அதிமுக: பொதுச்செயலாளர் ஆகிறாரா எடப்பாடி பழனிசாமி... பொதுக்குழுத் தீர்மானங்கள் என்னென்ன?!

கழகப் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து பொதுக்குழுவில் அறிவிக்க வேண்டும் என்பது தொடர்பாக விவாதிக்கப்படும் என அ.தி.மு.க சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
0Comments
Share

ஒற்றைத் தலைமை விவகாரம் காரணமாக அ.தி.மு.க பிளவுபட்டுக் கிடக்கிறது. இந்த நிலையில் அ.தி.மு.க சார்பில் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், ``அ.தி.மு.க-வின் பொதுக்குழுக் கூட்டம் 11/7/2022 அன்று திருவள்ளூர் மாவட்டம், வானகரத்திலுள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் கழக அவைத் தலைவர் டாக்டர் தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் கூட்டப்படுகிறது. கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய அழைப்பிதழோடும், தங்களுக்கான அடையாள அட்டையோடும் தவறாமல் வருகை தந்து உரிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். கண்டிப்பாக முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அதிமுக
அதிமுக

பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருக்கிறது. பொதுக்குழுக் கூட்டத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் தீர்மானங்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

அந்தத் தீர்மானங்கள்!

1. கழக அமைப்பு தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தல்.

2. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவி அம்மா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தல்.

3. கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமையை ரத்து செய்து, கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வுசெய்யப்படும் கழகப் பொதுச்செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவெடுப்பது தொடர்பாக ஆலோசனை.

4. கழக இடைக்கால பொதுச்செயலாளர் பொறுப்பை உருவாக்குவது குறித்து விவாதித்து முடிவெடுப்பது தொடர்பாக ஆலோசனை.

5. கழக இடைக்கால பொதுச்செயலாளர், நடைபெறவுள்ள கழகப் பொதுக்குழுவிலேயே தேர்வுசெய்ய வேண்டுதல் சம்பந்தமாக ஆலோசனை.

அதிமுக அறிக்கை
அதிமுக அறிக்கை

6. கழகப் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து அறிவிப்பது தொடர்பாக விவாதிக்கப்படும்.

7. கழகத்தின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்க முடிவெடுக்க வேண்டுதல்.

8. புரட்சித்தலைவர் வழியில் மாண்புமிகு அம்மா அவர்களுடைய ஆட்சியின் சாதனைகளும், எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் செயல்பட்ட அம்மா அரசின் வரலாற்று வெற்றிகளும்.

இது தவிர, மேக்கேதாட்டூ அணை விவகாரம், இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவது தொடர்பாகத் தீர்மானங்கள் திட்டமிடப்பட்டிருக்கின்றன.