`150 வருட சாதியவன்மம் முடிவுக்கு வந்துட்டு!' சுடுகாட்டுக்குப்பாதை கிடைத்த மகிழ்ச்சியில் கறிவிருந்து

’’பாதை வேணும்னு உடலை ரோட்டுல வச்சு போராட்டம் நடத்துவோம். அதிகாரிங்க வருவாங்க. அவங்க தரப்புல போய் பேசுவாங்க. `அவங்களை ஓடை வழியா போக அனுமதிக்கிறதே அதிகம்'னு சொல்லி, அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தரமாட்டாங்க. இதுவரை, 50 உடல்களை வச்சு போராட்டம் நடத்தியிருப்போம்...’’

Published:Updated:
சாலை அமைக்கும்போது புஷ்பா
சாலை அமைக்கும்போது புஷ்பா
0Comments
Share

பட்டியல் சமுதாய மக்களுக்கு நடக்கும் சாதிய பாகுபாடுகள் இன்னமும் நீர்த்துப்போகவில்லை என்பதை, தென்காசி மாவட்டத்தில் உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் சிறுவர்களுக்கு மளிகைக்கடையில் ஏற்பட்ட தீண்டாமை கொடுமை உரக்கச் சொல்லியிருக்கிறது.

ஓடை வழி நடக்கும் இறுதி பயணம் (பழைய போட்டோ)
ஓடை வழி நடக்கும் இறுதி பயணம் (பழைய போட்டோ)

இதேபோல் 150 வருடங்களாக சாதிய பாகுபாட்டோடு சுடுக்காட்டுக்கு பாதை கிடைக்காமல் அல்லாடி வந்த, நாமக்கல் மாவட்ட பட்டியல் இன மக்களுக்கு, தற்போது விடிவு கிடைத்திருக்கிறது. அந்த கிராமத்தின் ஊராட்சிமன்றத் தலைவியும், அவரின் தந்தையும் இதை நடத்திக் கொடுத்திருக்கிறார்கள்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஒன்றியத்தில் இருக்கிறது தட்டாங்குட்டை. இந்த ஊராட்சியில் உள்ள வீரப்பம்பாளையம் மற்றும் வீரமாத்திவலவு பகுதிகளில் வசிக்கும் 120 பட்டியல் சமுதாயக் குடும்பங்கள், தாங்கள் பயன்படுத்தும் சுடுகாட்டுக்கு பாதையில்லாமல் அல்லாடி வந்தனர். அந்த வழியாகச் செல்லும் ஓர் ஓடையில் முள், சேறு, சகதி ஆகியவற்றைக் கடந்துதான் இறந்தவர்களின் உடலுக்கு இறுதிக் காரியம் நடத்தி வந்தார்கள்.

தடுப்பு கட்டை கட்டி சரிசெய்யப்பட்ட சுடுகாடு
தடுப்பு கட்டை கட்டி சரிசெய்யப்பட்ட சுடுகாடு

அதற்கும், மாற்றுச்சமூகத்தினர் சிலர் முட்டுக்கட்டை போட, பட்டியல் இன மக்களின் சுடுகாட்டுக்குச் செல்ல தொடர் பேச்சுவார்த்தையின் மூலம், இருவரிடம் நிலம் வாங்கி, சாலை, இரண்டு பாலம், தண்ணீர் வசதி என்று சகலதும் செய்து கொடுத்து, பட்டியல் சமுதாக மக்களை நெகிழ வைத்திருக்கிறார்கள், ஊராட்சிமன்றத் தலைவி புஷ்பாவும், அவரின் தந்தை செல்லமுத்துவும். அதோடு, அந்த மக்களுக்கு கறிவிருந்தும் வைத்து மகிழ்ச்சியில் நிறைய வைத்திருக்கிறார்கள்.

இதுகுறித்து, பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த தங்கவேலிடம் பேசினோம்...

