பின் லேடனின் வலது கரம்; டாக்டர் டு டெர்ரரிஸ்ட்; அல்-கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி யார்?

ஒரு விமானம் பறக்கும் வேகத்தில் இந்த ஏவுகணை பாய்ந்துவந்து தாக்கி, ஒருவரை துண்டு துண்டாக வெட்டிக் கொன்றுவிடும். இப்படி ஒரு மரணமே ஜவாஹிரிக்கு நிகழ்ந்தது.

Published:Updated:
ஜவாஹிரி
ஜவாஹிரி
0Comments
Share
''எவ்வளவு ரகசியமான இடத்தில் பதுங்கி இருந்தாலும், எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அமெரிக்க மக்களுக்கு நீங்கள் அச்சுறுத்தலாக இருந்தால் உங்களைக் கொன்றுவிடுவோம்'' என்று தன் வயதையும் மீறி உணர்ச்சிவசப்பட்டு முழங்கினார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். ஒசாமா பின் லேடனுக்குப் பிறகு அல்-கொய்தா தலைவராக இருந்த அய்மன் அல்-ஜவாஹிரியை அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ ஒரு டிரோன் தாக்குதல் நடத்திக் கொன்றிருக்கிறது.
ஜோ பைடன்
ஜோ பைடன்
ட்விட்டர்

இந்தத் தாக்குதலை நடத்திய விதமே பயங்கரமானது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஜவாஹிரி பதுங்கியிருந்தார். சி.ஐ.ஏ உளவாளிகள் இதைக் கண்டுபிடித்தனர். அல்-கொய்தா தீவிரவாதிகளின் கடும் பாதுகாப்பு அரணுடன் கோட்டை போல இந்த வீடு இருந்தது. காபூலின் புறநகரான ஷெர்பூர் பகுதியில் இருக்கும் இந்த வீட்டை நீண்ட காலமாக சாட்டிலைட் மற்றும் டிரோன்கள் மூலம் சி.ஐ.ஏ கண்காணித்து வந்தது. ஜவாஹிரியின் குடும்பமும் அவருடன் இருந்தது. ஏற்கெனவே 11 ஆண்டுகளுக்கு முன்பு பின் லேடனை பாகிஸ்தானில் குறிவைத்து அமெரிக்கா கொன்றபோது, அவர் குடும்பத்தினர் பலரும் தாக்குதலில் இறந்தனர். இம்முறை ஜவாஹிரியை மட்டும் கொல்ல முடிவெடுத்தது சி.ஐ.ஏ.

ஜூலை 31 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அந்த வீட்டின் பால்கனியில் தனியாக வந்து நின்றார் ஜவாஹிரி. அந்தத் தருணத்துக்காக தயாராகக் காத்திருந்த அமெரிக்க டிரோன், இரண்டு ஹெல்ஃபயர் ஏவுகணைகளை வீசி அவரைக் கொன்றது. அந்த வீட்டின் கீழ்தளத்தில் இருந்த ஜவாஹிரி குடும்பத்தினருக்குக்கூட இந்தத் தாக்குதல் நடந்தது தெரியவில்லை. ஏதோ உடைந்து நொறுங்குவது போன்ற சத்தம் மட்டுமே அப்போது கேட்டது.

ஏனெனில், Hellfire R9X ஏவுகணை ஒரு வித்தியாசமான ஆயுதம். இலக்கைத் தாக்கும்போது இது வெடிக்காது. அதனால் குண்டுவெடிப்பு சத்தம் கேட்காது. அந்த இடத்தில் பேரழிவையும் இது ஏற்படுத்தாது. 'நிஞ்சா பாம்' என்று அழைக்கப்படும் இது உண்மையில் வெடிக்கும் ஏவுகணை இல்லை.

ஒரு ஏவுகணையின் முனையில் கூர்மையான ஆறு கத்திகள் நீண்டிருப்பதைக் கற்பனை செய்யுங்கள். ஒரு விமானம் பறக்கும் வேகத்தில் இந்த ஏவுகணை பாய்ந்துவந்து தாக்கி, ஒருவரை துண்டு துண்டாக வெட்டிக் கொன்றுவிடும். இப்படி ஒரு மரணமே ஜவாஹிரிக்கு நிகழ்ந்தது. அவர் நின்றிருந்த இடத்துக்கு அருகிலிருந்த ஜன்னல் உடைந்ததைத் தவிர, அந்த வீட்டுக்கு வேறு சேதாரம் இல்லை.

