அதிமுக: ஓ.பி.எஸ்-ஸை மொத்தமாக ஓரங்கட்டப் பார்க்கிறதா எடப்பாடி தரப்பு?

பன்னீர்தரப்பிலிருந்து வரும் முட்டுக்கட்டைகளை எதிர்கொள்ள எடப்பாடித் தரப்பில் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டிருப்பதாக அதிமுக வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Published:Updated:
இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்
இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்
0Comments
Share

அதிமுக-வில் பனிப்போராக இருந்துவந்த இரட்டைத் தலைமைகளுக்கு இடையிலான யுத்தம் வெளிப்படையாக வெடித்து, அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது. ஒருபக்கம் பொதுக்குழு நடத்துவதற்கான இடத் தேர்வு, ஓ.பி.எஸ் மீதான துரோகப் புகார் வாசிப்புகள் என எடப்பாடி தரப்பு களத்தில் இறங்க, மறுபுறம் தங்கள் தரப்பு வாதங்களைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல், தேர்தல் ஆணையத்தில் முறையீடு என ஓ.பி.எஸ் தரப்பும் மல்லுக்கட்டுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், பொதுக்குழுவில் தன்னை ஒற்றைத் தலைமையாக நிறுவிக்கொள்ள உச்சபட்சமாக எந்த முடிவுக்கும் செல்லலாம் என எடப்பாடி தரப்பில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக வெளியாகும் தகவல்கள்தான் தற்போது அதிமுக வட்டாரத்தில் பேசுபொருளாக இருக்கின்றன.

அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு

பேன் இந்தியா திரைப்படங்களுக்கு இணையாக அதிமுக-வில் நிகழ்ந்துவரும் அதிரடிக் காட்சிகளுக்கான டீசராக கடந்த 14-ம் தேதி, அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்டச் செயலாளர் கூட்டம் அமைந்தது. தற்போதைய சூழலில் கட்சிக்கு ஒற்றைத் தலைமைதான் தேவை என்கிற சரவெடியைப் பற்றவைத்தார், திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் மூர்த்தி. அடுத்தடுத்து அரங்கேறிய காட்சிகளால், அதிமுக-வில் இரட்டைத் தலைமை க்ளைமாக்ஸை நெருங்கிவிட்டது என நினைத்த வேளையில், இல்லை இது இடைவேளைதான் எனப் பொதுக்குழு நடைபெறவிருந்த நாள் காலையில் உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மூலமாக ஓர் அதிர்ச்சி கொடுத்தார் ஓ.பன்னீர்செல்வம். அதாவது ஏற்கெனவே பேசிமுடிவெடுக்கப்பட்ட 23 தீர்மானங்களைத் தவிர வேறு எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்றக் கூடாது என ஓ.பி.எஸ் தரப்பு நீதிமன்றத்தில் தடை வாங்கியது.

அதைத் தொடர்ந்து, ஏற்கெனவே முடிவெடுக்கப்பட்ட 23 தீர்மானங்களை மட்டுமல்லாமல், ஓ.பி.எஸ்-ஸையும் முடிந்த அளவு புறக்கணித்து ஒப்புக்கு பொதுக்குழுவை நடத்தி முடித்தது எடப்பாடி தரப்பு. ஆனால், தொடர்ந்து பன்னீர் தரப்பிலிருந்து வரும் முட்டுக்கட்டைகளை எதிர்கொள்ள எடப்பாடி தரப்பில் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இது குறித்து, அதிமுக முன்னணி நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம்
ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம்

``கட்சியில் பெருவாரியான மா.செயலாளர்கள், எம்.எல்.ஏ-க்கள், மூத்த தலைவர்கள் என அனைத்துத் தரப்பு ஆதரவும் இருப்பதால் எளிதாக ஒற்றைத் தலைமைக்கான தீர்மானத்தை நிறைவேற்றிவிடலாம் என நினைத்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், ஓ.பி.எஸ் நீதிமன்றத்தில் வாங்கிய தடை அவரைப் பல்வேறு விஷயங்களை யோசிக்கவைத்துவிட்டது. முதல்வர் வேட்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் என ஓ.பி.எஸ்-ஸைக் கட்சிக்குள் வைத்துக்கொண்டே காரியத்தைச் சாதித்ததுபோல ஒற்றைத் தலைமை விஷயத்தையும் சாதித்துவிடலாம் என நினைத்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், ஓ.பி.எஸ்-ஸின் அடுத்தடுத்த நகர்வுகள் அவர் எண்ணைத்தை மாற்றியிருக்கின்றன. கட்சிக்குள் அவரை ஓரங்கட்ட வேண்டும் என்கிற திட்டத்தை பொதுக்குழு அன்றே அரங்கேற்றினார்கள். ஆனால், தொடர்ந்து இடையூறாக இருந்தால் அவரைக் கட்சியைவிட்டேகூட நீக்கிவிடலாம் என்கிற அளவுக்கு திட்டங்கள் தீட்டப்பட்டுவருகின்றன.

அதிமுக பைலாவில், கட்சி விவகாரங்களுக்கு எதிராக நீதிமன்றத்துக்குச் சென்றால் கட்சியைவிட்டு நீக்கலாம் என்கிற விதி இருக்கிறது. தவிர, ஓ.பி.எஸ் கட்சிக்கு துரோகம் இழைத்தார் என்கிற பிம்பத்தை முன்னாள் அமைச்சர்களைவைத்துக் கட்டமைக்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. சமூகரீதியாக எதிர்ப்பு வரக் கூடாது என்பதற்காக முக்குலத்தோர் சமூதாயத்தைச் சேர்ந்த ஆர்.பி.உதயக்குமார், ராஜன் செல்லப்பா ஆகியோரைவைத்தே அதற்கு ஆரம்பப்புள்ளி இடப்பட்டிருக்கிறது.

சசிகலா, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்
சசிகலா, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்

அடுத்தடுத்து அனைத்து மாஜி அமைச்சர்களும் அதை ஊதிப் பெரிதாக்குவார்கள். சசிகலா, தினகரனைக் கட்சியைவிட்டு நீக்கியதுபோல, தற்போது ஓ.பி.எஸ்-ஸை நீக்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அப்படி நீக்கும்போது பெரிய அளவில் எதிர்ப்பு எழக்கூடாது, தொண்டர்களின் அனுதாபம் அவருக்குக் கிடைக்கக் கூடாது என்பதற்காகவே அவரின்மீது துரோகப் பட்டம் சுமத்தும் வேலைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. சட்டரீதியாக ஏதாவது சிக்கல் வருமா என்பது குறித்தும் தீவிரமாக ஆலோசனை செய்யப்பட்டுவருகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில், அவரைக் கட்சியைவிட்டு நீக்கும் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம்'' என அதிர்ச்சி கொடுக்கிறார்கள்.