ஆம்னி பேருந்துக் கட்டணம்: `தெரிந்தேதான் பயணிக்கிறார்கள் என்பதா?’ - அமைச்சரின் `முரண்’ ஸ்டேட்மென்ட்ஸ்

ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூல் செய்வதைக் கண்டுகொள்ளாதவிதமாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேசியது பேசுபொருளாகியுள்ளது.

Published:Updated:
கண்டுகொள்ளாத அமைச்சர் சிவசங்கர்
கண்டுகொள்ளாத அமைச்சர் சிவசங்கர்
0Comments
Share

வார இறுதி நாள்கள், தொடர் விடுமுறை, பண்டிகள் தினங்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் அதிகரிப்பது வாடிக்கையான விஷயமாகிப்போனது. ஒவ்வொரு முறையும், அதிக கட்டணம் வசூல் செய்யும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு சார்பிலும், அமைச்சர் தரப்பிலும் கூறப்படும். ஆனால், இதுநாள் வரை இந்தப் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு என்பதே எட்டப்படவில்லை என்பதுதான் உண்மை நிலவரம்.

கோயம்பேடு பேருந்து நிலையம்
கோயம்பேடு பேருந்து நிலையம்
Durairaj G

பண்டிகைகாலத் தொடர் விடுமுறை, தீபாவளி வரவிருக்கும் நிலையில், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்திருப்பது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆம்னி பேருந்துகள் சங்கத்தில் சார்பில், http://www.aoboa.co.in என்ற இணையதளத்தில் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தைத் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவித்திருந்தார்கள். இந்தக் கட்டணத்தைத் தாண்டி அதிக கட்டணம் வசூல் செய்தால், அந்தப் பேருந்து நிறுவனங்களின் மீது புகார் தெரிவிக்கலாம் என்றும் அந்தச் சங்கத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

இதுவொருபுறமிருக்க, இன்னொரு பக்கம், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் நிர்ணயம் செய்வது தொடர்பாக, பேருந்து உரிமையாளர்களுடன் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தக் கூட்டத்தில், துறைசார்ந்த பல்வேறு அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், ``அரசுப் பேருந்துகள் மக்களின் சேவைக்காக இயக்கப்படுகின்றன. ஆனால், ஆம்னி பேருந்துகள் அப்படி கிடையாது. அரசுப் பேருந்துக் கட்டணத்தை ஆம்னி பேருந்துடன் ஒப்பிடுவது தவறு. ஆம்னி பேருந்துக்குக் கட்டணம் நிர்ணயம் செய்ய முடியாது. இந்தியா முழுவதிலும் இதுதான் நிலைமை.

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் குளிர்சாதனம், படுக்கை வசதிகொண்ட பேருந்துகள் உள்ளன. இதைவிடக் கூடுதல் வசதியை எதிர்பார்ப்பவர்கள் ஆம்னி பேருந்துகளை நாடிச் செல்கின்றனர். தனியார் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்துவதால் ஏழைகள் பாதிக்கப்படுவது கிடையாது. அவர்கள் அரசுப் பேருந்துகளில் பயணிக்கிறார்கள். மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையிலும், உரிமையாளருக்கு நஷ்டம் ஏற்படாத வகையிலும் கட்டணத்தை நிர்ணயிப்பதாக உரிமையாளர்கள் கூறியிருக்கிறார்கள். அதைவிட அதிக கட்டணம் வசூல் செய்தால் நடவடிக்கை எடுப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

`கட்டணம் எவ்வளவு எனத் தெரிந்துதான் மக்கள் பயணம் செய்கிறார்கள். ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்ந்தால், அது ஏழைகளை பாதிக்காது’ என்று அமைச்சர் பேசியது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதே அமைச்சர்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, தனியார் பேருந்துகளில் ஏறி ஆய்வு மேற்கொண்டு, அதிக கட்டணம் வசூல் செய்த பேருந்தில் கட்டணத்தைத் திரும்பப் பெற்று பயணிகளிடம் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேருந்தில் ஆய்வு செய்யும் அமைச்சர்
பேருந்தில் ஆய்வு செய்யும் அமைச்சர்

