"பார்வதி மேடம் ஒரு ரூபாய்கூட வாங்கல; ஃப்ளைட் டிக்கெட்கூட..."- கடை திறப்பு விழா குறித்து கெளசல்யா

"சங்கர் வழக்கு தொடர்பான தீர்ப்பு அன்னைக்குக்கூட அரை நாள்தான் லீவு கொடுத்தாங்க. அதுக்குக்கூட என்னால போக முடியல. அது, எனக்கு ரொம்ப வருத்தத்தைக் கொடுத்தது" - கெளசல்யா

Published:Updated:
பார்வதி
பார்வதி
0Comments
Share

ஆணவக்கொலையால் பாதிக்கப்பட்ட கெளசல்யா, அரசுப் பணியிலியிருந்து விலகி, தற்போது கோவை வெள்ளலூர் பகுதியில் புதிதாக பியூட்டி பார்லர் அண்ட் சலூனை திறந்து புதிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். இந்த சலூனை நேரடியாக வந்து திறந்துவைத்து வாழ்த்தையும் அன்பையும் தெரிவித்திருக்கிறார் நடிகை பார்வதி. உற்சாகத்தில் இருக்கும் கெளசல்யாவிடம் வாழ்த்துகளுடன் பேசினோம், 

பொதுவா ஆண், பெண் என்று தனித் தனியாகத்தான் சலூன் கடை இருக்கும். எல்லா பாலினத்தவருக்கும் ஏற்றமாதிரி, ஒரு சலூன் கடை ஆரம்பிக்கணும்னு ரொம்ப நாளா யோசிச்சுக்கிட்டே இருந்தேன். அதனாலதான், ஃபேமிலி சலூன்னு பேர் வெச்சேன். சலூன் கடைன்னா வெறும் ஹேட் கட் பண்றது மட்டுமில்ல. ஃபேஷியலில் ஆரம்பித்து ஒரு பியூட்டி பார்லர்ல என்னவெல்லாம் பண்ணுவாங்களோ அத்தனை வசதியும் இங்க இருக்கு.

பார்வதி
பார்வதி

நடிகை பார்வதி மேடத்தை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவங்கப் பெயருக்கு பின்னால் இருந்த சாதி பெயரை நீக்கியதால், இன்னும் அதிகமா பிடிக்க ஆரம்பிச்சது. அவங்களோட 'உயரே' படம், ஆசீட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் படம். பார்வதி மேடம் எப்பவுமே சாதாரண கதையில் நடிக்கமாட்டாங்க. சமூகம் சார்ந்த படத்தில் மட்டும்தான் நடிப்பாங்க. என்னோட சலூன் கடையை திறக்கணும்னு யோசிச்சப்போ உடனடியா நினைவுக்கு வந்தவங்க பார்வதி மேடம்தான். அதனால, ’நியூஸ் மினிட்’ தன்யா மேடம்கிட்ட கேட்டேன். அவங்கதான் உடனடியாக பார்வதி மேடம்கிட்ட பேசி ஏற்பாடு பண்ணினாங்க.

பொதுவாக, இந்தமாதிரி கடைகள் திறந்துவெச்சா நடிகைகள் பணம் வாங்குவாங்க. பார்வதி மேடம், ஒரு ரூபாய்க்கூட வாங்கல. இன்னும் சொல்லப்போனா, இங்க வர்றதுக்கு ஃப்ளைட் டிக்கெட்கூட அவங்களோட செலவுல புக் பண்ணிக்கிட்டாங்க. என் கையைப்பிடிச்சுக்கிட்டு, ‘தைரியமா பண்ணுங்க. தொழில் ரீதியா முன்னேறி வந்து பல பெண்களுக்கு நீங்க இன்னும் முன்னுதாரணமா இருக்கணும்’னு சொன்னது நெகிழ்ச்சியா இருந்தது. அவங்க, என் கையை ரொம்ப நேரம் கெட்டியா பிடிச்சுக்கிட்டது அவ்ளோ எனர்ஜிட்டிக்கா, தன்னம்பிக்கையை ஊட்டுறவிதமா இருந்துச்சு.

நீங்கள் பார்த்த அரசுப்பணி என்னாச்சு?

