.மு.க மீண்டும் ஆளுங்கட்சியாகாமல் போனதற்கு அ.ம.மு.க பிரிந்ததுதான் காரணம். அன்று அ.ம.மு.க-வுடன் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்தித்திருந்தால், 150 இடங்களுக்கும் மேல் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்திருக்கலாம். ஆனால், எடப்பாடி தனது சுயலாபத்துக்காக கட்சியின் வெற்றியைத் தடுத்துவிட்டார். இதனால்தான் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று ஓ.பி.எஸ் நினைக்கிறார். "

``அரசுக்கு எதிராகப் போராட்டம், கட்சியை வளர்க்க சுற்றுப்பயணம் என்று சுற்றும் எடப்பாடி, கட்சியைச் சீரழிப்பதாகக் கூறுவது வேடிக்கையாக இல்லையா?"

``ஆர்ப்பாட்டம், போராட்டம், பொதுக்கூட்டத்தின் கூட்டமெல்லாம் தலைக்கு 200, 300 ரூபாய் என விலைபேசி அழைத்து வருகிறார்கள். அது அன்றைக்கு ஒரு நாள் கூத்து. அது நிலைத்து நிற்காது. இதை பலமாக நினைப்பது அவர்களின் அறியாமை."

``தி.மு.க எதிர்ப்புதான் அ.தி.மு.க-வின் உயிர்நாடி. ஆனால், முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு ஓ.பி.எஸ் ஆதரவல்லவா அளிக்கிறார்?"

"ஆதரவெல்லாம் அளிக்கவில்லை. எதிர்க்கட்சியை ஆளுங்கட்சி பழிவாங்கக் கூடாது. அப்படி நடக்கும்போது, அதை தைரியமாக எதிர்த்து நின்று சட்டரீதியாக அணுக வேண்டும் என்று கட்சியின் தலைவராக ஒரு கருத்தை முன்வைத்தார். ஆனால், அதை அவர்கள் திரித்து பிரசாரம் செய்கிறார்கள்."

"ஜூலை 11-ல் ஓ.பி.எஸ் தலைமையில்தானே அலுவலகம் சூறையாடப்பட்டது... ஒரு தலைவர் செய்யும் காரியமா இது?"

"அலுவலகம் சென்றபோது அங்கிருந்த குண்டர்கள் சோடா பாட்டில்கள், கற்களைக்கொண்டு எங்களைத் தாக்கினர். தற்காத்துக்கொண்டு உள்ளே செல்லும் முன்பாகவே அலுவலகம் முழுவதையும் அவர்கள் சூறையாடிவிட்டனர். அங்கு சிதறிக்கிடந்த ஆவணங்களைப் பாதுகாப்பாக எடுத்துச் சென்றோம். ஆனால், பழி எங்கள்மீது விழுந்துவிட்டது."

``அதிமுக உள் விவகாரங்களில் தலையிட பாஜக-வுக்கு எல்லா உரிமையும் உண்டு!” - வைத்திலிங்கம் ஓப்பன் டாக்

"தொண்டர்கள்தான் தலைவரை முடிவு செய்வார்கள் என்று சொல்லும் நீங்கள், கட்சிக்குள் பிரச்னையென்றால் டெல்லி பா.ஜ.க-விடம் ஓடுவது ஏன்?"

``தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.க-வுடன் நாங்கள் இருக்கிறோம். அந்த அடிப்படையில் எங்கள் கட்சியின் உள் விவகாரங்களில் தலையிட்டு, அனைவரையும் ஒன்றுபடுத்த பாஜக-வுக்கு எல்லா உரிமையும் உண்டு. அந்த அடிப்படையில், பிரதமர் மோடியையும், அமித் ஷாவையும் ஓ.பி.எஸ் விரைவில் சந்திப்பார்."

``பண்ருட்டி ராமச்சந்திரனை நீங்கள் ஆலோசகராக நியமிக்கக் காரணமென்ன?"

"அவர் மிகத் திறமையான அரசியல்வாதி. சிறந்த ஆலோசனைகளை வழங்கக்கூடியவர். அவரின் ஆலோசனைக்குப் பின்னர், நாங்கள் வேகமெடுக்கவிருக்கிறோம்."

"வைத்திலிங்கத்துக்கு வைத்திலிங்கமே கொடுக்கும் ஓர் அட்வைஸ் என்ன?"

"தொண்டர்களின் ஆதரவோடு கூட்டுத் தலைமையில் இந்த இயக்கம் வலுவோடு இருக்க வேண்டும். அதற்காகப் பாடுபட வேண்டும்."