இந்த விவகாரம் தொடர்பாகப் பேருந்தில் அடிக்கடி பயணிக்கும் ஒருவரிடம் பேசினோம். ``விழாக்காலங்களில் பல ஆயிரக்கணக்கான பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என்று அரசு அறிவிப்பது உண்மைதான். ஆனால், அந்த சிறப்புப் பேருந்துகள் என்று இயக்கப்படும் பல பேருந்துகள், மாநகரத்தில் இயக்கப்படும் பேருந்துகள்தான். நகரத்துக்குள் இயக்கும் பேருந்துகளை ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு இயக்குவார்கள். எஸ்.சி.டி.சி பேருந்தில் என்ன கட்டணமோ அதே கட்டணம்தான் வசூலிக்கப்படும். அந்தப் பேருந்தில் சென்னையிலிருந்து மதுரைக்குச் சென்று சேர்வதற்குள், பண்டிகைக்கு எதற்கு ஊருக்குச் செல்கிறோம் என்ற மனநிலைக்கு நாம் ஆளாகிவிடுவோம். அந்த அளவுக்கு நெருக்கமான இருக்கைகள், குறுகிய இடம், மிக மெதுவாகச் செல்லும் பேருந்து என அடுக்கிக்கொண்டே போகலாம்" என்றார்.

மேலும், ``அரசு போதிய அளவுக்குப் பேருந்துகளை இயக்கினால் நாங்கள் ஏன் தனியார் பேருந்துக்குச் செல்லப்போகிறோம்... பண்டிகைகள் காலத்தில் சென்னையிலிருந்து மதுரைக்குச் செல்ல வேண்டுமென்றால் குறைந்தது 2,000 ரூபாயாவது வேண்டும். கையிலிருக்கும் காசையெல்லாம் பேருந்துக் கட்டணத்துக்கே கொடுத்துவிட்டுப் போகவேண்டியதுதான். அரசுப் பேருந்துகள் போதிய அளவில் இயக்கப்படுகின்றன என்று சொல்லும் அமைச்சர், பண்டிகைள் நாள்களில் கோயம்பேடுக்கு வந்து பார்வையிட வேண்டும். அப்போதுதான் இங்கு என்ன உண்மை நிலவரம் என்பது அவருக்குத் தெரியவரும். அப்படியே ஒரு பேருந்தில் மதுரை வரைகூட வேண்டாம், ஒரு 100 கிலோமீட்டர் தூரம் பயணித்தால் எங்களின் கஷ்டம் அவருக்கு நன்றாகப் புரியவரும்" என்றார்.

ஆம்னி பேருந்து நிலையம்
ஆம்னி பேருந்து நிலையம்

இது குறித்து இன்னொரு பயணியிடம் பேசினோம். ``குற்றம் செய்பவர்கள் தெரிந்தேதான் பல இடங்களில் கொலை, கொள்ளை முதல் அனைத்துத் தவறுகளையும் செய்கிறார்கள். அப்போது அதையும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிடுவோமா... கட்டணம் அதிகம் என்று தெரிந்தேதான் மக்கள் பயணம் மேற்கொள்கிறார்கள் என்று சொல்ல அமைச்சர் எதற்கு... சாதாரண நாள்களில் 600 ரூபாயாக இருக்கும் கட்டணம் பண்டிகை தினங்களில் 3,000 ரூபாய் வரை அதிகரிக்கிறது. நீங்கள் சொல்வதுபோல, அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் அளவுக்கு ஏழைகள்தான் நாங்கள். வேறு வழியெதுவும் இல்லாமல் கட்டணம் அதிகம் என்று தெரிந்தே பயணிக்கிறோம். இதைப் புரிந்துகொண்டு, அதிக கட்டணம் வசூல் செய்யும் ஆம்னி பேருந்துகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை" என்றார்.