2018-ம் ஆண்டு ட்வீட்; இப்போது நடவடிக்கை... `ALT NEWS' இணை நிறுவனர் கைதுக்குப் பின்னால் பாஜக அரசு?

`ஆல்ட் நியூஸ்' இணை நிறுவனர் முகமது ஜுபைர் கைது பின்னணியில் பா.ஜ.க அரசு இருக்கிறதா... நுபுர் ஷர்மா விவகாரத்துக்கும், முகமது ஜுபைர் கைதுக்கும் தொடர்பு இருக்கிறதா?

Published:Updated:
ஆல்ட் நியூஸ் - முகமது ஜுபைர்
ஆல்ட் நியூஸ் - முகமது ஜுபைர்
0Comments
Share

ஆல்ட் நியூஸ் (Alt News) நிறுவனத்தின் இணை நிறுவனரும், பத்திரிகையாளருமான முகமது ஜுபைரை நேற்று (ஜூன் 27) டெல்லி காவல்துறை கைதுசெய்திருக்கிறது. 2018-ம் ஆண்டு, ஜுபைர் பதிவிட்ட ஒரு ட்வீட் சம்பந்தப்பட்ட வழக்கில் அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், மூத்த பத்திரிகையாளர்களும், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும், `உண்மையை வெளிக்கொண்டு வருபவர்களை ஒடுக்க நினைக்கிறது பா.ஜ.க' என்று ஜுபைருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துவருகின்றனர். இந்த விவகாரத்தில் நடப்பது என்ன?

முகமது ஜுபைர் - ஆல்ட் நியூஸ்
முகமது ஜுபைர் - ஆல்ட் நியூஸ்

நுபுர் ஷர்மாவின் ட்விட்டர் பதிவு!

உண்மை சரிபார்ப்பு செய்தி நிறுவனமான ஆல்ட் நியூஸின் நிறுவனர்களுள் ஒருவரான முகமது ஜுபைர், போலிச் செய்திகள் தொடர்பான தகவல்களை ஆதாரங்களுடன் வெளியிட்டுவந்தார். மேலும், வெறுப்புணர்வை ஏற்படுத்தும்படியான கருத்துகளை வெளியிடுபவர்களை ட்விட்டரில் தொடர்ச்சியாக விமர்சனமும் செய்துவந்தார். பா.ஜ.க நிர்வாகி நுபுர் ஷர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையான கருத்துகள் கூறியது தொடர்பான விவகாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்ததில் ஜுபைருக்கு முக்கியப் பங்கு உண்டு. முன்பு , `ஜுபைர் வெளியிட்ட காணொளி காரணமாக எனக்கும், எனது குடும்பத்துக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருகின்றன' என்று டெல்லி காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து ட்வீட் செய்திருந்தார் நுபுர் ஷர்மா.

இந்த நிலையில், நேற்று திடீரென கைதுசெய்யப்பட்டிருக்கிறார் முகமது ஜுபைர். இது குறித்து ஆல்ட் நியூஸ் நிறுவனத்தின் மற்றோர் இணை நிறுவனர் பிரத்தீக் சின்ஹா, ``2020-ல் பதிவுசெய்யப்பட்ட வழக்கு ஒன்றின் விசாரணைக்காக வரும்படி டெல்லி காவல்துறையிலிருந்து ஜுபைருக்கு அழைப்பு வந்தது. இந்த வழக்கில் கைதுசெய்யப்படாமல் இருக்க நீதிமன்றத்திலிருந்து உத்தரவு பெற்றிருந்தார் ஜுபைர். ஆனால், விசாரணைக்கு ஆஜரான அவரை, வேறொரு வழக்கில் கைதுசெய்திருக்கிறது டெல்லி காவல்துறை. அந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையைக்கூடக் கண்ணில் காட்டவில்லை. அவரை அழைத்துச் சென்ற வேனில் இருந்தவர்கள், தங்களுடைய பெயர் பேட்ஜை அணியவில்லை'' என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

டெல்லி போலீஸ்
டெல்லி போலீஸ்

மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் டெல்லி காவல்துறையோ, ``ஜுபைரால் ட்விட்டரில் பதியப்பட்ட அந்தக் குறிப்பிட்ட பதிவு, ஒரு மதத்தினரைக் காயப்படுத்துவதாகவும் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலும் இருக்கிறது. இது வேண்டுமென்றே செய்யப்பட்டிருக்கிறது. விசாரணையின்போது போதுமான ஒத்துழைப்பு தராததால் ஜுபைரைக் கைதுசெய்திருக்கிறோம்'' என்று கூறியிருக்கிறது.

எந்தப் பதிவுக்காகக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்?