கெளசல்யா
கெளசல்யா

“அரசுப்பணியில ஈடுபட ஆரம்பிச்சபிறகு சமூகம் சார்ந்த எந்தப் பணியிலும் ஈடுபட முடியல. மிக முக்கியமா, சங்கர் வழக்கு தொடர்பான தீர்ப்பு அன்னைக்குக்கூட அரை நாள்தான் விடுப்பு கொடுத்தாங்க. அதுக்குக்கூட என்னால போக முடியல. அது, எனக்கு ரொம்ப வருத்தத்தைக் கொடுத்தது. வேலையும் பார்த்துக்கிட்டு என்னை மாதிரி பாதிக்கப்பட்ட பெண்களுக்காக செயல்படணும்னுதான் நினைச்சேன். ஆனா, இரண்டையும் ஒண்ணா செய்யமுடியல. இந்தமாதிரி, நிறைய நெருக்கடிகள் ஏற்பட்டது. அதனாலதான், சொந்தக்காலில் நின்னு முன்னேறணும்னு முடிவு எடுத்தேன். நேச்சுரல்ஸில் ஆறுமாதம் பயிற்சி எடுத்துக்கிட்டேன். அதுக்குப்பிறகு, தன்னம்பிக்கையோடு இந்த சலூன் கடையை ஆரம்பிச்சிருக்கேன்".

பார்வதி-எவிடன்ஸ் கதிர்-கெளசல்யா
பார்வதி-எவிடன்ஸ் கதிர்-கெளசல்யா
Sarpana B.

மறுமணத்துக்குப்பிறகு, சங்கர் குடும்பத்துடன் தொடர்பில் இருக்கிறீர்களா?

“சங்கர் தனிப்பயிற்சி மையம், சங்கர் வீட்டு மாடியிலதான் இயங்கிக்கிட்டிருக்கு. பறை பயிற்சியும் டியூஷனும் நடந்துக்கிட்டிருக்கு. அடிக்கடி போய் மீட் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன். எனக்கு அப்பா மாதிரி இருந்த சங்கர் அப்பா, கடந்த வருடம் இறந்துபோனதுதான் ரொம்ப வருத்தமா இருக்கு. டிசம்பர் வந்தா ஒரு வருடம் ஆகப்போகுது. எங்களுடைய உறவு எப்போதும்போல போய்ட்டிருக்கு".

பார்வதி
பார்வதி
Sarpana B.

உங்களுடைய குடும்ப வாழ்க்கை?

"இந்த கடையை திறக்க ஃபுல் சப்போர்ட்டா இருந்ததே இணையர் சக்திதான். பறையிசை பயிற்சி கொடுக்க, சக்தி அமெரிக்கா போயி இரண்டு மாதங்கள் ஆகுது. இந்த நிகழ்ச்சியெல்லாம் வீடியோ கால்லயே பார்த்து சந்தோஷப்பட்டு வாழ்த்தினாப்ல".

கணவர் சக்தியுடன் கெளசல்யா
கணவர் சக்தியுடன் கெளசல்யா

என்று புன்னகையுடன் பேசும், கெளசல்யா சலூன் மற்றும் பியூட்டி பார்லரை ஆரம்பித்தது மட்டுமல்ல, சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்காக பெரியார் பிறந்தநாள் அன்று ’தமிழம் மண உரிமைச் சங்கம்’ ஆரம்பித்து அதற்கு துணைத் தலைவராகவும் செயல்பட ஆரம்பித்திருக்கிறார். இந்த சங்கத்தில் இருக்கும் பெண்கள் சாதிமறுப்பு திருமணம் செய்தவர்கள். சாதி மறுப்பு திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு சட்ட உதவிகள், ஆலோசனைகள், பாதுகாப்பு வழங்குதல் உள்ளிட்ட சேவைகளை செய்து வருகிறார்கள். சலூனில் வரும் வருமானத்தில் ஒரு பங்கை ஏழை எளிய மக்களுக்கு நல உதவிகள் செய்ய பயன்படுத்துவதாகவும் கூறுகிறார் கெளசல்யா.

படங்கள் - அருண் வீரப்பன்