321 ஆட்டோ, 228 கார், 22 பெண் டிரைவர்கள் கேரள அரசின் ஆன்லைன் டாக்ஸி சர்வீஸ் - ஒரு பார்வை

இந்தியாவில் முதன் முறையாக ஒரு மாநில அரசே நேரடியாக நடத்தும் ஆன்லைன் டாக்ஸி சேவை திட்டம் கேரளாவில் தொடங்கி வைக்கப்படுள்ளது.

Published:Updated:
கேரள சவாரி திட்டம்
கேரள சவாரி திட்டம்
0Comments
Share
கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் ஆன்லைன் டாக்ஸி சேவையில் பெருமளவு கோலோச்சுகின்றன. இந்த நிலையில் கேரளா அரசு சார்பில் ஆன்லைன் டாக்ஸி சர்வீஸ் தொடக்க விழா திருவனந்தபுரம் கனகக்குந்நு கொட்டார வளாகத்தில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.

இதற்கு கேரள தொழில்த்துறை அமைச்சர் சிவன்குட்டி தலைமை வகித்துப் பேசுகையில், "இந்தியாவில் முதன் முதலாக ஆன்லைன் டாக்ஸி திட்டத்தை கேரள மாநில அரசு செயல்படுத்துகிறது. முதற்கட்டமாக திருவனந்தபுரத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. மக்களிடம் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து பிற நகரங்களில் இதை விரிவுபடுத்துவோம். இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும்போது தேவைப்பட்டால் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும். வாகன தொழிலாளர்களின் சீரான வருமானத்தை உறுதி செய்யும் விதமாக இந்தத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். பயணிகளின் பதுகாப்பை பிரதானமாகக்கொண்டு இந்தத் திட்டத்தில் இணையும் அனைத்து டிரைவர்களும் போலீஸ் கிளியரன்ஸ் சர்டிபிகேட் வாங்குவதைக் கட்டாயமாக்கியுள்ளோம். குறைந்த வாடகை, வாக்குவாதம் இல்லாத பாதுகாப்பான பயணத்தை மக்களுக்கு வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்" என்றார்.

கேரளா சவாரி திட்டத்தை பினராயி விஜயன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்
கேரளா சவாரி திட்டத்தை பினராயி விஜயன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்

இந்த திட்டத்தை கொடி அசைத்து தொடங்கி வைப்பதற்கு முன்பு பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், "அமைச்சர் சிவன் குட்டி எல்லா விஷயங்களையும் பேசிவிட்டார். நிறைந்த ஐஸ்வர்யம் இந்த கேரளா சவாரிக்கு அமையட்டும். கேரளா சவாரி திட்டத்தை நான் தொடங்கி வைக்கிறேன்" என்றார். கேரளா சவாரி என்ற இணையதளத்தை போக்குவரத்து அமைச்சர் ஆன்றணி ராஜூ தொடங்கி வைத்தார். கேரள சவாரி திட்டத்தின் செயல்பாட்டுக்காக 24 மணி நேரமும் செயல்படும் விதமாக திருவனந்தபுரம் மோட்டார் தொழிலாளர் சேமநிதி துறை அலுவலகம் செயல்பட உள்ளது. பயணிகள் தங்கள் ஆலோசனைகளையும், புகார்களையும் 9072272208 என்ற கால் சென்டர் எண்ணில் அழைத்து தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் நகரத்தில் 321 ஆட்டோக்கள், 228 கார்கள் என 541 வாகனங்கள் கேரளா சவாரி திட்டத்தில் பதிவு செய்துள்ளன. அதில் 22 பேர் பெண் ஓட்டுனர்கள். தனியார் ஆன்லைன் டாக்ஸி நிறுவனங்களில் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை சர்வீஸ் சார்ஜ் என்பதால் கட்டணம் அதிகமாக இருக்கும். ஆனால் கேரளா சவாரி திட்டத்தில் 8 சதவீதம் மட்டுமே சர்வீஸ் சார்ஜ் என்பதால் பயணிகள் குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பாக பயணிக்க முடியும் என அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.

கேரள சவாரி ஆட்டோ டிரைவர்கள்
கேரள சவாரி ஆட்டோ டிரைவர்கள்

மேலும், டிரைவர்களுக்கு சலுகை விலையில் ஆயில், டயர், இன்சூரன்ஸ் போன்றவை வழங்கும் திட்டமும் பயணிகளுக்கு ஆஃபர் வழங்கும் பிளான்களும் இதில் உண்டு. வழக்கமாக ஆன்லைன் டாக்ஸி சர்வீஸ்களில் பீக் அவர்களிலும், நெருக்கடி நேரங்களிலும் கூடுதல் கட்டணம் வசூலிப்பது வழக்கம். ஆனால் கேரளா சவாரி திட்டத்தில் எப்போதும் ஒரே சீரான கட்டணம் வசூலிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேரள சவாரி திட்டம்
கேரள சவாரி திட்டம்

திருவனந்தபுரம் மாநகரப் பகுதிகளில் பயணிக்க விரும்பும் பயணிகள் கேரள சவாரி (kerala savaari) என்ற ஆன்லைன் ஆப்பை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும். ஆப் மூலம் மட்டுமே கார், ஆட்டோ போன்றவைகளை புக் செய்ய முடியும். பயணிகளுக்கு தனியாகவும், டிரைவர்களுக்கு தனியாகவும் ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆபத்து காலங்களில் அவசர உதவிக்கு போலீஸ், தீயணைப்பு, ஆம்புலன்ஸ் உதவிகளுக்கு ஆப்பிலேயே அவசரகால பட்டன் வழங்கப்பட்டிருக்கும். டிரைவர், பயணி என இரண்டு ஆப்களிலும் அவசரகால உதவிக்கான பட்டன் இருக்கும். கேரளா சவாரி ஆப்பை 17.08.2022 நள்ளிரவு முதல் பொதுமக்கள் டவுன்லோட் செய்துகொள்ளலாம் என அதிகாரிகள் ஏற்கனவே அறிவித்திருந்தனர். ஆனால் 18-ம் தேதியான இன்று மதியம் வரை அந்த ஆப் பிளே ஸ்டோரில் கிடைக்கவில்லை. இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, "இப்போது வெரிபிகேஷன் பிராசஸ் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் ஆப் டவுன்லோட் ஆகவில்லை. வெரிபிகேசன் பிராசஸ் முடிந்ததும் ஆப் டவுன்லோட் செய்துகொள்ளலாம்" என்றார்.