இரண்டு முக்கிய அமைச்சர்கள் ராஜினாமா - போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் என்ன நடக்கிறது?!

போரிஸ் ஜான்சனுக்கு கிறிஸ்டோபர் மீதான புகார் குறித்து ஏற்கெனவே தெரியும். ஆனாலும் அவர் அதை மறைக்கிறார் எனத் தொடர்ந்து எதிர்ப்பு வலுத்துவருகிறது.

Published:Updated:
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்
0Comments
Share

இங்கிலாந்தின் முன்னாள் அமைச்சர் கிறிஸ்டோபர் பின்ச்சர் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி அன்று ஹெச்.எம் ஹவுஸ்ஹோல்டின் பொருளாளராக (துணைத் தலைமைக் கொறடா) நியமிக்கப்பட்டார். இவர்மீது ஊழல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில் இவர் தலைமை கொறடாவாக நியமிக்கப்பட்டதற்குப் பல அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

இந்த நிலையில், சமீபத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "கிறிஸ்டோபர் பின்ச்சரை ஹெச்.எம் ஹவுஸ்ஹோல்டின் பொருளாளராக நியமித்தது தவறு என்று நான் நினைக்கிறேன், அதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அதனால் மோசமாக பாதிக்கப்பட்ட அனைவரிடமும் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். கொள்ளையடிக்கும் அல்லது தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் எவருக்கும் இந்த அரசாங்கத்தில் இடமில்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்" என்று கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து, `போரிஸ் ஜான்சனுக்கு கிறிஸ்டோபர் பின்ச்சர் மீதான புகார் குறித்து ஏற்கெனவே தெரியும். ஆனாலும் அவர் அதை மறைக்கிறார்’ எனத் தொடர்ந்து எதிர்ப்பு வலுத்துவருகிறது. இந்த நிலையில், பிரிட்டனின் இரண்டு மூத்த அமைச்சர்களான நிதியமைச்சர் ரிஷி சுனக், சுகாதாரச் செயலர் சஜித் ஜாவித் இருவரும் ராஜினாமா செய்துள்ளனர்.

சுகாதாரச் செயலர் சஜித் ஜாவித் தனது ராஜினாமா கடிதத்தில், "பிரதமர், தனது அரசாங்கத்தின் மூத்த உறுப்பினரின் பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகளைக் கையாண்டவிதம் அதிருப்தியளித்திருக்கிறது. இனிமேலும் மனசாட்சியுடன் இந்த அரசுடன் என்னால் தொடர்ந்து பணியாற்ற முடியாது என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நிதியமைச்சர் ரிஷி சுனக், "நான் உள்ளுணர்வாக இந்த அரசின் வீரனாகக் கருதுகிறேன். பிரிட்டிஷ் மக்களும் தங்கள் அரசிடமிருந்து நேர்மையை எதிர்பார்க்கிறார்கள். மேலும், அரசு முறையாகவும், திறமையாகவும், தீவிரமாகவும் செயல்பட வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். இது எனது கடைசி அமைச்சர் பதவியாக இருக்கலாம். ஆனால் இந்த ராஜினாமாதான் போராடுவதற்குத் தகுதியானது என்று நான் நம்புகிறேன். அதனால்தான் நான் ராஜினாமா செய்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கொரோனா பேரிடர் காலத்தால் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல், மீண்டும் பரவிவரும் கொரோனா போன்ற சிக்கலைச் சமாளித்த இரண்டு முக்கிய அமைச்சர்கள் ராஜினாமா செய்திருப்பது போரிஸ் ஜான்சனுக்கு பேரிடி எனச் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.