ஓ.பி.எஸ்-ஸுக்குச் சாதகமாகச் செல்கிறதா அதிமுக பொதுக்குழு வழக்கு?!

நகல் கிடைத்த இரண்டு வாரங்களுக்குள், வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். இதைத்தான் தற்போது ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் தங்களுக்குச் சாதகமாகக் கொண்டாடிவருகின்றனர்.

Published:Updated:
ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்.
ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்.
0Comments
Share

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தங்களது தீர்ப்பைத் தவறாகப் புரிந்துகொண்டு உத்தரவுகளைப் பிறப்பித்திருப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருப்பது கட்சி வட்டாரத்தில் மீண்டும் ஒரு பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறது. இந்த வழக்கு மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரும் நிலையில், `தங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வரும், பொதுக்குழு நடத்தியதே செல்லாது என உத்தரவு வரும்' என ஓ.பி.எஸ் தரப்பினர் ஏக உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

அ.தி.மு.க பொதுக்குழு
அ.தி.மு.க பொதுக்குழு

ஜூன் 23-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வுசெய்யப்பட்டதை எதிர்த்தும், ஜூலை 11-ம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்ட பொதுக்குழுவுக்குத் தடை கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஓ.பி.எஸ். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ஜூலை 11-ம் தேதி காலை பொதுக்குழு கூடுவதற்கு 15 நிமிடங்கள் முன்பு, ஓபிஎஸ்-ஸின் மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, அதிமுக பொதுக்குழு நடத்தப்பட்டு, அதில் கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டார். ஓ.பி.எஸ் உள்ளிட்ட பலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். ‘அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட உரிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியே உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், எங்கள் தரப்பு நியாயம் எதையுமே தனி நீதிபதி கருத்தில்கொள்ளவில்லை. ஒருங்கிணைப்பாளரின் அனுமதியின்றி இந்தப் பொதுக்குழு நடந்திருக்கிறது. எனவே, ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது, சட்டவிரோதமானது என்று அறிவித்து அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்துசெய்ய வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தார். இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

தீர்ப்பு நகல்
தீர்ப்பு நகல்

அப்போது இரு தரப்பையும் விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை `உயர் நீதிமன்றமே விசாரிக்கலாம். மூன்று வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்' என உத்தவிட்டனர். ஆனால், இந்தத் தீர்ப்பு நகலில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில விஷயங்கள்தான் தற்போது பல்வேறு விவாதங்களைக் கிளப்பியிருக்கின்றன. அதாவது, ஜூலை 6-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு அளித்த உத்தரவில், `பொதுக்குழுவை நடத்தலாம் என்றோ, தடை விதிக்கவோ எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. உயர் நீதிமன்ற தனி நீதிபதி தங்கள் தீர்ப்பைத் தவறாகப் புரிந்துகொண்டு உத்தரவு பிறப்பித்திருக்கிறார்' என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். கூடவே, நகல் கிடைத்த இரண்டு வாரங்களுக்குள், வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். இதைத்தான் தற்போது ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் தங்களுக்குச் சாதகமாகக் கொண்டாடிவருகின்றனர்.

இது குறித்து ஓ.பி.எஸ் தரப்பில் பேசினோம்.

``உச்ச நீதிமன்றத்தில் பொதுக்குழு நடத்துவது குறித்து நீதிபதிகள் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், உயர் நீதிமன்ற நீதிபதி, உச்ச நீதிமன்றத்தை மேற்கோள்காட்டி பொதுக்குழு நடத்த அனுமதியளித்தார். அதுமட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையிலும் மிகக் கடுமையாக அண்ணன் ஓ.பி.எஸ்-ஸை விமர்சித்திருந்தார். அதனால்தான் நாங்கள் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றோம். இப்போது உச்ச நீதிமன்றமும் நாங்கள் அப்படி எந்த உத்தரவையும் வழங்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த வழக்கு விசாரணைக்கு வந்து, பொதுக்குழுவுக்கு அனுமதியளித்தது செல்லாது எனத் தீர்ப்பு வந்தால், எடப்பாடி இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்வானதோ, எங்கள் தரப்பில் பலரைக் கட்சியைவிட்டு நீக்கியதோ செல்லாது. தேர்தல் ஆணையமும் அதை ஏற்றுக்கொள்ளும். அப்படிப் பார்த்தால் பழைய ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நிலைதான் தொடரும்'' என்கிறார்கள்.

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

ஆனால், இ.பி.எஸ் தரப்பிலோ, ``உச்ச நீதிமன்றத்தைக் குறிப்பிட்டு உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டது மட்டும்தான் தற்போது சிக்கலாகியிருக்கிறது. `பொதுக்குழு நடத்துவதற்கு 15 நாள்களுக்கு முன்பாக நோட்டீஸ் கொடுக்க வேண்டும்; ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழுவுக்கு அழைக்க முடியும்' என இரண்டு விஷயங்களைத்தான் ஓ.பி.எஸ் தரப்பு நீதிமன்றத்தில் அப்போது முன்வைத்தது. ஆனால், ஜூலை 11-ம் தேதி நடந்தது சிறப்புப் பொதுக்குழு, அதற்கு நோட்டீஸ் அனுப்பவேண்டிய தேவையில்லை. மேலும், ஜூன் 23-ம் தேதி நடந்த பொதுக்குழுவிலேயே, ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு நடத்த முடிவுசெய்யப்பட்டுவிட்டது. அதனால்தான் அப்போது நீதிபதி அதைத் தள்ளுபடி செய்தார். ஆனால், முன்பு உச்ச நீதிமன்றத்தை மேற்கோள்காட்டி தள்ளுபடி செய்தார். இந்த முறை உச்ச நீதிமன்றத்தை இழுக்காமல் தள்ளுபடி செய்வார். காரணம், சட்டம் எங்களுக்குத்தான் சாதமகாக இருக்கிறது. இந்த இரண்டு வாரங்கள் வேண்டுமானால் ஓ.பி.எஸ் தரப்பு சந்தோஷமாக இருந்துகொள்ளலாம். ஆனால், அவர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வர வாய்ப்பே இல்லை'' என்கிறார்கள்.