சர்வதேசப் போர் நெறிமுறைகளின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட ஆயுதம் இல்லை இந்த ஹெல்ஃபயர் ஏவுகணை. இப்படி ஒரு ஏவுகணையைப் பயன்படுத்துவதை அமெரிக்க ராணுவமோ, சி.ஐ.ஏ உளவு அமைப்போ வெளிப்படையாக ஒப்புக் கொண்டதில்லை. ஆனால், தேடப்படும் தீவிரவாதிகளைக் கொல்வதற்கு இதையே வசதியான ஆயுதமாக அமெரிக்கா பயன்படுத்துகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு சிரியாவில் ஒரு காரில் சென்ற அல்-கொய்தா மூத்த தலைவர் அல் மஸ்ரி என்பவரை இப்படித்தான் அமெரிக்கா கொன்றது. தாக்குதலுக்குப் பிறகு அந்தக் காரின் புகைப்படங்களைப் பார்த்தவர்கள் அதிர்ந்து போனார்கள். காரின் கூரையில் ஒரு பெரிய ஓட்டையை ஏற்படுத்தி உள்ளே நுழைந்திருந்தது ஏவுகணை. உள்ளே இருந்த எல்லோரும் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டிருந்தார்கள். ஆனால், காரின் முன்புற இன்ஜினோ, பின்னால் இருக்கும் டிக்கியோ உருக்குலையாமல் அப்படியே இருந்தது.

ஜவாஹிரி
ஜவாஹிரி
இந்த ஹெல்ஃபயர் ஏவுகணைகளைச் சுமந்தபடி அமெரிக்க டிரோன்கள் அரபு நாடுகளையும் ஆப்கானிஸ்தானையும் கண்காணித்து வருகின்றன. அதன் விளைவே ஜவாஹிரி கொல்லப்பட்டது.

ஜவாஹிரிக்கு இப்போது 71 வயது. 2011-ம் ஆண்டு பின் லேடன் கொல்லப்பட்ட பிறகு அல்-கொய்தா அமைப்புக்குத் தலைவரானவர். அமெரிக்காவால் தேடப்படும் 22 தீவிரவாதிகள் பட்டியலில் நம்பர் 1 இவர்தான். இவரது தலைக்கு சுமார் 200 கோடி ரூபாய் விலை வைத்திருந்தது அமெரிக்கா. பின் லேடனுக்கு வலதுகரமாக இருந்த இவர்தான், அல்-கொய்தாவின் கொள்கைகளை வடிவமைத்தவர்.

கென்யா மற்றும் தான்சானியாவில் இருக்கும் அமெரிக்கத் தூதரகங்களில் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தி 223 பேரை அல்-கொய்தா கொன்றபோது ஜவாஹிரியின் பெயர் முதலில் வெளியில் தெரிந்தது. 2001 செப்டம்பர் 11-ம் தேதி நிகழ்ந்த அமெரிக்காவின் உலக வர்த்தக மையத் தாக்குதலுக்கு மூளையாக இருந்தவர் ஜவாஹிரி. இவரது சாட்டிலைட் போன் உரையாடலை வைத்தே, பின் லேடனுக்கு இந்தத் தாக்குதலில் இருக்கும் தொடர்பைக் கண்டறிந்தது அமெரிக்கா.

பின் லேடனைக் கொல்வதற்காக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியபோது, ஆவேசமான வீடியோக்களை ஜவாஹிரி வெளியிட்டார். ''அமெரிக்கா மீதான எங்கள் போர் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. அவர்களின் மிரட்டல்கள், தாக்குதல்கள் எதுவுமே எங்களை பயமுறுத்தாது'' என்று பாகிஸ்தான் நிருபர் ஒருவருக்கு அவர் அளித்த பேட்டி, அமெரிக்காவை இன்னும் கொந்தளிக்க வைத்தது. பின் லேடனுக்கு முன்பாக ஜவாஹிரியைக் கொன்றுவிடத் துடித்தார்கள். 2006-ம் ஆண்டு பாகிஸ்தான் எல்லையில் அவர் இருப்பதைக் கண்டுபிடித்து அமெரிக்க ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அவரது உதவியாளர்கள் நான்கு பேர் இறக்க, லேசான காயங்களுடன் உயிர் தப்பினார் ஜவாஹிரி. ''இந்த உலகின் எல்லா அதிகாரங்களும் உங்கள் கையில் இருந்தாலும், என் மரணத்தை நீங்கள் தீர்மானிக்க முடியாது'' என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு அப்போது சவால் விட்டார் ஜவாஹிரி.

ஜார்ஜ் புஷ்ஷுக்கு சவால் விடும் ஜவாஹிரி
ஜார்ஜ் புஷ்ஷுக்கு சவால் விடும் ஜவாஹிரி

எகிப்து தலைநகர் கெய்ரோவில் மரியாதைக்குரிய குடும்பம் ஒன்றில் பிறந்தவர் ஜவாஹிரி. அவரின் தாத்தா, சன்னி முஸ்லிம்களால் பெரிதும் மதிக்கப்பட்ட இஸ்லாமிய அறிஞர். அவரின் மாமா, அரபு நாடுகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக இருந்தவர். அவரின் தந்தை, கெய்ரோ மருத்துவக் கல்லூரி பேராசிரியர். தன் மகனையும் டாக்டர் ஆக்கிப் பார்க்க ஆசைப்பட்டார்.

