10 ரூபாய் நாணயம்; கொடுக்கல் வாங்கலில் சந்திக்கும் பிரச்னைகள்.. ரிசர்வ் வங்கி செய்யவேண்டியது இதுதான்!

10 ரூபாய் நாணயங்கள் தமிழ்நாட்டின் சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி போன்ற சில மாவட்டங்களில் மட்டுமே பெரும்பாலும் புழக்கத்தில் உள்ளன. மற்ற மாவட்டங்களில் இந்த நாணயத்தை பலர் வாங்க மறுப்பது கடந்த சில ஆண்டுகளாகவே தொடர் நிகழ்வாக இருக்கிறது.

Published:Updated:
10 ரூபாய் நாணயம்
10 ரூபாய் நாணயம்
0Comments
Share

10 ரூபாய் நாணயங்களை அரசுப் பேருந்துகளிலோ, கடைகளிலோ வாங்க மாட்டோம் என்று சொன்னால், அவர்களுக்கு எதிராகப் புகார் அளிக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 10 ரூபாய் நாணயங்கள் தமிழ்நாட்டின் சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி போன்ற சில மாவட்டங்களில் மட்டுமே பெரும்பாலும் புழக்கத்தில் உள்ளன.

10 ரூபாய் நாணயம்
10 ரூபாய் நாணயம்

மற்ற மாவட்டங்களில் இந்த நாணயத்தை பலர் வாங்க மறுப்பது கடந்த சில ஆண்டுகளாகவே தொடர் நிகழ்வாக இருக்கிறது. இதனால் மக்கள் பலர் இந்த 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பது தொடர்பாக பல சச்சரவுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. இது குறித்து, ரிசர்வ் வங்கிக்கு அடுத்தடுத்து புகார்கள் சென்ற நிலையில், ரிசர்வ் வங்கியின் சார்பில் இப்போது விளக்கம் தரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 10 ரூபாய் நாணயங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன் என சேலத்தில் இருக்கும் சில வர்த்தகர்கள், பஸ் நடத்துனர்களிடம் கேட்டோம். தங்கள் கருத்தை சொன்ன அவர்கள் தங்களின் பெயரை மட்டும் சொல்லிவிட்டு, புகைப்படத்தைத் தர மறுத்துவிட்டார்கள். அவர்கள் சொன்ன கருத்துகள் இனி....

மக்கள் வாங்க மறுக்கிறார்கள்...

``10 ரூபாய் நாணயங்களை மக்கள் வாங்குவதில்லை. அதற்கான காரணம், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு 10 ரூபாய் நாணயத்தை மாற்ற முடியவில்லை. என் கடையிலேயே 10 ரூபாய் நாணயம் வாங்கிவிட்டேன் எனில், அதைத் திரும்ப என்னால் வேறு வாடிக்கையாளரிடமோ, வேறு கடையிலோ மாற்ற முடியாது. இதற்கென நான் நேரம் செலவழித்து வங்கிக்குச் செல்ல வேண்டும். வங்கியிலும் வரிசையில் நின்று படிவத்தை நிரப்பிய பிறகுதான் நான் அதை என் வங்கிக் கணக்கில் செலுத்த முடியும். இது மிகவும் கடினமான வேலை. ஆனால், பணமாக இருந்தால், அது எனக்கு பிரச்னையாக இருக்காது. எளிதில் நான் அதை மாற்றிவிடுவேன்’’ என்று சொன்னார் பாலாஜி பேன்சி ஸ்டோர் ச.அசோக்.

பத்து ரூபாய் நாணயம்
பத்து ரூபாய் நாணயம்

``ஈரோடு, பவானியில்தான் செல்லும்!’’

``என் பெயர் ச.சாருக். ஸ்விக்கியில் பகுதிநேர ஊழியராக வேலை பார்க்கிறேன். நான் உணவுகளைக் கடைகளில் வாங்கிச் சென்று வாடிக்கையாளர்களிடம் கொடுக்கும்போது என்னிடமும் சில வாடிக்கையாளர்கள் 10 ரூபாய் நாணயங்களைக் கொடுத்திருக் கிறார்கள். ஆனால், நான் அதை வாங்க மாட்டேன். ரூபாய் நோட்டுகளைக் கேட்டு வாங்குவேன். அதற்கான காரணம், நான் வாடிக்கையாளர்களிடமிருந்து வாங்கும் பணத்தை ஸ்விக்கி நிறுவனத்தில் நான் யு.பி.ஐ ஐ.டி மூலம் டெபாசிட் செய்ய வேண்டும். அப்படி செய்யும்போது நாணயங்களாக இருந்தால், என்னால் கடைகளில் பரிவர்த்தனை செய்ய முடியாது. இதே ரூபாய் நோட்டுக்களாக இருந்தால் என்னால் எளிதில் பரிவர்த்தனை செய்ய முடியும்.

