``ஆளுநர் அவமதிக்கப்பட்டால் மகிழும் கூட்டம் தமிழகத்தில் உள்ளது" - தமிழிசை கருத்தின் பின்னணி என்ன?!

சமீபத்தில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ``ஆளுநர்கள் அவமதிக்கப்பட்டால் மகிழும் கூட்டம் தமிழகத்தில் உள்ளது’’ என்று கருத்து தெரிவித்திருந்தார்.

Published:Updated:
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
0Comments
Share

தமிழ்நாடு பாஜக மாநில தலைவராகப் பதவிவகித்த தமிழிசை, பின்னர் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். முன்பைவிட தற்போது அந்த மாநில அரசுக்கும், தமிழிசைக்கும் மோதல் போக்கு அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் பேசிய ஆளுநர் தமிழிசை, "தெலங்கானா மாநில அரசு தனக்கு உரிய மரியாதை தரவில்லை" என்று பேசியிருந்தார். இதைத் தொடர்ந்து, திமுக-வின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில், ``மேதகு தமிழிசை தந்தது பேட்டி அல்ல; சில ஆளுநர்களுக்கு உணர்த்திடும் பாடம்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது.

தமிழிசை சௌந்தரராஜன் - சந்திரசேகர ராவ்
தமிழிசை சௌந்தரராஜன் - சந்திரசேகர ராவ்

இந்தப் கட்டுரை வெளியானதையடுத்து பேசிய ஆளுநர் தமிழிசை, ``தமிழிசை அப்பிராணியும் இல்லை. அப்பாவியும் இல்லை. என்னுடைய பேட்டி அழாக் குறையான பேட்டி அல்ல. தெலங்கானாவில் ஆளும் வர்க்கத்தின் அமைச்சர்களையும், முதலமைச்சரின் அரசியல் வாரிசுகளையும் அலறவிட்ட பேட்டி. புலியை முறத்தால் விரட்டிய தமிழச்சியின் பரம்பரையில் வந்த நான் வாய்விட்டு அழுவதும், தலைகுனிவதும் என்னுடைய சரித்திரத்திலேயே இல்லை. தமிழிசைக்கு ஏற்பட்டிருக்கிற நிலைமை மற்றவர்களுக்கு ஒரு பாடம் என்கிறார்கள். தன் மாநிலத்து தமிழ்ச் சகோதரிக்கு இன்னொரு மாநிலத்தில் உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்பதைக் கண்டு மகிழும் கூட்டம் முரசொலி கூட்டமாகத்தான் இருக்க முடியும்" என்று சொல்லியிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து, திமுக சட்டமன்ற உறுப்பினர், பரந்தாமனிடம் பேசினோம். ``எந்தத் தமிழரும் ஆளுநர்களை அசிங்கப்படுத்த வேண்டும் என்று நினைக்க மாட்டார். தமிழ்நாட்டு மக்கள் அது போன்ற செயலை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். ஆளுநருக்கு அரசியல் பேசவேண்டிய அவசியம் என்ன... அவர் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு தனது பணிகளை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாக இருக்கிறது. அவர்கள்மீது வைக்கப்படும் நியாயமான விமர்சனங்களை ஏன் அசிங்கமான கருத்தாக நினைக்க வேண்டும்... ஆளுநரை அனைத்துக் கோப்புகளிலும் கண்மூடித்தனமாகக் கையெழுத்துப் போடவேண்டும் என்று சொல்லவில்லை.

பரந்தாமன்
பரந்தாமன்

அதேநேரத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஒரு சட்டத்தை நிறைவேற்றி, அவரின் ஒப்புதலுக்கு அனுப்பும்போது அதைத் தாமதப்படுத்துவது எந்த வகையில் சரி... இவர்கள் தாமதப்படுத்துவதால், மக்களுக்குக் கிடைக்கவேண்டிய பலன்களை அவர்கள் தடுக்கிறார்கள். இதை மக்கள் விரோத போக்காகத்தான் கருத வேண்டும். மக்களுக்கு எதிராகவும், அரசியல் சாசனத்துக்கு எதிராகவும் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது. முரசொலி, எமர்ஜென்சியை எதிர்த்து எழுதிய பத்திரிகை. அன்று மத்திய அரசை விமர்சனம் செய்யும்போது ஆதரவு மனப்பான்மையுடன் செயல்பட்ட பாஜக, இப்போது அவர்களை எதிர்த்து எழுதும்போது தவறாகத் தெரிகிறதா... ஆர்.என்.ரவி, அரசியல் ரவியாக இருப்பதால்தான் விமர்சனங்களுக்கு உள்ளாகிறார்" என்று பேசினார்.

தமிழிசையின் கருத்து குறித்து, தமிழ்நாடு பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜனிடம் பேசினோம். ``உண்மைநிலையைச் சொல்லியிருக்கிறார். அவர் வருத்தப்பட்டுக் கூறியுள்ள கருத்தில் நியாயம் இருக்கிறது. ஆளுங்கட்சியின் அதிகாரபூர்வ நாளேட்டில், சகோதரி தமிழிசையின் கருத்துக்கு, அவர்களாகவே ஒரு கதை வசனம் எழுதி, தங்களின் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதில், தமிழ்நாடு ஆளுநருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிலுள்ள அனைத்து ஆளுநர்களுக்கும் சொல்வதுபோல சொல்லப்பட்டிருக்கும் அராஜகமான கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆளுநர்கள் இந்திய அரசியல் சட்டத்துக்கு உட்பட்டுத்தான் செயல்பட முடியும்.

கரு.நாகராஜன்
கரு.நாகராஜன்

இவர்கள், ஆளுநர், தாங்கள் செய்யும் மக்கள் விரோத செயல்களைக் கண்டுகொள்ளாமல், அவர்கள் சொல்லும் அனைத்துத் திட்டங்களுக்கும் கையெழுத்துப் போட்டுவிட வேண்டும் என்று நினைகிறார்கள். தமிழிசை போன்ற ஆளுநர்கள், தன்னிச்சையாக, அறிவுபூர்வமாகப் பேச, எழுதத் தெரிந்தவர்கள், பக்குவமாக அனைத்துப் பிரச்னைகளையும் அணுகத் தெரிந்தவர்களை இந்தக் கூட்டத்துக்குப் பிடிக்காது. இந்தியாவிலேயே, சிறப்பான ஆளுநராக இருந்துவரும் தமிழிசையின் செயல்பாடு முரசொலிக்கு எரிச்சலைத் தந்திருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் அப்படி ஒரு கட்டுரை. ஆளுநர் என்பவர், வாயை மூடி தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைபோல, தாங்கள் சொல்லும் கோப்புகளில் கையெழுத்து போட்டுவிட்டு, அழைக்கும் விழாக்களுக்குச் சென்று காரம், ஸ்வீட் சாப்பிட்டுவிட்டு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள்போல. ஆளுநர் தமிழிசையும், ஆர்.என்.ரவியும் அப்படி இருக்க மாட்டார்கள். இவர்கள் மக்களுக்கு எது தேவையோ அதை மட்டுமே செய்யக்கூடியவர்கள்" என்று பேசினார்.