இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு! - ஒபிஎஸ் சொந்த ஊரான தேனியில் கொண்டாடிய அதிமுக-வினர்

அ.தி.மு.க முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்-ன் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் இ.பி.எஸ்-க்கு ஆதரவாக அ.தி.மு.க-வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

Published:Updated:
அ.தி.மு.க-வினர்
அ.தி.மு.க-வினர்
0Comments
Share

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு அதிமுக-வுக்கு தலைமையேற்பதில் பல்வேறு குழப்பங்கள் நிலவு வருகின்றன. ஜெயலலிதாவின் தோழி சசிகலா தன்னை அ.தி.மு.க பொதுச்செயலாளர் எனக்கூறிக்கொண்டு இரட்டை இலை சின்னம்கொண்ட கொடியை காரில் கட்டிய வண்ணம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

பட்டாசு வெடித்து கொண்டாடிய அதிமுகவினர்
பட்டாசு வெடித்து கொண்டாடிய அதிமுகவினர்

நிரந்தர பொதுச்செயலாளர் பதவியை அப்படியே வைத்துவிட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கி ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இரட்டைகுழல் துப்பாக்கி எனக்கூறி கட்சியில் செயல்பட்டுவந்தனர். இந்நிலையில் இ.பி.எஸ் தரப்பினர் கட்சியில் ஒற்றைத் தலைமை கோஷத்தை முன்வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பி.எஸ் இரட்டைத் தலைமையே தொடர வேண்டும் என உறுதியாக இருந்தார்.

இதையேற்காத இ.பி.எஸ் தரப்பு கடந்த ஜூன் 23-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தது. அதற்கு தடைகோரி நீதிமன்றம் சென்ற ஓ.பி.எஸ் இரவோடு இரவாக ஏற்கெனவே கையெழுத்தாகிய தீர்மானங்களைத் தவிர வேறு தீர்மானங்கள் முடிவுகள் எடுக்கப்படக் கூடாது எனத் தீர்ப்பை பெற்றார். அன்றைய தினம் அனைத்துத் தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாகக் கூறி ஜூலை 11-ம் தேதியில் மீண்டும் பொதுக்குழு கூடும் என அறிவித்திருந்தனர்.

இனிப்பு வழங்கிய அதிமுகவினர்
இனிப்பு வழங்கிய அதிமுகவினர்

இதற்கிடையே தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. ஜக்கையன், முன்னாள் எம்.பி-யும், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளருமான பார்த்திபன், தேனி நகரச் செயலாளர் கிருஸ்ணகுமார், பொருளாளர் சோலைராஜ், ஆண்டிபட்டி மேற்கு ஒன்றியச் செயலாளர் லோகிராஜன், கிழக்கு ஒன்றியச் செயலாளர் வரதராதன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அனைவரும் இ.பி.எஸ்-க்கு ஆதரவு தெரிவித்தனர். இதேபோல அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் இ.பி.எஸ்-க்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இன்று நடந்த பொதுக்குழுவுக்கும் ஓ.பி.எஸ் தடைகோரியிருந்த நிலையில், தடையில்லை என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக இ.பி.எஸ் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஓ.பி.எஸ்-ஸை பொருளாளர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கம்பத்தில் அதிமுகவினர்
கம்பத்தில் அதிமுகவினர்

இதனை வரவேற்று தமிழ்நாடு முழுவதும் உள்ள இ.பி.எஸ் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். அதன்படி, அ.தி.மு.க முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்-ன் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் இ.பி.எஸ்-க்கு ஆதரவாக அ.தி.மு.க-வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

அதிமுகவினர்
அதிமுகவினர்

தேனி அ.தி.மு.க நகர அவைத் தலைவர் முருகேசன் தலைமையில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நேரு சிலை மும்முனை சந்திப்பிலும், அல்லிநகரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியிலும் கூடிய அ.தி.மு.க-வினர், `இடைக்கால பொதுச்செயலாளர் இ.பி.எஸ் வாழ்க!' என கோஷம் எழுப்பினர். பின்னர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கம்பம் பகுதியில் இ.பி.எஸ்-க்கு துணைநிற்கும் ஜக்கையனின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.