அண்ணா அறிவாலயத்தில் முதல்வரைச் சந்தித்து புகார் வாசித்த கூட்டணிக் கட்சித் தலைவர்கள்? - நடந்தது என்ன?

அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினைக் கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்தித்து, பல்வேறு விஷயங்கள் குறித்து 20 நிமிடங்களுக்கும் மேலாகப் பேசியிருக்கின்றனர்.

Published:Updated:
அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்
0Comments
Share

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெறவிருக்கிறது. ஆளும் பா.ஜ.க சார்பாக திரௌபதி முர்முவும், பா.ஜ.க-வை எதிர்க்கும் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், கம்னியூஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பாக யஷ்வந்த் சின்ஹாவும் களம் காணுகிறார்கள்.

யஷ்வந்த் சின்ஹா, திரௌபதி முர்மு
யஷ்வந்த் சின்ஹா, திரௌபதி முர்மு

அதன்படி, தங்களுக்கான ஆதரவைத் திரட்டுவதில் இருவரும் தீவிரமாக இறங்கியுள்ளனர். பா.ஜ.க கூட்டணியில் இல்லாத மாநிலக் கட்சிகளின் ஆதரவைப் பெற யஷ்வந்த் சின்ஹா மாநிலம்வாரியாக தலைவர்களைச் சந்தித்து தனக்கான ஆதரவைத் திரட்டிவருகிறார்.

அதன்படி, சென்னைக்கு ஜூன் 30-ம் தேதி வந்த அவர், அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கத்தில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து தனக்கான ஆதரவு கோரும் கூட்டத்தில் பங்கேற்றார்.

யஷ்வந்த் சின்ஹா
யஷ்வந்த் சின்ஹா

தி.மு.க தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். அதேபோல, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் செல்வப் பெருந்தகை (காங்கிரஸ்), நாகை மாலிக் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), ராமச்சந்திரன் (இந்திய கம்னியூஸ்ட்), சிந்தனைச் செல்வன் (வி.சி.க), இந்திய முஸ்லிம் லீக் எம்.பி நவாஸ் கனி, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, கொங்கு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்று, தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.

கூட்டம் நிறைவுபெற்ற பின்னர், யஷ்வந்த் சின்ஹா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அரங்கின் உள்ளே இருந்த முதல்வர் ஸ்டாலினைக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்தித்துப் பல்வேறு விஷயங்கள் குறித்து 20 நிமிடங்களுக்கும் மேலாகப் பேசியுள்ளனர். அப்போது வைகோவின் உடல்நலம் குறித்து ஸ்டாலின் கேட்டறிந்தபோது, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அவரைச் சூழ்ந்தனர்.

ஸ்டாலினுடன் வைகோ
ஸ்டாலினுடன் வைகோ

அப்போது, தி.மு.க-வினர் நடவடிக்கைகள் குறித்தும் பல புகார்களை முன்வைத்துள்ளனராம். குறிப்பாக நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பல இடங்களில், தி.மு.க-வினர் வெற்றிபெற்றனர். அவர்கள் பதவி விலகுமாறு ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டும், பலரும் பதவி விலகாமல் இருக்கின்றனர்.

முதல்வர் ஸ்டாலின், வைகோ, வேல்முருகன்
முதல்வர் ஸ்டாலின், வைகோ, வேல்முருகன்

ராஜினாமா செய்த பதவிகளுக்கு மீண்டும் தேர்தல் நடத்தப்படும்போது, அதிலும், தி.மு.க-வினர் வெற்றி பெறுவதாக தங்களின் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரிக்குமாறு, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரிடம் ஸ்டாலின் கூறியிருக்கிறார். அதேபோல, அமைச்சர்கள் மீதும் சில புகார்களை வாசித்ததாகவும், இது குறித்து கவனிப்பதாக முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், போலீஸார் நடவடிக்கை குறித்தும், ஆட்சி குறித்தும், பா.ஜ.க-வை எதிர்கொள்ளும்விதம் குறித்தும் விவாதம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.