விவாகரத்து செய்த கணவரை விருந்தினரைப்போல் நடத்த வேண்டும் - உயர் நீதிமன்றத் தீர்ப்பும் விவாதங்களும்...

தாய் தந்தை ஆகிய இருவரின் அரவணைப்பும் குழந்தைக்குத் தேவை. கணவன் மனைவியாக நீங்கள் பிரிந்துவிட்டால்கூட, உங்கள் குழந்தைக்கு நீங்கள்தான் என்றைக்குமே பெற்றோர். அந்தப் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.

Published:Updated:
விவாகரத்து
விவாகரத்து
0Comments
Share

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, விவாகரத்து வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்தபோது, ``குழந்தையைப் பார்க்க வரும் கணவரை, விருந்தினரைப்போல் மரியாதையுடன் நடத்த வேண்டும். விருந்தினர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்கள் என்பதே நமது அறம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தத் தீர்ப்பு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. விவாகரத்துக்குப் பின்னரும் கணவருக்குப் பணிவிடைகள் செய்ய வேண்டுமா என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இத்தீர்ப்பை எப்படிப் பார்க்கலாம் என, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தியிடம் கேட்டோம்...

வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி
வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி

``விவகாரத்துக்குப் பின் குழந்தையைப் பார்க்க வரும் கணவரோ மனைவியோ யாராக இருந்தாலும் அவர்கள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். குறிப்பிட்ட அந்த வழக்குக்காக சொல்லப்பட்டதை வைத்து, பெண்களை நோக்கி மட்டுமே சொல்லப்பட்டதாக நினைக்கக் கூடாது. இன்றைக்கு நிறைய விவாகரத்து வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அதிக அளவில் விவாகரத்து வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன. கணவன் மனைவி இருவரது ஒப்புதலோடு நடைபெறுகிற விவாகரத்து, இவர்களில் ஒருவர் கேட்டு வாங்கும் விவாகரத்து என விவாகரத்து இருவகைப்படும்.

விவாகரத்து
விவாகரத்து

இருவரும் பேசிப் பிரிகிற விவாகரத்தில், குழந்தைகள் யாரிடம் இருக்க வேண்டும் என்கிற முடிவை, அவர்களே பேசி முடிவு செய்வர். ஒரு தரப்பினர் பெறும் விவாகரத்தைப் பொறுத்தவரை, குழந்தை யாரிடம் இருக்க வேண்டும்... எங்கு குழந்தைகள் இருந்தால் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்யும். அதன்படி குழந்தையை ஒருவர் பராமரித்துக்கொண்டிருப்பார், வாரத்துக்கு ஒரு முறை இன்னொருவர் குழந்தையைப் பார்த்துச் செல்வார் என்பது போல இருக்கும். கணவன் - மனைவி என இருவரும் வெளியூர்களில் இருந்தால் மாதத்துக்கு ஒருமுறை வந்து பார்ப்பதாக இருக்கும்.

விவாகரத்து வழக்குகளைப் பொறுத்தவரைக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை மட்டுமே நீதிமன்றம் கருத்தில் கொள்ளும். தாய் - தந்தை ஆகிய இருவரின் அரவணைப்பும் குழந்தைக்குத் தேவை. கணவன் - மனைவியாக நீங்கள் பிரிந்துவிட்டால்கூட உங்கள் குழந்தைக்கு நீங்கள்தான் என்றைக்குமே பெற்றோர். அந்தப் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். விவாகரத்துக்குப் பின் 18 வயது வரை குழந்தையை வைத்துக்கொள்கிற உரிமை, ஜீவனாம்சம் ஆகியவை மாறுதலுக்குட்படும். அது சூழலைப் பொறுத்தது.

விவாகரத்து
விவாகரத்து

விவாகரத்துக்குப் பின், குறித்த நேரத்தில் குழந்தையைப் பார்க்கச் செல்கையில் குழந்தையைப் பார்க்க விட மாட்டார்கள். ஏதேனும் இடையூறு செய்துகொண்டே இருப்பார்கள். ஆண் - பெண் இருபாலினருமே இதைச் செய்கின்றனர்.

குழந்தைக்கு இருவரது அரவணைப்பும் தேவை என்பதைப் புரிந்து கொள்வதில்லை. நடைமுறையில் இந்தப் போக்கு அதிக அளவில் இருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் பதிவாகிக் கொண்டே வருகிறது. கணவன் - மனைவிக்குதான் விவாகரத்தே தவிர பெற்றோருக்கு விவாகரத்து கிடையாது.

விவாகரத்துக்குப் பின் நம் இணையர் மூன்றாம் நபராகி விடுகிறார். சக மனிதரை எப்படி மரியாதையுடன் நடத்துகிறோமோ அதே போல் விவாகரத்துக்குப் பின் இரு பாலினரும் தங்களின் முன்னாள் இணையரை நடத்த வேண்டும். குழந்தையைப் பார்க்கச் சென்ற பெண்ணை, வீட்டு வாசலிலேயே பலமணி நேரம் காக்க வைப்பது, வீட்டைப் பூட்டி விட்டுச் சென்று விடுவது போன்ற குற்றச்சாட்டுகளை அதிகம் பார்க்கிறோம். அப்பா வாங்கிக் கொடுத்த தோசையை சாப்பிட்டதற்காக அதை வாந்தி எடுக்கச் சொல்லி அம்மா உப்புநீர் கொடுத்ததாக நீதிமன்றத்தில் ஒரு குழந்தை தெரிவித்தது.

Divorce (Representational Image)
Divorce (Representational Image)
Photo by burak kostak from Pexels

இது போன்ற செயல்கள் குழந்தையின் மனநிலையை எந்தளவுக்கு பாதிக்கும் என்பதை இவர்கள் புரிந்து கொள்வதில்லை. ஒரு குழந்தை, ``எனக்கு அம்மாவும் வேண்டாம் அப்பாவும் வேண்டாம்... பாட்டி வீட்டில் விட்டு விடுங்கள் அல்லது ஹாஸ்டலில் விடுங்கள்" என்று சொன்னது. எவ்வளவு பாதிப்புக்குள்ளாகியிருந்தால் அக்குழந்தையிடம் இருந்து இப்படியான வார்த்தைகள் வந்திருக்கும்.

இணைந்து வாழ்வதும், பிரிந்து செல்வதும் அவரவர் விருப்பம். ஆனால், ஒரு குழந்தைக்கு இருவரது அரவணைப்பும் தேவை என்பதால் குழந்தையைப் பார்க்க வருகிறவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும். எனவே, அத்தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று" என்கிறார் ஆதிலட்சுமி லோகமூர்த்தி.