நான் கர்வம் பிடித்தவளா?' - சரோஜா தேவி பதில்கள் #AppExclusive

சரோஜாதேவிக்கு பிடிக்கவே பிடிக்காத 70களில் வந்த ஒரு படம்.. எது தெரியுமா?

Published:Updated:
Actress Saroja Devi
Actress Saroja Devi ( Vikatan Archives )
0Comments
Share
(சரோஜா தேவி ஆனந்த விகடனுக்கு அளித்த எக்ஸ்க்ளூசிவ் பேட்டி... 02.09.1973 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)

நீங்கள் புகழுடன் விளங்கியபோது இருந்த படவுலகிற்கும், இன்றைக்கிருக்கும் படவுலகிற்கும் உள்ள வேறுபாடுகளைக் கூற முடியுமா?

காமிரா, இசையமைப்பு ஆகியவற்றின் தரம் உயர்ந்திருக்கிறது. ஆனால், கதையமைப்பின் தரம் தாழ்ந்திருக்கிறது. `பாசமலர்', `ஆலயமணி', `எங்க வீட்டுப் பிள்ளை' போன்ற கதையமைப்பில் சிறந்த படங்கள் இப்போது தயாரிக்கப்படுவதில்லை. உணர்ச்சி வயப்படக் கூடிய கதைகளைப் படமாக எடுக்காமல், பொழுது போக்கிற்காகத்தான் படங்களைத் தயாரிக்கிறார்கள்.

இம்மாதிரித் தொடர்ந்து படமெடுப்பது படவுலகை மிகவும் பாதிக்கும். முன்பெல்லாம் கதாநாயகிகளாக நடிப்பவர்கள் மிக அழகாக, உடல் அமைப்பு நன்றாக இருக்கிறதா என்று பார்த்துப் படங்களில் நடிக்க அழைப்பார்கள். இப்போதெல்லாம் நடிகைகள் சாதாரணமாக இருந்தாலே போதும், நடிக்க அழைத்து விடுகிறார்கள். புது முகங்களைத் தேடும் தயாரிப்பாளர்கள் அப்புதுமுகங்களின் `அழகை' இப்போது பார்ப்பதில்லை!

Actress Saroja Devi
Actress Saroja Devi
Vikatan Archives

நீங்கள் இன்றைய புது முகங்களுக்குக் கூறும் அறிவுரை என்ன?

இன்றைய புதுமுகங்கள் `நவரச நடிகை'களாக நடந்து கொள்கிறார்கள். தொழிலில் பற்றில்லாமல், பல இடங்களில் பலவிதமாக நடந்து கொள்வதைத் தான் `நவரச நடிகைகள்' என்று குறிப்பிட்டேன். நடிகை என்று கூறும்போதே கவர்ச்சி, `கிளாமர்' என்றுதான் சொல்லப்படுகிறது. இதனால் ஒரு நடிகைக்குப் பல சிக்கல்கள் வருகின்றன. படவுலகத்தை விட்டு மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது, தான் ஒரு நடிகை என்பதை மறந்து, நல்ல விதமாக நடந்து கொள்ள வேண்டும். உதாரணமாக, ஒரு நிகழ்ச்சிக்கு மிகவும் கவர்ச்சியாக உடையணிந்து சென்றால், மிகவும் ஆபாசமாக இருக்கும். ஏனென்றால், நடிகையே `கவர்ச்சி' - அதற்கு மேல் கவர்ச்சி உடையென்றால்? கவர்ச்சியையும், கவர்ச்சியையும் கூட்டினால் ஆபாசம்தான் பதிலாக வரும்.

ஒரு முறை மிகப் பெரிய காரை வாங்க பம்பாய் சென்றிருந்தேன். அப்போது திரு. வாசன் அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. அவரிடம் பெரிய கார் வாங்கும் விஷயத்தைச் சொன்னேன். அப்போது அவர்,

``நீ ஒரு நடிகை. அதுவும் பிரபலமான நடிகை. சிறிய காரில், ஆடம்பரமில்லாமல் சென்றாலே உன்னை எல்லோரும் திரும்பித் திரும்பிப் பார்ப்பார்கள். கூட்டம் கூடிவிடும். பெரிய காரில் ஆடம்பரத்துடன் சென்றால், நடிகைதானே என்று பார்க்க விரும்பாதவர்கள் கூட, காரின் கவர்ச்சியில் மயங்கி, உன்னைக் காண வருவார்கள். கூட்டம் அதிகமாவதால் பலருக்குத் துன்பம். பொது வாழ்வில் பிரபலமாகும்போது, நாம் சாதாரணமாக ஆடம்பரமில்லாமல் இருப்பதுதான் நல்லது. படவுலகிலிருந்து வெளியே தள்ளப்பட்ட பிறகும் கூட, ஆடம்பரமில்லாமல் வாழ்ந்தால், தலை நிமிர்ந்து நடக்கலாம்"என்று கூறினார். உடனே கார் வாங்கும் எண்ணத்தைக் கைவிட்டேன். நடிகை என்னும்போது, அவளுடைய செய்கைகளையும், அவள் எப்படி நடந்து கொள்கிறாள் என்பதையும் மற்றவர்கள் கூர்ந்து கவனிப்பார்கள். ஆகையால், நாம் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும்.

