அதிமுக:`எடப்பாடியை பொதுச்செயலாளராகத் தேர்வு செய்தது செல்லாது’-பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு விவரங்கள்

"ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது, சட்டவிரோதமானது என்று அறிவித்து அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்துசெய்ய வேண்டும்." - ஓ.பி.எஸ்

Published:Updated:
அதிமுக - ஓபிஎஸ் - இபிஎஸ்
அதிமுக - ஓபிஎஸ் - இபிஎஸ்
0Comments
Share

கடந்த ஜூன் 23-ம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வுசெய்யப்பட்டதை எதிர்த்தும், ஜூலை 11-ம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்ட பொதுக்குழுவுக்குத் தடை கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் தரப்பு வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ஜூலை 11-ம் தேதி காலை பொதுக்குழு கூடுவதற்கு 15 நிமிடங்கள் முன்பு, ஓபிஎஸ்-ஸின் மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

இதையடுத்து, அ.தி.மு.க பொதுக்குழு நடத்தப்பட்டு, அதில் கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டார். ஓ.பி.எஸ் உள்ளிட்ட பலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

ஓ.பி.எஸ். இ.பி.எஸ் - அதிமுக
ஓ.பி.எஸ். இ.பி.எஸ் - அதிமுக

தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், "அ.தி.மு.க பொதுக்குழுவைக் கூட்ட உரிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியே உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், எங்கள் தரப்பு நியாயம் எதையுமே தனி நீதிபதி கருத்தில்கொள்ளவில்லை.

ஒருங்கிணைப்பாளரின் அனுமதியின்றி இந்தப் பொதுக்குழு நடந்திருக்கிறது. எனவே, ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது, சட்டவிரோதமானது என்று அறிவித்து அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்துசெய்ய வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் கடந்த ஜூலை 29-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பையும் விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை `உயர் நீதிமன்றமே விசாரிக்கலாம். மூன்று வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பு இன்று வெளியாவதற்கு முன்பு ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் தரப்பினர் தனித்தனியாக அவரவர் ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பில், " அதிமுக-வில் ஜூன் 23-ம் தேதிக்கு முன் இருந்த நிலையையே பின்பற்ற வேண்டும். அதிமுக-வின் பொதுக்குழுக் கூட்டம், செயற்குழுக் கூட்டம் தனித்தனியே நடத்தப்படக் கூடாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் நடத்த வேண்டும். பொதுக்குழுவைக் கூட்ட ஒரு சட்ட ஆணையரைக் கட்சி நியமிக்க வேண்டும். அதேபோல, கட்சி சார்ந்து தனிக் கூட்டம் நடத்தக் கூடாது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வானது செல்லாது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பு வெளியானது முதல் பன்னீர் தரப்பு ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடிவருகிறார்கள்.