அணி மாறும் எம்.பி-க்கள்... சின்னம் கேட்டு தேர்தல் கமிஷனை அணுகும் ஷிண்டே! - நெருக்கடியில் தாக்கரே

சிவசேனா எம்.பி-க்கள் 12 பேர் இன்று மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியில் இணையவிருக்கின்றனர். இதற்கான அறிவிப்பு டெல்லியில் வெளியிடப்படவிருக்கிறதாம்.

Published:Updated:
ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டே
0Comments
Share

மகாராஷ்டிராவில் கடந்த மாதம் 20-ம் தேதி நடந்த சட்டமேலவைத் தேர்தலைத் தொடர்ந்து சிவசேனாவில் பிளவு ஏற்பட்டது. அதே போன்ற ஒரு நிலை இப்போது ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து இன்று சிவசேனா எம்.பி-க்கள் 12 பேர் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு டெல்லியில்வைத்து வெளியிடப்படவிருக்கிறது என்ற தகவலும் பரபரக்கிறது. இதற்காக ஏக்நாத் ஷிண்டே டெல்லிக்குச் சென்று முதலில் பாஜக தலைவர்களைச் சந்தித்துப் பேசவிருக்கிறார். அதைத் தொடர்ந்து எம்.பி-க்கள் அணி மாறுவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

ஏற்கினவே பெரும்பாலான எம்.பி-க்கள் டெல்லியில் இருக்கின்றனர். எம்.பி-க்கள் தைரியஷீல் சாம்பாஜிராவ் மானே, சதாசிவ் லோகண்டே, ஹேமந்த் கோட்சே, ஹேமந்த் பாட்டீல், ஸ்ரீகாந்த் ஷிண்டே, பாவ்னா காவ்லி, ராஜேந்திர காவிட், சஞ்சய் மான்லிக், ராகுல் ஷெவாலே உட்பட 12 பேர் ஏக்நாத் ஷிண்டேயுடன் தொடர்பில் இருப்பவர்கள் என்கிறார்கள். இதில் ராகுல் ஷெவாலே வெளிப்படையாக ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரேயிடம் கேட்டுக்கொண்டவர். அதோடு மத்திய அமைச்சர் ராவ்சாஹேப் தன்வேயும், ``12 சிவசேனா எம்.பி-க்கள் ஏக்நாத் ஷிண்டேயுடன் தொடர்பில் இருக்கின்றனர். அவர்கள் அணி மாறத் தயாராக இருக்கின்றனர். சிவசேனாவுக்கு மொத்தம் 19 எம்.பி-க்கள் இருக்கின்றனர்.

ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டே

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிதான் உண்மையான சிவசேனா” என்று குறிப்பிட்டிருந்தார். சிவசேனா எம்.பி-க்கள் 12 பேர் அணி மாறுவார்கள் என்ற வாதத்தை கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் மறுத்திருக்கிறார். மேலும், சிவசேனாவிலிருந்து பிரிந்து சென்றவர்களுக்கு எந்தவித அங்கீகாரமும் கிடைக்காது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் 12 எம்.பி-க்களும் ஏக்நாத் ஷிண்டே அணியில் சேருவதோடு, நாடாளுமன்றத்தில் தங்களுக்கு தனி இருக்கை ஒதுக்கும்படி சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்து மனுக்கொடுக்கவும் முடிவு செய்திருக்கிறார்களாம். ராகுல் ஷெவாலே தலைமையில் 12 எம்.பி-க்களும் செயல்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு சிவசேனா எம்.பி கூறுகையில், ``முதல்வர் ஷிண்டேயுடன் ஆன்லைன் கூட்டத்தில் கலந்துகொண்டோம். ராகுல் ஷெவாலே தலைமையில் தனி அணியாகச் செயல்பட முடிவு செய்திருக்கிறோம். அவர்தான் எங்களது அணித் தலைவர்” என்று குறிப்பிட்டார்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

இதற்கிடையே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முன்னாள் அமைச்சர் ராம்தாஸ் கதம், முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த்ராவ் அட்சுல் ஆகியோரைக் கட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டதாகக் கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டிருக்கிறார். உத்தவ் தாக்கரே கட்சியிலிருந்து நீக்குபவர்களை உடனே ஏக்நாத் ஷிண்டே தனது அணியில் சேர்த்து அவர்களுக்குப் பதவி கொடுத்துவருகிறார். மற்றொரு புறம் சிவசேனாவுக்கு மாநிலம் முழுவதும் 100 நிர்வாகிகளை உத்தவ் தாக்கரே நியமித்திருக்கிறார்.

இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களால் ஓரங்கட்டப்பட்ட தலைவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு உத்தவ் தாக்கரே பதவி கொடுத்திருக்கிறார். அதோடு தேர்தல் கமிஷனில் தங்களது அணிதான் உண்மையான அணி என்பதைக் காட்ட ஏக்நாத் ஷிண்டே தனது அணியின் தேசிய நிர்வாகிகளை அறிவித்திருக்கிறார். முதன்மைத் தலைவராக ஏக்நாத் ஷிண்டே தன்னை அறிவித்திருக்கிறார். இது தவிர மற்ற துணைத் தலைவர், செய்தித் தொடர்பாளர் என முக்கியப் பதவிகளுக்கு ஆட்களை நியமித்திருக்கிறார்.

ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டே

உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நாளைக்கு விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில் ஏக்நாத் ஷிண்டே தனது நிர்வாகிகளை அறிவித்திருக்கிறார். ஏக்நாத் ஷிண்டேயின் இந்தச் செயல் உத்தவ் தாக்கரேயை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. புதிய நிர்வாகிகளுடன் புதிய தீர்மானத்தை நிறைவேற்றி இன்று ஏக்நாத் ஷிண்டே தேர்தல் கமிஷனை அணுகவிருக்கிறார். தங்களது அணிக்கு உண்மையான சிவசேனா அங்கீகாரம் கொடுத்து கட்சியின் சின்னத்தைத் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று கோரவிருக்கிறாராம்.