ஜவாஹிரி அதேபோல கண் மருத்துவம் படித்து, கெய்ரோ புறநகரில் கிளினிக் வைத்தார். ஆனால், பள்ளி வயதிலிருந்து தீவிரவாத எண்ணம் அவரை ஆக்கிரமித்தது. எகிப்தில் தலைமறைவாக இயங்கிய 'முஸ்லிம் பிரதர்ஹுட்' அமைப்பில் 15 வயதிலேயே இணைந்தார். மருத்துவம் படிக்கும்போதே எகிப்து இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பில் சேர்ந்தார். எகிப்து அதிபராக இருந்த அன்வர் சதாத் இந்த அமைப்பால் கொல்லப்பட்டபோது, ஜவாஹிரி கைது செய்யப்பட்டார். அப்போது சிறையில் அனுபவித்த சித்திரவதைகள் அவரை இன்னும் உறுதியான தீவிரவாதியாக மாற்றின.

விடுதலை கிடைத்ததும் சவூதி அரேபியா சென்ற ஜவாஹிரி, அதன்பின் பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் தலைமறைவாக வாழ்ந்து, எகிப்து இஸ்லாமிக் ஜிகாத் அமைப்புக்கு ஆதரவு திரட்டினார். ஒரு மருத்துவராக சிகிச்சை அளித்தபடி இதைச் செய்ததால், பல இளைஞர்கள் அவரை நம்பி வந்தார்கள். அவரது அமைப்பு தொடர்ச்சியாக எகிப்தில் தாக்குதல் நடத்தி பல அமைச்சர்களையும் அதிகாரிகளையும் கொன்றபடி இருந்தது. ஜிகாத் தாக்குதல்களுக்கு நிதி திரட்டுவதற்காக போலி பாஸ்போர்ட்டில் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்தார். ரஷ்யாவில் ஒருமுறை அவரைக் கைது செய்தார்கள். ஆனால், அவரின் கம்ப்யூட்டரில் இருந்த அரபு டாக்குமென்ட்களை ரஷ்ய அதிகாரிகளுக்கு படிக்கத் தெரியவில்லை. அதனால் அவரின் அடையாளம் புரியாமல் விடுதலை செய்துவிட்டார்கள். அப்போது அவரை விடுவிக்காமல் இருந்திருந்தால், ஜவாஹிரி பின் லேடனுடன் சேர்ந்திருக்க மாட்டார். உலக வர்த்தக மையத் தாக்குதல் ஒருவேளை நடக்காமலே போயிருக்கலாம். ஆப்கானிஸ்தானும் பேரழிவை சந்தித்திருக்காது.

பின்லேடனுடன் ஜவாஹிரி
பின்லேடனுடன் ஜவாஹிரி

ரஷ்யாவிலிருந்து விடுதலை ஆனதும் ஆப்கானிஸ்தான் வந்தார் ஜவாஹிரி. அவர் பின் லேடனை சந்தித்தபிறகு அல்-கொய்தா வலுவடைந்தது. அதன்பின் நடந்த எல்லாமே உலகத்துக்குத் தெரியும்.

பின் லேடனின் மரணத்துக்குப் பிறகு அல்-கொய்தா அமைப்புக்குத் தலைமையேற்ற ஜவாஹிரி, பல ஆண்டுகளாக உடல்நலமில்லாமல் இருந்தார். அவரின் தளபதிகள் பலரை அமெரிக்கா கொன்றுவிட்டதால், சிறகுகள் இல்லாத பறவை போல அவர் தனிமைப்பட்டிருந்தார். ஐ.எஸ் தீவிரவாத அமைப்பும், தாலிபன்களும் வலிமை பெற்றிருக்கும் இந்தக் காலத்தில் அல்-கொய்தா அமைப்புக்கு பெரிய முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது.

ஜவாஹிரிக்குப் பிறகு வேறொரு தலைவர் அந்த அமைப்புக்கு வரலாம். ஆனால், அவரை முதல் நாளிலிருந்தே அமெரிக்க டிரோன்கள் வட்டமிட்டுக் கொண்டிருக்கும் என்பதுதான் யதார்த்தம்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அவசர அவசரமாக அமெரிக்கப் படைகளை விலக்கிக்கொண்டதால் உலகின் விமர்சனத்துக்கு ஆளாகியிருந்தார் ஜோ பைடன். பல நாடுகளின் மக்களை ஆப்கானிஸ்தானில் தவிக்க விட்டு, உலகின் கோபத்துக்கும் இலக்காகி இருந்தது அமெரிக்கா. அந்தக் கறையைப் போக்குவதற்கு ஜவாஹிரி கொலை அவர்களுக்கு உதவலாம்.

பின் லேடனுடன் ஜவாஹிரி
பின் லேடனுடன் ஜவாஹிரி
ஆப்கானிலிருந்து வெளியேறிய பிறகு அங்கு அமெரிக்கா நடத்தியிருக்கும் முதல் தாக்குதல் இதுதான். இன்னமும் தீவிரவாதிகளின் புகலிடமாகவே ஆப்கானிஸ்தான் இருக்கிறது என்பதை இது உறுதி செய்திருக்கிறது.