``ஜெயலலிதா இறந்தது எப்போது..?" - என்ன சொல்கிறது ஆறுமுகசாமி ஆணையம் | அறிக்கை ஹைலைட்ஸ்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட அறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை நிறைவுபெற்ற நிலையில், தற்போது அறிக்கை வெளியாகியிருக்கிறது.

Published:Updated:
ஆறுமுகசாமி ஆணையம்
ஆறுமுகசாமி ஆணையம்
0Comments
Share

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 05.12.2016-ம் தேதி உயிரிழந்தார். இவரின் மரணம் தொடர்பாகவும், அவருக்கு அளிக்கப்பட்டுவந்த சிகிச்சை தொடர்பாகவும் விசாரணை நடத்த நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையமானது, 30.09.2017-ம் தேதி முதல் அதிகாரபூர்வமாகச் செயல்படத் தொடங்கியது. இந்த ஆணையத்தில் 30 நபர்களிடமிருந்து பிரமாண பத்திரம் வாங்கி பரிசீலனை செய்யப்பட்டது. இதுமட்டுமின்றி 151 நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ஆறுமுகசாமி ஆணையம்
ஆறுமுகசாமி ஆணையம்

ஆறுமுகசாமி ஆணையம் தனது விசாரணையை முடித்துக் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையானது ஆங்கிலத்தில் 500 பக்கங்களும், தமிழில் 608 பக்கங்களும் கொண்டது. இந்த நிலையில், விசாரணை அறிக்கை இன்று(18.10.2022) சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதில் ஜெயலலிதாவின் மருத்துவக் கட்டணமாக ஆறு கோடி ரூபாய் அ.தி.மு.க சார்பில் செலுத்தப்பட்டது தொடங்கி யார் விசாரிக்கப்படவேண்டும் என்பது வரை பல்வேறு தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

600 பக்கங்களுக்கும் அதிகமுள்ள இந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் சில முக்கிய விஷயங்களைச் சுருக்கமாகப் பின்வருமாறு பார்க்கலாம். ஜெயலலிதா தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற அன்று, அவர் வீட்டின் முதல் மாடியிலுள்ள குளியலறையிலிருந்து படுக்கைக்கு திரும்பும்போது மயங்கி விழுந்தார். அங்கிருந்த சசிகலா உள்ளிட்டோர் ஜெயலலிதாவைத் தாங்கிப் பிடித்திருக்கின்றனர். மயக்க நிலையிலிருந்த அவர், வீட்டிலிருந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மயக்கமடைந்த பிறகு நடந்த விஷயங்கள் அனைத்தும் சசிகலாவால் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றன.

விசாரணை அறிக்கை
விசாரணை அறிக்கை

மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட ஜெயலலிதா பரிசோதனைக்குப் பிறகு ஐ.சி.யூ-வுக்கு மாற்றப்பட்ட சமயத்தில் அவருக்குச் சுயநினைவு திரும்பியது. அவர் மருத்துவமனையிலிருந்த நேரத்தில் சசிகலா மற்றும் அவரின் உறவினர்களால் அந்த பத்து அறைகளும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. ஜெயலலிதாவுக்கு நாள்பட்ட வயிற்றுப்போக்குடன் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி மற்றும் நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், ஹைப்போ தைராடிஸம், கட்டுப்பாடற்ற நீரிழிவு இருந்ததற்கான சாட்சியங்கள் ஆவணங்கள் மூலம் அறியப்படுகிறது.

பிரிட்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே, அமெரிக்க மருத்துவர் ஸ்டூவர்ட் ரஸ்ஸல், மருத்துவர் சமின் ஷர்மா போன்றவர்கள், ஜெயலலிதாவின் இதயத்தில் வெஜிடேசன், பெர்ஃபொரேசன் மற்றும் டயஸ்டோலிக் டிஸ்பரேஷன் ஆகியவற்றுக்காக ஆஞ்சியோ அறுவை சிகிச்சை செய்யப் பரிந்துரை செய்திருந்தனர். இருந்தபோதிலும், ஜெயலலிதாவின் கடைசி மூச்சு வரை அது நடக்காதது ஏன். அவர் மருத்துவமனையிலிருந்த சமயத்தில் அவர் எந்த நேரத்திலும் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்று வெளியிடப்பட்ட அறிக்கை பொய்யானது.

``ஜெயலலிதா இறந்த தேதி 2016, டிசம்பர் 5-ம் தேதி இரவு 11:30 என்று மருத்துவமனை அறிக்கை அளித்திருக்கிறது. ஆனால் விசாரணையில் டிசம்பர் 4-ம் தேதி பிற்பகல் 3 முதல் 3:50 மணிக்குள் இறந்திருக்கலாம் எனச் சாட்சியங்கள் தெரிவித்திருக்கின்றன" - விசாரணை அறிக்கை

ரிச்சர்டு பீலே, ஜெயலலிதாவைச் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல தயார் என்று சொல்லியும் அது ஏன் நடக்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவக்குழு சிகிச்சை விவரத்தின் சுருக்கத்தை மட்டுமே அவர்களின் கருத்தாகத் தெரிவித்திருக்கிறார் என்பது அறிய வருகிறது. எனவே எய்ம்ஸ் மருத்துவக்குழுவின் அறிக்கையை விசாரணை ஆணையம் ஏற்கவில்லை. ஜெயலலிதா மயக்கமடைந்த உடனே எந்த தாமதமும் இல்லாது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். இந்த விஷயத்தில் சசிகலா உள்ளிட்ட நபர்கள்மீது அசாதாரணமான அல்லது இயற்கைக்கு மாறான எந்த விஷயத்தையும் இந்த ஆணையம் கண்டறியவில்லை.

மருத்துவர் Y.V.C. ரெட்டி, மருத்துவர் பாபு ஆபிரகாம், அன்றைய தலைமைச் செயலாளர் ராம.மோகன ராவ் ஆகியோர் மீது விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் பிரதாப் ரெட்டியை விசாரணை செய்வது தொடர்பாக அரசு முடிவு செய்யலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும், மருத்துவமனையில் அவருக்குச் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டது என்று கூறப்படுவதைத் தவிர வேறு எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கிருஷ்ணப்பிரியாவின் சாட்சியத்தின்படி, ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கு நல்லுறவு இல்லை.

விசாரணை அறிக்கை
விசாரணை அறிக்கை

ஆணையம், மேற்குறியுள்ளவற்றை கருத்தில் கொண்டு சசிகலாவைக் குற்றம்சாட்டுவதைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வரமுடியாது. எய்ம்ஸ் மருத்துவக்குழுவினர் ஐந்து முறை மருத்துவமனைக்கு வந்திருந்தாலும், அவருக்கு முறையான சிகிச்சை தரப்படவில்லை என்று அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சிகிச்சை அளித்த மருத்துவர் சிவகுமார், அன்றைய தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அன்றைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து இவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.