2018-ம் ஆண்டு தனது ட்விட்டர் பக்கத்தில், பெயர் மாற்றப்பட்ட ஒரு ஹோட்டலைக் கிண்டலடிக்கும் வகையில், `2014-க்கு முன்பு - ஹனிமூன் ஹோட்டல்; 2014-க்குப் பிறகு - ஹனுமன் ஹோட்டல்' என்று பதிவிட்டிருந்தார் ஜுபைர். இந்தப் பதிவுடன் 1983-ல் வெளியான ஓர் இந்தி படத்தின் புகைப்படத்தையும் இணைத்திருந்தார். இந்தப் பதிவுக்கு எதிராக, `இந்துக் கடவுளோடு, ஹனிமூனை இணைத்து எங்கள் மத உணர்வுகளைக் காயப்படுத்துகிறார்' என்று சிலர் கொந்தளித்தனர். இது தொடர்பாகக் கொடுக்கப்பட்ட வழக்கில்தான் ஜுபைர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

 முகமது ஜுபைர்
முகமது ஜுபைர்

ஜுபைருக்கான ஆதரவுக் குரல்கள்!

`2018-ம் ஆண்டு செய்த ட்வீட்டுக்காக இப்போது ஏன் கைதுசெய்திருக்கிறார்கள்... இவ்வளவு நாள் காவல்துறை என்ன செய்துகொண்டிருந்தது... 2020-ல் போடப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைக்காக அழைப்பதாக டெல்லி காவல்துறை சொல்லியிருக்கிறது. அந்த வழக்கில் அவரைக் கைதுசெய்ய முடியாது என்று தெரிந்தவுடன், பழைய ட்விட்டர் பதிவைக் காரணம் காட்டி வழக்கு பதிந்து ஜுபைரைக் கைதுசெய்திருக்கிறது காவல்துறை. இது நிச்சயம் பா.ஜ.க-வின் பழிவாங்கல் நடவடிக்கைதான்' என்று ஜுபைருக்கு ஆதரவாகப் பலரும் குரல் கொடுத்துவருகின்றனர்.

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, `பா.ஜ.க-வின் வெறுப்புணர்வு, பொய்கள் குறித்து வெளி உலகத்துக்குக் கூறும் ஒவ்வொருவரும் அவர்களுக்கு எதிரிகள்தாம். உண்மையைக் கூறும் ஒரு குரலைத் ஒடுக்க நினைத்தால், அதுபோல ஆயிரம் குரல்கள் எழும்' என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, `உங்கள் சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர் அல்லாத ஒருவர் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறப்படும்போது நடவடிக்கைகள் எடுப்பது பா.ஜ.க-வுக்கு எளிதான காரியம். நுபுர் ஷர்மாவைக் கைதுசெய்து, அனைவருக்கும் ஒரே விதிகள் பொருந்தும் என்பதை நாட்டுக்குக் காட்டுங்கள்' என்று கருத்து தெரிவித்திருக்கிறது.

பா.ஜ.க-வின் பழிவாங்கல் நடவடிக்கை?

மூத்த பத்திரிகையாளர் சிலர், ``பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் கூறும் போலித் தகவல்களை, ஆதாரங்களுடன் பொய் என்று தொடர்ந்து நிரூபித்துவந்தார் ஜுபைர். குறிப்பாக நுபுர் ஷர்மா விவகாரம், உலக அரங்கில் பெரிதாக மாறியதற்கு முக்கியக் காரணம் ஜுபைரின் ட்வீட்தான். இது போன்று பல்வேறு விஷயங்களில், ஜுபைரின் ட்விட்டர் ஸ்கிரீன் ஷாட்டுகளை சர்வதேச ஊடகங்களும், வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களும் பயன்படுத்திவந்தனர். தற்போது ஏதோவொரு பழைய ட்விட்டர் பதிவுக்கான வழக்கில் ஜுபைரை டெல்லி காவல்துறை கைதுசெய்திருக்கிறது. எனவே, இது ஏதோ பழிவாங்கும் நடவடிக்கையோ என்ற சந்தேகங்கள் எழுகின்றன'' என்கிறார்கள்.

அமித் ஷா, மோடி
அமித் ஷா, மோடி

அதே நேரத்தில் பா.ஜ.க ஆதரவாளர்களோ, ``ஜுபைரின் தவறான பதிவுக்காகத்தான், அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இதில் எந்தவொரு பழிவாங்கல் நடவடிக்கையும் இல்லை. அவர்மீது குற்றமில்லையென்றால், அதை அவர் நீதிமன்றத்தில் நிரூபித்து வெளியே வரட்டும்'' என்கிறார்கள்.