``இன்னைக்கு நேத்தியில்ல, 150 வருஷ பிரச்னை இது. அரை கிலோமீட்டர் தூரத்துக்கு முள், கல், தண்ணீர், சேறு, சகதினு இருக்குற பட்டா ஓடைங்கிற சிறுவாய்க்கால்ல, நாங்க இறந்தவங்க உடலை தூக்கிட்டுப் போய் அடக்கம் பண்ணனும். வருஷத்துக்கு 5 மாசம் அதுல தண்ணி போகும். அப்போ, அந்த வாய்க்கால் இருபுறமும் முள்புதர்கள் மண்டிப்போய், அதுக்குள்ள நடந்தே போகமுடியாது. அதனால், `பாதை கிடைச்சாதான் பாடியைத் தூக்குவோம்'னு இறந்தவங்க உடலை, ரோட்டுல வச்சு போராட்டம் நடத்துவோம். அதிகாரிங்க வருவாங்க. அவங்க தரப்புல போய் பேசுவாங்க.

 தங்கவேல்
தங்கவேல்

'அவங்களை ஓடை வழியா போக அனுமதிக்கிறதே அதிகம்'னு சொல்லி, அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தரமாட்டாங்க. பழையபடி ஓடை வழியா உடலை சுமந்துகிட்டுப் போவோம். இதுவரை, 50 உடல்களை வச்சு போராட்டம் நடத்தியிருப்போம்.

மூன்று கலெக்டர்கள் வரை எங்க ஊருக்கு வந்து, இந்த பிரச்னையை தீர்க்க முயற்சி பண்ணினாங்க. ஒண்ணும் நடக்கலை. `எங்களுக்கு வாழுறப்பதான் ஆயிரத்தெட்டு அவமானங்கள். செத்த பிறகும் நிம்மதியா காட்டுக்குப் போகமுடியலையே'னு ஆத்து ஆத்துப் போவோம். இந்த சூழல்லதான், எங்க ஊரு தலைவியா வந்த புஷ்பாவும், அவரோட தந்தையும் அவங்க ஆட்கள்கிட்ட தொடர்ந்து பேசி, ரெண்டு பேரை நிலம் தர வச்சு, இப்போ சுடுகாட்டுக்கு பாதை ஏற்படுத்தி கொடுத்திட்டாங்க.

 கறி விருந்து
கறி விருந்து

அதோட, எங்க சனங்க மொத்த பேருக்கும் கறி சோறு போட்டாங்க. அதனால, அவருக்கு மாலை அணிவித்து, மரியாதை பண்ணியதோட, டிரம்ஸ், பட்டாசுனு ஏற்பாடு பண்ணினோம். எங்க சந்தோஷத்தை வெளிப்படுத்த, எங்க சமுதாயத்தைச் சேர்ந்த குப்புசாமி தலைமையில விடிய விடிய தெருக்கூத்து நடத்தினோம்" என்றார்.

தொடர்ந்து பேசிய, ஊராட்சிமன்றத் தலைவி புஷ்பா,``எங்கப்பா இதுக்கு முன்னாடி தலைவரா இருந்தார். நான் படிச்சுட்டு, சென்னையில் பணியில் இருந்தேன். இந்த முறை பெண்களுக்கு ஒதுக்கியதால், அரசியல் மீது ஆர்வம் வந்து வேலையை ரிசைன் பண்ணிட்டு, தேர்தல்ல போட்டியிட்டு வெற்றி பெற்றேன். இந்த மக்கள்தான் எனக்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வச்சாங்க. அதனால், இவங்களுக்கு ஏதாவது செய்யணும்னு நானும் எங்கப்பாவும் நினைச்சோம். அவங்களோட 150 வருட சுடுகாடு பாதை பிரச்னையைப் போக்க அப்பா எவ்வளவோ முயற்சி எடுத்தார். அவர் தலைவரா இருந்தப்ப இந்த மக்களோட உறவினர்கள் இறந்தா, துக்க வீட்டுக்கு ரெண்டு நாள் கழிச்சுதான் போவார்.

 புஷ்பா
புஷ்பா

காரணம், `தலைவரா இருந்து, எங்க பிரச்னையை தீர்த்தியா?'னு கேட்பாங்கங்கிற பயம்தான். இந்த நிலையில்தான், அவங்க சுடுகாட்டுக்குப் போற வழியில் நிலம் வச்சுருக்கிற பாரிவள்ளல், ஆறுமுகம்ங்கிற ரெண்டு பேர்கிட்ட அப்பாவும், நானும் தொடர்ந்து பேசினோம். அந்த மக்களோட 150 வருட வலியை சொன்னோம். உடனே, அவங்க மனசு மாறி இடம் தர ஒத்துக்கிட்டாங்க. ஆறுமுகம் ஒரு சென்ட் நிலத்தை ஒரு லட்சத்துக்கு தர ஒத்துக்கிட்டதால, ரூ. 15,000 முதல் கட்டமா தந்திருக்கிறோம். பாரிவள்ளல் இரண்டரை சென்ட் நிலத்தை இலவசமா தந்தார். உடனே, முன்னாள் அ.தி.மு.க அமைச்சரும், தொகுதி எம்.எல்.ஏவுமான தங்கமணி சார்கிட்ட சொன்னோம்.

