``50 ஆண்டுகளாகிவிட்டன... ஆனாலும் உச்ச நீதிமன்றத்தின்மீது நம்பிக்கையின்மையை உணர்கிறேன்" - கபில் சிபல்

``உண்மையைச் சொல்லப்போனால் சில சென்சிட்டிவான வழக்குகள் குறிப்பிட்ட நீதிபதிகள் முன்பே விசாரணைக்கு வருகின்றன. பின்னர், அந்த வழக்குகளின் முடிவுகள் எப்படியாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும்." - கபில் சிபல்

Published:Updated:
கபில் சிபல்
கபில் சிபல்
0Comments
Share

மூத்த வழக்கறிஞரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல், இந்த ஆண்டோடு, உச்ச நீதிமன்றத்தில் கிட்டத்தட்ட 50 ஆண்டுக்கால பயிற்சியை நிறைவு செய்கிறார். காங்கிரஸில் மூத்த தலைவராக இருந்த கபில் சிபல், அண்மையில் நடந்த நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலின்போது திடீரென கட்சியிலிருந்து விலகி, சமாஜ்வாடியின் ஆதரவுடன் சுயேச்சையாகத் தேர்தலில் போட்டியிட்டு மாநிலங்களவை உறுப்பினரானார். இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பல முக்கிய வழக்குகளில் வழக்கறிஞராக இருந்த கபில் சிபல், உச்ச நீதிமன்றம் மற்றும் அதன் சமீபத்திய தீர்ப்புகள்மீதான தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

 கபில் சிபல்
கபில் சிபல்

டெல்லியில் கடந்த சனிக்கிழமையன்று, மக்கள் தீர்ப்பாயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய கபில் சிபல், ``இந்த ஆண்டோடு உச்ச நீதிமன்றத்தில் 50 வருட பயிற்சியை நான் நிறைவு செய்கிறேன். ஆனால், இந்த 50 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த நீதிமன்றத்தின்மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்று உணர்கிறேன். நீங்கள் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட முற்போக்கான தீர்ப்புகளைப் பற்றி பேசுகிறீர்கள். ஆனால், தரைமட்டத்தில் என்ன நடக்கிறது என்பதில் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

தனியுரிமை குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இருப்பினும் அமலாக்கத்துறை அதிகாரிகள் உங்கள் வீட்டுக்கு வருகிறார்கள். உங்கள் தனியுரிமை எங்கே... பண மோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளை நிலைநிறுத்த, அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் பரந்த அதிகாரங்களை வழங்கியது. அதேசமயம், சத்தீஸ்கரில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின்போது பாதுகாப்புப்படையினரால் 17 பழங்குடியினரை நீதிக்குப் புறம்பாகக் கொன்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் குறித்து விசாரணை கோரி 2009-ல் தாக்கல்செய்யப்பட்ட மனுவை நிராகரித்தது. நான் 50 ஆண்டுக்காலம் பணியாற்றிய நீதிமன்றம் குறித்து இப்படிப் பேச விரும்பவில்லை. ஆனால், நான் பேசாவிட்டால் வேறு யார் பேசுவது... உண்மையைச் சொல்லப்போனால் சில சென்சிட்டிவான வழக்குகள் குறிப்பிட்ட நீதிபதிகள் முன்பே விசாரணைக்கு வருகின்றன. பின்னர், அந்த வழக்குகளின் முடிவுகள் எப்படியாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும்" எனத் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினார்.