நிதிஷின் பீகார் ஃபார்முலாவை மற்ற மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கினால்... பாஜக-வின் வியூகம் இனி?!

``மாநிலக் கட்சிகளை அழிக்க வேண்டும் என்ற பாஜக-வின் செயல்பாட்டுக்குக் கிடைத்த பதில்தான் இன்று பீகாரில் நாங்கள் இருவரும் ஒன்று சேர்ந்திருப்பது”- தேஜஸ்வி யாதவ்

Published:Updated:
நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ்
நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ்
0Comments
Share

பீகாரில் 2020-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 தொகுதிகள், பாஜக 74 தொகுதிகள் என மொத்தமுள்ள 243 இடங்களில், 127-ஐ கைப்பற்றி ஆட்சி அமைத்தன. ஐக்கிய ஜனதா தளத்தைவிட, பாஜக அதிக இடங்களில் வென்றபோதும், நிதிஷ் குமாருக்கு முதலமைச்சர் பதவியை விட்டுத்தந்தது பாஜக. இருந்தபோதும் அடிக்கடி கூட்டணிக் கட்சிகளின் உறவில் விரிசல் தொடர்ந்தது. இதற்கிடையே கூட்டணிக் கட்சியான ஜேடியூ-வுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் தராமல் பாஜக வேடிக்கை காட்டியது. பின்னர் ஜேடியூ தரப்பில் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற ஆர்.பி.சிங்கையும் தன்பக்கம் வளைத்துப்போட்டது பாஜக. இதில் அதிருப்தியடைந்த நிதிஷ் குமார், ஆர்.பி.சிங்குக்கு முடிவுகட்டும் வகையில், மாநிலங்களவை எம்பி-யாக நீடிக்க முடியாதபடி அவருக்கு சீட் தருவதற்கு மறுத்தார். அதன் பிறகு இருவருக்கும் இடையே சில கசப்பான அனுபவங்களால் கட்சியிலிருந்து விலகினார் ஆர்.பி சிங்.

நிதிஷ்குமார். ஆர்.பி.சிங்
நிதிஷ்குமார். ஆர்.பி.சிங்

மகாராஷ்டிரா பாணியில் ஆர்.பி.சிங் மூலமாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சுக்குநூறாக உடைத்து, ஆட்சியைப் பிடிக்க பாஜக திட்டமிட்டதை உணர்ந்த நிதிஷ், பாஜக-வை முற்றிலும் எதிர்க்கத் துணிந்தார். கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற பாஜக உடனான உறவை முறிக்க முடிவு செய்தவர் எம்.பி., எம்.எல்.ஏ-க்களின் அவசரக் கூட்டத்தைக் கூட்டினார். பிறகு ஆளுநர் பாகு சவுகானை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். பாஜக-விலிருந்து விலகிய நிதிஷ் குமாருக்குத் தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்தன. இதன்படி ஆறு கட்சிகளின் 164 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் 8-வது முறையாக நிதிஷ் குமார் முதல்வராகவும், துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் ஆகஸ்ட் 10-ல் பதவி ஏற்றனர்.

நிதிஷ் குமார் தனது அரசியல் சவால்கள் மூலம் பாஜக-வின் உயர்மட்டத் தலைமையை அதிர்ச்சியடைய வைத்ததாக நம்பப்படுகிறது. ஏனெனில், 2024 தேர்தலுக்கு முன்பு பீகார் போன்ற மாநிலத்தின் அதிகாரத்தை இழப்பது பாஜக-வுக்கு அரசியல்ரீதியாகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், இது போன்று தனது கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளை வியப்படைய வைப்பது நிதிஷ் குமாருக்கு இது முதன்முறையல்ல.

பாஜக-வுடன் நிதிஷ் குமார்

இதுவரை ஏழு முறை பீகாரின் முதலமைச்சராகப் பதவி வகித்துள்ள நிதிஷ் குமார், பல தலைமுறை பாஜக-வினருடன் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்த பீகார் தலைவர்களில் ஒருவர். அடல் பிஹாரி வாஜ்பாய் காலத்திலிருந்து அத்வானி, நரேந்திர மோடி, அமித் ஷா வரை பாஜக-வுடன் இணைந்து பணியாற்றியவர். இது மட்டுமின்றி, 20 ஆண்டுகளுக்கும் மேலான தனது அரசியல் பயணத்தில், பா.ஜ.க-வின் உயர்மட்டத் தலைவர்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பவர்.

