உலகப் போருக்காக ஆம்புலன்ஸ் பயிற்சி; ஹியூமர், மிமிக்ரி... ராணி எலிசபெத் II குறித்த 7 சுவாரஸ்யங்கள்

ராணி எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி, 1952-ல் அரியணைக்கு வந்தார். ராணி எலிசபெத் அசைக்க முடியாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தவர். 70 ஆண்டுகள் ஆட்சி செய்ததன் மூலம் 63 ஆண்டுகள் ஆட்சி செய்த ராணி விக்டோரியாவின் சாதனையை முறியடித்தவர்.

Published:Updated:
ராணி இரண்டாம் எலிசபெத்
ராணி இரண்டாம் எலிசபெத்
Comments
Share

ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகிறார்கள். 70 ஆண்டுகளுக்கு மேல் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் குறித்த சுவாரஸ்யத் தகவல்களின் தொகுப்பு..!


1

`ராணியின் பிறந்தநாள் எப்போது?’

ராணி எலிசபெத் 1926, ஏப்ரல் 21-ம் தேதி பிறந்தாலும், அவரின் பிறந்தநாள் ஜூன் மாதத்தின் முதல் அல்லது இரண்டாம் சனிக்கிழமைகளில்தான் கொண்டாடப்படுகிறது. குறிப்பிட்ட எந்த ஒரு தேதியும் அறிவிக்கப்படுவதில்லை. ஆக, ராணியின் பிறந்தநாள் என்று எந்த ஒரு குறிப்பிட்ட தேதியும் காலண்டரில் இல்லை. ஒவ்வோர் ஆண்டும் அந்நாட்டு அரசுதான் ராணியின் பிறந்தநாளை அறிவிக்கும். அதன்படியே கொண்டாட்டங்கள் அமையும்.


2

வீட்டிலேயே கல்வி..!

அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றவர்களைப்போல் பள்ளிக்கூடங்கள் செல்வதில்லை. இதனால் குழுவாக மற்ற மாணவ, மாணவிகளுடன் கல்வி கற்கும் அனுபவம் அவர்களுக்குக் கிட்டவில்லை. ராணி எலிசபெத்தும் அப்படியே. அவருக்கும் அவரின் தங்கை மார்கரெட்டுக்கும் வீட்டிலேயே கல்வி கற்பிக்கப்பட்டது.


3

ஹியூமர்... மிமிக்ரி..!

ராணி இரண்டாம் எலிசபெத், எப்போதும், எந்த ஒரு உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் முகத்தைத் தீவிரமாக வைத்துக்கொள்ளும் நபராக அறியப்பட்டாலும், அவரை நன்கு அறிந்தவர்கள் அவரை அதிகம் நகைச்சுவை உணர்வுகொண்டவராக அறிவர். அவர் வேடிக்கையாகப் பேசுவதிலும், மிமிக்கிரி செய்யும் திறமையும்கொண்டவர்.கேண்டெர்பரியின் முன்னாள் பேராயர் அவரைப் பற்றிக் குறிப்பிடுகையில், ``அவர் மிகவும் நகைச்சுவை உணர்வுமிக்கவராக இருப்பார்” என்றும், ``அவரின் இந்த குணம் பலர் அறிந்ததில்லை” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.


4

ராணியின் மனதைக் கொள்ளைகொண்ட செல்லப்பிராணிகள்!

ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு செல்லப்பிராணிகள் என்றால் அலாதிப் பிரியம். குறிப்பாக, கார்கி வகை நாய். இளவரசி டயானா முன்னர் இது குறித்துக் குறிப்பிடுகையில், ``செல்லப்பிராணிகள் ராணியின் நகரும் சிவப்புக் கம்பளங்களை போன்றவை. ஏனென்றால் அவை அவர் செல்லும் எல்லா இடங்களுக்கும் கூடவே செல்லும் காரணத்தால்” என்கிறார்.


5

`சொந்த வருமானத்துக்கு வரி செலுத்துகிறேன்!’

இரண்டாம் எலிசபெத் ராணியாகவே இருந்தாலும், குறைந்தபட்சம் 1992-ம் ஆண்டிலிருந்து வரிகளைச் செலுத்திவருகிறார் என்பது தகவல். 1992-ல் ராணியின் வார இறுதி இல்லமான விண்ட்சர் கோட்டை தீயினால் நாசமானபோது, அதைப் பழுது பார்ப்பதற்காக மில்லியன் கணக்கான பவுண்டுகள் செலுத்துவதற்கு எதிராக பொதுமக்கள் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்தனர். அப்போது அவர் தனது தனிப்பட்ட வருமானத்துக்கு வரி செலுத்த தானாக முன்வந்து ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


6

அடம்பிடித்து பெற்ற ஓட்டுநர் பயிற்சி!

எலிசபெத் எப்போதும் மக்களுக்காக தனது பங்களிப்பைத் தர ஏதாவது செய்துகொண்டேயிருப்பார். இரண்டாம் உலகப்போர் சமயங்களில் தன்னுடைய பெற்றோர்களிடம் போராடி ஓட்டுநர் பயிற்சிபெற்றார். இதன் மூலம் ஆம்புலன்ஸ் மற்றும் லாரி ஓட்டும் பயிற்சியையும் பெற்றார். சில மாதங்களில் அவர் ஜூனியர் கமாண்டர் ஆகும் வாய்ப்பையும் பெற்றார். இப்படி அவர் வாழ்நாளில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் பல. பிரிட்டன் வரலாற்றில் நீண்டகாலம் ஆட்சிபுரிந்த ராணி எலிசபெத் அமைதியான முறையில் விடைபெற்றார்.


7

நீண்ட நாள்கள் ஆட்சி செய்து சாதனை!

1926, ஏப்ரல் 21-ல் பிறந்த ராணி எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி, 1952-ல் அரியணை ஏறினார். ராணி எலிசபெத் அசைக்க முடியாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை அதிக ஆண்டுகள் ஆட்சிசெய்தவர். எழுப்ச்து ஆண்டுகள் ஆட்சி செய்ததன் மூலம் 63 ஆண்டுகள் ஆட்சி செய்த ராணி விக்டோரியாவின் சாதனையை முறியடித்திருக்கிறார்.