ரொம்ப சந்தோஷம். உடனே சொந்த பணத்தை போட்டு வேலையை ஆரம்பிங்க. நான் என்னோட தொகுதி நிதியில இருந்து, செலவாகும் அந்த பணத்தை ஒதுக்கிடுறேன்'னு சொன்னார். அதனால, சொந்தப் பணத்தில் இருந்து ரூ. 15 லட்சம் செலவு பண்ணி, 400 நடை ஓடை மண் அடிச்சு, ரோடு அமைச்சோம். அந்த ரோட்டோட ரெண்டு பக்கமும் தடுப்புச் சுவர் அமைச்சு, பட்டா ஓடையில ரெண்டு இடத்துலயும் பாலம் அமைச்சோம். இறந்த உடல்களை ஆம்புலன்ஸில் கூட சுடுகாடு வரைக்கும் எடுத்துட்டுப் போற அளவுக்கு பாதையை சிறப்பா அமைச்சோம். அதோடு, சுடுகாட்டுக்கு பைப்லைன் அமைத்து தண்ணீர் வசதியும் செஞ்சோம். மக்களோட முகத்தில் பூத்த மகிழ்ச்சியைப் பார்த்ததும், ரொம்ப நிறைவா இருந்துச்சு. தங்கமணி சார் வந்து திறந்து வைத்தார்.

புஷ்பாவுக்கு மரியாதை செய்யும் மக்கள்
புஷ்பாவுக்கு மரியாதை செய்யும் மக்கள்

`உடனே நீங்க செலவு செஞ்ச பணத்தை, என்னோட தொகுதி நிதியில் இருந்து ஒதுக்குறேன்'னு சொன்னார். ஆனா, எங்களோட இந்த செயல்பாட்டைப் பார்த்து எங்க மக்கள்ல சிலர், எங்களை வெறுப்பா பார்க்குறாங்க. அதுக்கு நாங்க கவலைப்படலை.

சுடுகாட்டுக்கு வழி கிடைச்ச மக்களை இன்னும் சந்தோஷப்படுத்த நினைச்சு, 220 கிலோ கோழி கறி எடுத்து, கறிச்சோறு ஆக்கிப்போட்டோம். தொடர்ந்து என்னாலான உதவிகளை செய்ய இருக்கிறேன்" என்றார்.

இரண்டரை சென்ட் இடம் கொடுத்த பாரிவள்ளல்,``எங்க மாமனாரோட இடம் அது. அவர் உயிரோட இருந்தவரைக்கும், பட்டியல் சமுதாய மக்களுக்கு இடம் கொடுக்க விரும்பினார். ஆனா, அவரது உறவினர்கள் சிலர் தடுத்தாங்க. ஆனா இப்போ, ஊராட்சிமன்றத் தலைவியும், அவங்க அப்பாவும், அந்த மக்களும் கேட்டதால, அவங்களோட வலி உணர்ந்து, இடத்தை கொடுக்க ஒத்துக்கிட்டேன். பணம் வாங்கிக்க ஊராட்சிமன்றத் தலைவர் வலியுறுத்தினாலும், நான் மறுத்துட்டேன்.

 இரண்டரை சென்ட் 
 நிலத்தை இலவசமாக வழங்கிய பாரிவள்ளல்
இரண்டரை சென்ட் நிலத்தை இலவசமாக வழங்கிய பாரிவள்ளல்

அந்த மக்களுக்கு ஏதோ என்னாலான உதவியா இருக்கட்டும். அதுக்காக என்னை திட்டுறவங்களுக்கு, மௌனத்தை மட்டும் பதிலா தர்றேன். 150 வருஷம் அந்த மக்கள் பட்ட கஷ்டத்தை உணராத அவங்ககிட்ட, பதில் சொல்லி என்ன பிரயோஜனம்?" என்றார்.

ஒடுக்குமுறைகள் ஒழிக்கப்படட்டும்!