1 லிட்டர் சமையல் எண்ணெய் கொடுத்தால் 1 லிட்டர் பீர்... பண்டமாற்று முறைக்கு மாறிய ஜெர்மனி!

ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய்யைக் கொடுத்து ஒரு லிட்டர் பீரை வாங்கிக்கொள்ளலாம்... ஒரு லிட்டர் பீரின் விலை 7 யூரோக்கள். ஆனால், ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் விலை 4.5 யூரோக்கள்தான்.. என்பதால் கூட்டம் கூட்டமாக வாடிக்கையாளர்கள் குவிந்துள்ளனர்.

Published:Updated:
டின் பீர்
டின் பீர்
0Comments
Share

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்திய நிலையில், அதன் தாக்கம் உலகம் முழுவதுமே பல பொருளாதார பாதிப்புகளை ஏற்பட்டுதியுள்ளன. உலக நாடுகள் பயன்படுத்தும் சூரியகாந்தி எண்ணெயில் 80 சதவிகிதம் உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனவே, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பின்னர் சூரியகாந்தி எண்ணெய் பற்றாக்குறை மிக அதிகமாகக் காணப்படுகிறது.

சமையல் எண்ணெய்
சமையல் எண்ணெய்
edible oil

ஜெர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகள் சமையல் எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பற்றாக்குறையால் தத்தளித்து வருகிறது.

சமையல் எண்ணெய் பற்றாக்குறையால் ஜெர்மன் நாட்டில் உள்ள பல வணிக வளாகங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சமையல் எண்ணெய் வழங்குவதில் கெடுபிடியாகப் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. வழக்கமாக வாங்கும் சமையல் எண்ணெய்யில் பாதி அளவை மட்டுமே வழங்குகிறது.

அங்குள்ள உணவகங்களில் வாரத்துக்கு 30 லிட்டர் எண்ணெய் தேவைப்படும் என்ற நிலையில் 15 லிட்டர் மட்டுமே கிடைக்கிறது. இதனால் பொதுவாக சமையலில் எண்ணையை முடிந்த அளவு குறைத்து பயன்படுத்த வேண்டிய கட்டாய சூழலில் அந்த நாட்டு மக்கள் உள்ளனர்.

தட்டுப்பாட்டை சமாளிக்க, ஜெர்மனியில் உள்ள முனிச் நகர மதுபான விடுதி ஒன்று வித்தியாசமான பண்டமாற்று முறைக்கு திரும்பியுள்ளது.

அதாவது குடிமகன்கள் அருந்தும் பீருக்கு பணம் ( யூரோ) செலுத்த வேண்டாம்... அதற்குப் பதிலாக ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய்யைக் கொடுத்து ஒரு லிட்டர் பீரை வாங்கிக் கொள்ளலாம். அதுவும் பீர் பிரியர்களுக்கு பிடித்த பீரை பெற்றுக்கொள்ளலாம். எந்த அளவு எண்ணெய் கொடுக்கிறார்களோ அதே அளவு பீர் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

சமையல் எண்ணெய்
சமையல் எண்ணெய்

மதுபான விடுதி மேலாளர் எரிக் ஹாஃப்மேன் கூறுகையில், ''எங்களுடைய ஹோட்டலில் சமையல் எண்ணெய் கையிருப்பு சுத்தமாகக் காலியாகிவிட்டது. இந்த இக்கட்டான சூழலில்தான் எங்களுக்கு இந்த புதிய ஐடியா வந்தது. இதுவரை வாடிக்கையாளர்கள் மூலம் 400 லிட்டருக்கு மேல் எண்ணெய் கிடைத்துள்ளது'' என்று கூறினார்.

ஜெர்மன் சந்தையில், ஒரு லிட்டர் பீரின் விலை 7 யூரோக்கள். ஆனால், ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் விலை 4.5 யூரோக்கள்தான். எனவே, இந்த அறிவிப்பால் கூட்டம் கூட்டமாக வாடிக்கையாளர்கள் குவிந்துள்ளனர்.

உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளைச் செய்ய சென்ற மோரிட்ஸ் பாலர் என்பவர், 80 லிட்டர் சூரியகாந்தி எண்ணெயை அங்கிருந்து வாங்கி வந்துள்ளார். அதைப் பத்திரமாகக் கொண்டு வந்து மொத்தமாக பீர் வாங்கி தன் பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார்.