உங்களை மிகவும் கர்வம் பிடித்தவர் என்று கூறுகிறார்களே?

என்னிடம் வந்தவர்கள் கர்வம் பிடித்தவர்கள் போல் பழகியிருக்க வேண்டும். நானும் அவர்களிடம், அவர்கள் நடந்து கொண்டாற்போல நடந்து கொண்டேன். அதனால் அவர்கள் அப்படிக் கூறியிருக்க வேண்டும். உங்களிடம் இப்போது நல்லவிதமாகத்தானே நான் நடந்து கொள்கிறேன்?

தமிழ்ப் படவுலகில் உங்களுக்கு மீண்டும் வரவேற்பு இல்லையே, ஏன்?

நான் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டவள். குடும்ப விவகாரங்களிலும் ஈடுபட்டுக் கொண்டு படத் தொழிலையும் கவனிக்க எனக்கு நேரமில்லை. ஆகையால், அதிகமான படங்களில் நடிக்க நான் விரும்புவதில்லை. மேலும், பல தமிழ்ப் படங்களின் கதையமைப்பு எனக்குப் பிடிக்கவில்லை. தமிழ்ப் படங்களில் நடிக்க வேண்டுமென்றால் அடிக்கடி சென்னை வரவேண்டும். அதனால் குடும்ப விவகாரங்களைக் கவனித்துக் கொள்ள முடிவதில்லை. இதனால் தமிழ்ப் படவுலகில் எனக்கு வரவேற்பு இல்லை என்று கூற முடியாதே!

Actress Saroja Devi
Actress Saroja Devi
Vikatan Archives

ஒரு நடிகை திருமணமான பின்பும் கலைத் துறையில் ஈடுபடுவதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அந்த நடிகையின் கணவரின் மன நிலையைப் பொறுத்துத்தான் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியும். தன் மனைவி திருமணத்திற்குப் பிறகும் நடிக்கலாம் என்று கணவர் அனுமதி கொடுத்தால் நடிக்கலாம். கணவரின் அனுமதிதான் - திருமணமான ஒரு நடிகைக்கு முக்கியம்.

நீங்கள் படம் தயாரிக்கப் போவதாகக் கேள்விப்பட்டோம்! நீங்களே அந்தப் படத்தை இயக்கப் போகிறீர்களா?

முதலில், நான் படம் தயாரிக்கப் போவதாக வந்த செய்திகள் உண்மை இல்லை; வதந்திகள். படம் தயாரிக்க முடிவு செய்த பிறகுதானே, நானே இயக்கப் போகிறேனா என்பது தெரியும்!

புது முகங்கள் `திமிராக' நடந்து கொள்கிறார்கள் என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தீர்கள்? எந்த அடிப்படையில் அப்படிக் கூறினீர்கள்?

ஒரு குறிப்பிட்ட நடிகை, ஒரு முறை மிகவும் திமிராக படப்பிடிப்பில் நடந்து கொண்டார். அந்தப் பேட்டியில், இதைத்தான் குறிப்பிட்டுக் கூறினேன். ஆனால், அவர்கள் தவறுதலாக `எல்லாப் புதுமுக நடிகைகளும்' என்று குறிப்பிட்டு எழுதிவிட்டார்கள். யாரோ தவறு செய்ய, என்னை வம்பில் மாட்டி வைத்து விட்டார்களே?

Actress Saroja Devi
Actress Saroja Devi
Vikatan Archives

சமீபத்தில் பார்த்த தமிழ்ப் படங்களைப் பற்றி விமரிசனம் செய்ய முடியுமா?

ஒரு `நியூவேவ்' படம்தான் நான் சமீபத்தில் பார்த்தேன். பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. இடைவேளை வரை கதையே இல்லை. இடைவேளைக்கு முன்பும், பின்பும் சில ஆபாச, அருவருப்பான காட்சிகள். வேண்டாத இடத்தில் பாடல்கள், காபரே நடனக் காட்சிகள். `ஏ' சர்டிபிகேட் பெற்ற படம் இது! தமிழ்ப் படவுலகம் இப்படியே போய்க்கொண்டிருந்தால் எப்படி? யாராவது, ஏதாவது ஒரு வழி செய்ய வேண்டாமா? கதையுள்ள சிறந்த படங்களை எடுத்தால் மக்கள் பார்க்க மாட்டேன் என்றா சொல்கிறார்கள்? வலுவில்லா இன்றைய தமிழ்ப் படங்கள், அதன் தயாரிப்பாளர்களை மட்டும் அல்ல, அதில் நடித்த அத்துணை நடிக, நடிகையர்களையும் பாதிக்கும். அதில், முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் ஒரு நடிகை நடித்திருக்கிறார். இந்தப் படம் வந்த பிறகு, வேறு எந்தப் படத்திலும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்று கேள்வியுற்று வேதனைப்பட்டேன். முன்பே கூறியது போல, கதையமைப்பு இல்லாவிடில் எந்தப் படமுமே உருப்படாது. நன்றாக இருக்காது. இதைத் தமிழ்ப் பட அதிபர்கள் உணர வேண்டும். எப்போது நாம் இதை உணரப் போகிறோமோ?

பேட்டி: சியாமளன்