கடந்த 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட நிதிஷ்குமார் தோல்வியடைந்தார். பின்னர் 1985-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு முதல்முறையாக வெற்றி பெற்றார். 1990-ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவுக்கு ஆதரவு கொடுத்தவர், சிறிது காலத்தில் அவருடன் மோதலில் ஈடுபட்டார். இதனால் லாலுவுக்கு எதிராகத் தனது 14 ஆதரவு எம்.பி-க்களுடன் விலகி, ‘சமதா கட்சி’ என்ற புதிய கட்சியை உருவாக்கினார். பின்னர் 1995-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அவரது கட்சி ஏழு இடங்களில் வென்றது.

நிதிஷ்குமார்-மோடி
நிதிஷ்குமார்-மோடி

அப்போது லாலுவுக்கு எதிராகத் தீவிரமாகச் செயல்பட்ட நிதிஷ், முதன்முறையாக வாஜ்பாய் காலத்தில் 1988-ம் ஆண்டு பாஜக-வுடன் கூட்டணி அமைத்தார். இதன் மூலம் 2000-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், பதவி ஏற்ற ஏழு நாள்களில் நிதிஷ் ஆட்சி முடிவுக்கு வந்தது. பின்னர் 2005 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக துணையுடன் வெற்றிபெற்று பீகாரின் முதல்வர் ஆனார். எனினும் 2013-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாஜக, ஜேடியூ கூட்டணி முறிந்தது.

 நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ்
நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ்

அதைத் தொடர்ந்து 2015-ம் ஆண்டு நடந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில், வலுவான மோடி அலையை வீழ்த்த ஜேடியூ, லாலுவின் ஆர்ஜேடி இணைந்த மெகா கூட்டணி அமைக்கப்பட்டது. இக்கூட்டணி அமைய லாலு முக்கியப் பங்கு வகித்தார். பாஜக-வுடன் கடும் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்தத் தேர்தலில் நிதிஷ் குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிட்டதால், தேஜஸ்வி யாதவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. லாலுவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனை நடத்திவந்த நிலையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இக்கூட்டணி முடிவுக்கு வந்தது. இதனையடுத்து மீண்டும் பாஜக-வுடன் கூட்டணி அமைத்த நிதிஷ் குமார் 2017-ம் ஆண்டு பீகாரில் புதிய ஆட்சி அமைத்தார். இந்த நிலையில் ஆர்.பி.சிங்கை வைத்து தனக்குக் கட்டம் கட்ட பாஜக திட்டமிட்டதாகச் சொல்லப்பட்ட நிலையில், அதன் கூட்டணியை முறித்து இப்போது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் இணைந்துள்ளார் நிதிஷ் குமார்.

பாஜக விரைவில் நாடு முழுவதும் தனித்துவிடப்படும்!

தேஜஸ்வி யாதவ் நிதிஷ் குமாருடன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ``பீகாரில் பாரதிய ஜனதாவைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் முதல்வராக நிதிஷ் குமாரை ஏற்கிறார்கள். எங்கள் முன்னோர்களின் பாரம்பர்யத்தை யாராலும் எடுத்துக்கொள்ள முடியாது. நாங்கள் அனைவரும் பாஜக-வின் நிகழ்ச்சி நிரலை பீகாரில் செயல்படுத்தக் கூடாது என்று விரும்பினோம். என் தந்தை லாலுஜி அத்வானியின் ரத யாத்திரையை பீகாரில் தடுத்து நிறுத்தினார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பீகாரில் மட்டுமல்ல, நாடு முழுவதும் மாநிலக் கட்சிகளைச் சிதைத்துவிட வேண்டும் என்பதுதான் பாஜக-வின் திட்டம். ஆனால் இதை பீகார் மக்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. மாநிலக் கட்சிகளை அழிக்க வேண்டும் என்ற பாஜக-வின் செயல்பாட்டுக்குக் கிடைத்த பதில்தான் இன்று பீகாரில் நாங்கள் இருவரும் ஒன்று சேர்ந்திருப்பது.

