`அதிமுக-வுக்கு ஒற்றைத் தலைமை தேவை’... திமுக-வை எதிர்க்கவா, பாஜக-விடம் இருந்து விடுபடவா?

``ஒருவேளை பன்னீர் சட்டப் போராட்டம் நடத்தும்போது இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் கூட தேர்தல் நடப்பதற்குள் சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ் வழியில் பொதுக்குழு பெரும்பான்மை மூலம் மீட்டுவிடலாம் என்பதுதான் எடப்பாடியின் கணக்கு” என்கிறார்கள்.

Published:Updated:
அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு
0Comments
Share

கூச்சல், குழப்பம், சலசலப்பு என அ.தி.மு.க பொதுக்குழு நடந்து முடிந்திருக்கிறது. 23 வரைவு தீர்மானங்களும் செல்லாது என அறிவித்திருக்கிறார்கள். ஜூலை 11-ம் தேதி மீண்டும் அ.தி.மு.க பொதுக்குழு கூடும் என அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்திருக்கிறார். ஓ.பி.எஸ் தரப்பு பாதியிலேயே கூட்டத்தைவிட்டு வெளிநடப்பு செய்தார்கள்.

பின் செய்தியாளர்களை சந்தித்த துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், ``சட்டப்படி கட்சியின் விதிகளுக்கு, நீதிமன்ற ஆணைக்கு உட்பட்டு பொதுக்குழு நடக்கவில்லை. இது ஓர் ஓரங்க நாடகம்" என்று விமர்சித்திருந்தார். அடுத்தகட்டமாக சட்டரீதியான வாய்ப்புகளை நோக்கி நகர்ந்த ஓ.பி.எஸ் தரப்பு, ஜூலை 11 பொதுக்குழுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிராக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளதாக தகவல் வெளியானது.

இது ஒருபுறம் இருக்க, “நேற்றைய பொதுக்குழுக் கூட்டத்தின் மூலம் எடப்பாடி பழனிசாமி அதிகாரபூர்வற்ற வகையில் அ.தி.மு.க-வை கைப்பற்றி அதன் பொதுச் செயலாளர் ஆகிவிட்டார். அ.தி.மு.க-வை பலப்படுத்துவது மட்டுமே எடப்பாடியின் நோக்கம்” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இதோடு, “ஓ.பி.எஸ். பின்னால் கட்சி இல்லை, ஓ.பி.எஸ். ஒவ்வொரு முன்னேற்றத்தையும் எதிர்பார்த்துக் காத்திருந்த சசிகலாவுக்கு இது ஏமாற்றம். ஓ.பி.எஸ், சசிகலா கை கோர்த்தாலும் ஒன்றும் ஆகப் போவதில்லை” என்கிறார்கள்.

அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு

மேலும், “16-ஆம் தேதி பேட்டியளித்த பன்னீர்செல்வம், ``பிரதமர் மோடி அறிவுறுத்தியதால்தான் துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டேன்” என்று சொன்னார். இதன் மூலம் இன்னமும் அவர் பா.ஜ.க-வின் தயவை நாடுவதை அவரே சூசகமாக வெளிப்படுத்தினார். இரட்டைத் தலைமை என்று இருப்பதால்தான் அ.தி.மு.க-வுக்குள் பிற கட்சிகள் தலையிடுகின்றன. ஒற்றைத் தலைமை என்பது அ.தி.மு.க-வின் உட்கட்டமைப்புக்கு மட்டுமல்ல, அதன் பழைய பிம்பத்தை மீட்டெடுப்பதற்கும் பயன்படும் என்று கருதுகிறார் எடப்பாடி.

எனவேதான் கச்சிதமாகத் தேர்தலுக்கு இன்னும் இரு வருடங்கள் இருக்கும் நிலையில் இந்த பொதுக்குழுவை ஒற்றைத் தலைமையின் களமாக மாற்றினார். ஒருவேளை பன்னீர் சட்டப் போராட்டம் நடத்தும்போது இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் கூட தேர்தல் நடப்பதற்குள் சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ் வழியில் பொதுக்குழு பெரும்பான்மை மூலம் மீட்டுவிடலாம் என்பதுதான் எடப்பாடியின் கணக்கு” என்கிறார்கள்.

தராசு ஸ்யாம்
தராசு ஸ்யாம்

இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், “திமுக எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைக்க முயற்சி நடக்கும். எனவே பாரதிய ஜனதா, அண்ணா திமுக கூட்டணி தொடரும். அதே நேரம் ஒற்றைத் தலைமை மட்டுமே அ.தி.மு.க-வுக்கு வெற்றியைத் தேடித் தராது. மக்கள் நம்பிக்கையைப் பெற வேண்டும்” என்றவரிடம் ‘ஓ.பி.எஸ் நடத்தும் சட்ட போராட்டம் அவருக்கு சாதகமாக அமையுமா?’ என்கிற கேள்வியினை முன் வைத்தோம். “ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்திற்குப் போனாலும் சாதகம் தராது. ஏனென்றால் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் தாவா(உரிமை / பாத்தியதை கோரி வாதிடுதல்). அதை எதிர்த்தரப்பு சுட்டிக்காட்டும். அனேகமாகத் தடை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதற்குள் ஓபிஎஸ் கட்சியை விட்டு நீக்கப்படுவார்” என்றார்.