சோனியா - பாஜக எம்.பி-க்களிடையே வாக்குவாதம்: "ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கேட்கத் தயார்" -ஆதிர் ரஞ்சன்

``காங்கிரஸின் மிக உயர்ந்த தலைவரிடமிருந்து வருத்தத்துக்கு பதிலாக, நாங்கள் அதிக ஆக்ரோஷத்தைக் காண்கிறோம்." - நிர்மலா சீதாராமன்

Published:Updated:
சோனியா  - ஸ்மிருதி இரானி
சோனியா - ஸ்மிருதி இரானி
0Comments
Share

இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, `ராஷ்டிரபத்னி' என காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சௌத்ரி கூறிய சம்பவம் நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ், பாஜக-விடையே பெரும் வாக்குவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் நேற்றுடன் அமலாக்கத்துறை விசாரணையை முடித்த சோனியா காந்தி, இன்று காலை மக்களைவைக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்த நிலையில், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வந்திருந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ``குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குறித்து ஆதிர்ரஞ்சன் சௌத்ரி பேசியது திட்டமிட்ட பாலியல் அவமதிப்பு. இதற்காக குடியரசுத் தலைவரிடமும், நாட்டு மக்களிடமும் சோனியா காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

ஸ்மிருதி இரானி
ஸ்மிருதி இரானி

மறுபுறம் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, ``நாட்டின் மிக உயர்ந்த அரசியல் சாசனப் பதவியில் இருக்கும் ஒரு பெண்ணை அவமானப்படுத்தியதற்கு சோனியா காந்தி ஒப்புதல் அளித்திருக்கிறார். இந்தியாவின் மதிப்புகளுக்கு எதிரானது என்பதை நன்கு அறிந்தே இந்த வார்த்தையை ஆதிர் ரஞ்சன் பயன்படுத்தியிருக்கிறார். எனவே, நாட்டின் முதல் பழங்குடியினப் பெண் குடியரசுத் தலைவரை அவமதித்தற்காக, பழங்குடியின மக்களிடம் சோனியா காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்று மக்களவையில் குரலெழுப்பினர்.

சோனியா காந்தி
சோனியா காந்தி
ட்விட்டர்

இதற்கிடையில் மக்களவையின் காங்கிரஸ்குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன், ``இது வாய் தவறி வந்தது" எனக் கூறி மன்னிப்புக் கேட்டார்

இரு பக்கமும் எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட அவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். அப்போது சபையிலிருந்து இறங்கிச் சென்ற சோனியா காந்தி, பா.ஜ.க எம்.பி ரமா தேவியிடம், ``ஆதிர் ரஞ்சன் ஏற்கெனவே மன்னிப்புக் கேட்டுவிட்டாரே, பிறகு நான் ஏன் இதில் இழுக்கப்படுகிறேன்?" என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது. அப்போது ஸ்மிருதி இரானி இடையில் குறுக்கிட்டு, ``மேடம் நான் உங்களுக்கு உதவலாமா... நான்தான் உங்கள் பெயரை எடுத்தேன்" என்றதாகத் தெரிகிறது. அதற்கு பதிலளித்த சோனியா, ``என்னுடன் பேச வேண்டாம்..." எனக் கூறிவிட்டு நகர்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தையடுத்து நிர்மலா சீதாராமன், ``காங்கிரஸின் மிக உயர்ந்த தலைவரிடமிருந்து வருத்தத்துக்கு பதிலாக, நாங்கள் அதிக ஆக்ரோஷத்தைக் காண்கிறோம்" என்று கூறினார்.

ஆதிர் ரஞ்சன் சௌத்ரி
ஆதிர் ரஞ்சன் சௌத்ரி

பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆதிர் ரஞ்சன், ``தவறுதலாகப் பேசிவிட்டேன். உண்மையில் குடியரசுத் தலைவரை அவமதிக்கும் எண்ணமில்லை. குடியரசுத் தலைவரை அவமதிப்பது குறித்து என்னால் கற்பனையும் செய்ய முடியாது. குடியரசுத் தலைவரின் மனம் புண்பட்டிருந்தால் அவரிடம் மன்னிப்புக் கேட்கவும் தயார். மேலும் இதில், நான் பேசியதற்காக சோனியா காந்தியை ஏன் இழுக்கவேண்டும்... அவர்கள் விரும்பினால் எனக்கு தண்டனை கொடுக்கட்டும். எந்த தண்டனையையும் நான் ஏற்கத் தயார்" எனக் கூறினார்.