தேஜஸ்வி
தேஜஸ்வி
Facebook/Tejashwi Yadav

இன்று பீகாரில் மட்டுமல்ல, வட இந்தியா முழுவதும் பாஜக தனித்துவிடப்பட்டிருக்கிறது. உத்தரப்பிரதேசம் தவிர பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், டெல்லி, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பாஜக-வுக்கு எந்தக் கூட்டணிக் கட்சியும் இல்லை. பாஜக விரைவில் நாடு முழுதும் தனித்துவிடப்படும். பீகார் முதல்வராக நிதிஷ் குமார் நீடிப்பார். அவர் பீகார் மற்றும் பீகார் மக்களின் நலனுக்காக முன்னுதாரணமான பணிகளைச் செய்துள்ளார். அவர் செய்த பணிகளை யாரும் மறக்க மாட்டார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் இருப்பதைப்போல எங்களுக்கும் தகராறுகள் இருந்தன. இப்போது அவற்றை மறந்துவிடுங்கள். மாமாவும் மருமகனும் ஒன்றாகக் கைகோத்து பீகாரின் சாமானிய மக்களின் நலனுக்காகப் பணியாற்ற உறுதி பூண்டுள்ளோம்” என்று கூறினார்.

தேஜஸ்வியை மோடி தன்வசப்படுத்தலாம்!

இது தொடர்பாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, “இந்த ஃபார்முலா மற்ற மாநிலங்களில் தொடராது. காரணம் பாஜக ஆதரவில் வேறு யார் இருக்கிறார்கள்... பாஜக நிதிஷ் குமாரை முதல்வராகச் சொல்லும்போது தேஜஸ்வி யாதவை விட்டுவிட்டு பாஜக பக்கம் நிதிஷ் குமார் வரவில்லையா... அதே மாதிரி தேஜஸ்வி யாதவை முதல்வராகச் சொல்லி அவருக்குண்டான பாதிப்புக்கு இழப்பீடு செய்து கொடுக்கிறோம் என்று பாஜக சொன்னால் அவரும் பாஜக பக்கம் வரலாமே... எல்லோரும் அரசியல் லாபத்துக்குத்தானே செயலாற்றுகிறார்கள்... பாஜக எதிர்ப்பு என்கிற புள்ளியில் இல்லையே... பாஜக எதிர்ப்பு என்றால் அது காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள்தானே... அதில் தேஜஸ்வி யாதவ்கூட சரி, எப்படி நிதிஷ் குமார் வருவார்... பாஜக, தேஜஸ்வி சண்டையில் லாபத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறார் நிதிஷ் குமார். பீகாரைப் பொறுத்தவரை ஜேடியூ, பாஜக-தான் முதல் இரண்டு கட்சிகள். அடுத்த மூன்றாவது கட்சிதான் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம். எனவே முதல் இரண்டு கட்சிகள் சமரசம் செய்துகொள்ளும்போது, மூன்றாவது கட்சி ஒன்றுமில்லாமல் போய்விடும். இதுதான் பீகாரில் நடக்கிறது.

ரவீந்திரன் துரைசாமி
ரவீந்திரன் துரைசாமி

தமிழ்நாட்டில் ஒரு காலகட்டத்தில் கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்கும், கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் இருந்த பகையைப் பயன்படுத்தி மூன்றாவது கட்சியாக இருந்த மூப்பனார் 27, 30 சீட் என எம்.பி சீட்டை காங்கிரஸுக்கு உயர்த்தினாரோ, அதேபோல் மூன்றாவது கட்சியாக இருக்கும் நிதிஷ் முதல்வராக இருந்துகொண்டிருக்கிறார். இது 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஏனெனில், தேஜஸ்வி யாதவை மோடி தன்வசப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ‘தேவகவுடா, மாயாவதி எங்களைப் பயன்படுத்தியதால் அவர்கள் வாக்குவங்கியில் எந்த பாதிப்பும் இல்லை. நீங்களும் தாராளமாக எங்களோடு இருக்கலாம். பெரிய செல்வாக்கான நீங்கள் ஏன் சின்ன கட்சிக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும்’ என பாஜக, தேஜஸ்வியிடம் டீல் பேசலாம். இதுதான் பாஜக அடுத்தகட்ட நகர்வுக்கான வாய்ப்பாக இருக்கிறது” என்கிறார்.