டிஜிட்டல் தலையங்கம்: மதவெறி நெருப்பை அணைக்க வேண்டும்!

அந்தக் கருத்துக்காக கன்னையா லால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையானார். அதன்பின் தனக்கு சில அமைப்புகளிடமிருந்து மிரட்டல்கள் வருவதாகவும் அவர் புகார் செய்தார்.

Published:Updated:
டிஜிட்டல் தலையங்கம்
டிஜிட்டல் தலையங்கம்
0Comments
Share
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பட்டப்பகலில் நடைபெற்ற படுகொலை நம் ரத்தத்தை உறையச் செய்கிறது. மத அடிப்படைவாதம் இந்த மண்ணிலிருந்து வேரறுக்கப்பட வேண்டும் என்ற உண்மையை அது உணர்த்துகிறது.

உதய்பூர் நகரின் பரபரப்பான பூட் மஹால் பகுதியில் இருக்கிறது கன்னையா லால் என்பவரின் தையல் கடை. உடை தைக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் போல ஜூன் 28 மதியம் இரண்டரை மணிக்கு கௌஸ் முகம்மது, ரியாஸ் என்ற இரண்டு இளைஞர்கள் அந்தக் கடைக்குப் போனார்கள். அவர்களில் ஒருவருக்கு கன்னையா லால் அளவெடுக்கும்போது, இருவரும் சேர்ந்து அவரைக் கொன்றனர். கத்தியால் கழுத்தை அறுத்து அவர் தலையைத் துண்டாக்க முயன்றதுடன், அந்தக் காட்சியை வீடியோவும் எடுத்திருக்கின்றனர். தாங்கள் செய்த கொலையை ஏதோ புனிதச் செயல் போலக் குறிப்பிட்டு அந்த வீடியோவில் பேசியும் இருக்கின்றனர். கூடவே, பிரதமர் நரேந்திர மோடிக்கும் மிரட்டல் விடுத்திருக்கின்றனர்.

கன்னையா லால்
கன்னையா லால்

இந்தக் கொலையைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் முழுக்க பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. கொலை செய்த இருவரையும் ராஜஸ்தான் போலீஸ் உடனே கைது செய்துள்ளது. மாநிலம் முழுக்க அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க, கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. வதந்திகள் பரவுவதைத் தடுக்க, இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்தப் படுகொலையை ஒரு தீவிரவாதச் செயலாகக் கருதி, தேசியப் புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு மத்திய உள்துறை உத்தரவிட்டிருக்கிறது.

இந்தக் கொலை ஏன் நடந்தது? நுபுர் சர்மா சர்ச்சையே இதன் ஆரம்பப்புள்ளி. ஒரு டி.வி விவாத நிகழ்ச்சியில் நபிகள் நாயகத்தை நுபுர் சர்மா இழிவுபடுத்திப் பேசினார். தான் ஏன் அப்படிப் பேச நேர்ந்தது என்பதற்கு நுபுர் சர்மா ஒரு விளக்கமும் சொன்னார். அந்த விவாத நிகழ்ச்சியில் அவருடன் வாதிட்ட இஸ்லாமிய அமைப்பினர் ஒருவர், லிங்க வழிபாடு குறித்து இழிவுபடுத்தி சில கருத்துகள் சொல்லி தன்னைத் தூண்டியதால்தான் தான் அப்படிப் பேசியதாக நுபுர் சர்மா கூறினார்.

நுபுர் ஷர்மா
நுபுர் ஷர்மா

அதுபோன்ற ஒரு விவாதத்தை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாமல் தவிர்த்திருக்க வேண்டும். முதிர்ச்சியற்ற அணுகுமுறையுடன் அதை ஒளிபரப்பவும் செய்தார்கள். அதைத் தொடர்ந்து பல நாடுகளிலிருந்து கண்டனங்கள் குவிந்தன. நுபுர் சர்மா அதன்பின் பா.ஜ.க-விலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

அந்த சம்பவத்துக்குப் பிறகு ஒரு பக்கம் நுபுர் சர்மாவுக்கு மிரட்டல்கள் வந்தன. இன்னொரு பக்கம் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாகவும் பலர் கருத்துகளைப் பதிவிட்டனர். அவர்களில் ஒருவர்தான் கன்னையா லால். அந்தக் கருத்துக்காக கன்னையா லால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையானார். அதன்பின் தனக்கு சில அமைப்புகளிடமிருந்து மிரட்டல்கள் வருவதாகவும் அவர் புகார் செய்தார்.

Murder (Representational Image)
Murder (Representational Image)

இதுதொடர்பாக இருதரப்பு சமுதாய அமைப்புகளுடன் போலீஸ் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனாலும் கன்னையா லாலுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இந்த சூழலில்தான் அவர் படுகொலை செய்யப்பட்டார். அவருக்குப் பாதுகாப்பு வழங்காத போலீஸ் அதிகாரிகள் இப்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முன்கூட்டியே அவருக்குப் பாதுகாப்பு வழங்கியிருந்தால், இப்படி ஓர் அசம்பாவிதம் நடப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

மத அடிப்படைவாதத்தின் கொடுங்கரங்கள் ஆபத்தானவை. அவற்றின் நிழலில் எப்போதும் வன்முறையே வேரூன்றி விஷச்செடியாக வளர்ந்து நிற்கும். அதற்கு உரமிட்டு வளர்க்கும் அமைப்புகள், கட்சிகள் மிக ஆபத்தானவை. நாகரிக சமூகத்தில் அவற்றுக்கு இடமில்லை. 'தாலிபன் மனநிலைக்கு எதிராக இந்திய இஸ்லாமியர்கள் உறுதியாக நிற்க வேண்டும்' என்று ஆஜ்மீர் தர்கா தலைமை நிர்வாகி கூறியிருக்கிறார்.

கன்னையா லால் படுகொலைக் காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம் என்று போலீஸார் கேட்டுக்கொண்டபிறகும் அது சமூக வலைதளங்களிலும் தனியார் தொலைக்காட்சிகளிலும் தொடர்ந்து காட்சிப்படுத்தப்படுகிறது. இன்னொரு பக்கம் சமூக வலைதளங்களிலும் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. இவை பொதுவெளியில் விவாதங்களாகவும் உருவெடுத்து, இன்னும் ஆபத்தான கருத்துகளைப் பரிமாற வழிவகுக்கும். மதவெறி நெருப்பில் பெட்ரோல் ஊற்ற முயலும் இதுபோன்ற செயல்கள் தடுக்கப்பட வேண்டும்.

கருத்து சுதந்திரம் என்று இதை நியாயப்படுத்த முடியாது. நுனிக்கிளையில் அமர்ந்துகொண்டு மரத்தை வெட்டும் ஆபத்தான முயற்சி இது.