மக்கள் யாரும் 10 ரூபாய் நாணயங்களை, ரூபாய் நோட்டுகள் போல வாங்கி பயன்படுத்துவதில்லை. மேலும், கடைகளுக்குச் சென்று இந்த 10 ரூபாய் நாணயங்களை நான் பலமுறை கொடுத்தும் இருக்கிறேன். அங்குள்ள கடை ஊழியர்களும் உரிமையாளர்களும் 10 ரூபாய் நாணயங்கள் நம் ஊரில் செல்வதில்லை. நீங்கள் ஈரோடு, பவானி அல்லது சென்னை, கோயம்புத்தூர் சென்றால், 10 ரூபாய் நாணயங்களை வாங்கிக் கொள்வார்கள் என்றும் கூறுகிறார்கள்.

10 ரூபாய் நாணயங்களை என்னதான் மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று கூறினாலும் முறையான விழிப்புணர்வு இல்லாமல் 10 ரூபாய் நாணயங்களை அனைத்து மக்களும் சமமாகப் பயன்படுத்துவது சாத்தியம் இல்லை’’ என்று சொன்னார் சாருக்.

``10 ரூபாய் வாங்குவோம் என போஸ்டர் வைக்க வேண்டும்!’’

``என் பெயர் தர்ஷிணி. நான் ஒரு ஐ.டி ஊழியர். சென்னை போன்ற பெருநகரங்களில் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. ஆனால், மற்ற இடங்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதில்லை. இதற்குக் காரணம், 10 ரூபாய் நாணயம் செல்லாத ஒன்று என்று மக்களிடம் ஒரு தவறான கருத்து உள்ளது.

10 ரூபாய் நாணயங்கள்
10 ரூபாய் நாணயங்கள்

ஆனால், அது உண்மையல்ல. 10 ரூபாய் நாணயங்கள் அனைத்து இடங்களிலும் வாங்கலாம்; அது செல்லும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. வளர்ந்து வரும் சமூகத்தில் எங்கு திரும்பி பார்த்தாலும் கூகுள் பே, போன் பே போன்ற செயலிகள் இங்கு உபயோகப்படுத்தலாம் என்பதற்கு அடையாளமாக சுவர்களில் போஸ்டர் ஒட்டி வைத்திருக்கிறார்கள். அதுபோலத்தான் கடைகளிலும், பேருந்துகளிலும், வங்கிகளிலும் 10 ரூபாய் நாணயங்கள் செல்லும், நாங்கள் வாங்கிக்கொள்வோம் என்று போஸ்டர் ஒட்டியோ, எழுதியோ 10 ரூபாய் நாணயங்கள் பயன்பாட்டை தெரியப்படுத்தலாம்’’ என்று கூறினார்.

``10 ரூபாய் நாணயத்தை மக்கள் சும்மா தருகிறர்கள்...’’

``என் பெயர் சுந்தரம். அன்றாட வாழ்க்கையில் பயன்படும் பொருள்களை வாகனத்தில் கொண்டு சென்று விற்பது என் தொழில். இதற்காக பல இடங்களுக்குச் செல்வேன். அப்போது என்னிடம் பொருள் வாங்கிவிட்டு பலர் 10 ரூபாய் நாணயங்களைக் கொடுப்பார்கள். ஆனால், நான் எதையும் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன். அதை வாங்கிக்கொள்வேன்.

பத்து ரூபாய் நாணயங்கள்
பத்து ரூபாய் நாணயங்கள்

அதிலும் சிலர் 10 ரூபாய் நாணயம்தானே எதற்கும் பயன்படாது என்று பொருள்கள் எதுவும் வாங்காமல் சும்மாவே என்னிடம் கொடுத்துவிடுவார்கள். நான் அந்த 10 ரூபாய் நாணயங்களை வாங்கிக் கொண்டு வந்து அதைச் சேர்த்து மொத்தமாக என் வங்கிக் கணக்கிலோ, மாதம் ஒரு முறையோ, இருமுறையோ வியாபாரத்துக்காக சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு போன்ற இடங்களுக்குச் செல்லும்போது அதை மாற்றிவிடுவேன்.

10 ரூபாய் நாணயத்தை நான் பலமுறை சேலத்திலேயே மாற்ற முயற்சி செய்து இருக்கிறேன். ஆனால், பல கடை தெருக்களிலும், சாதாரண பொதுமக்களும் வாங்குவதில்லை. அதனால் இதை நான் வெளியூர் செல்லும்போது எடுத்துக்கொண்டு போய் மாற்ற வேண்டியுள்ளது. கடந்த மாதம் சென்னை சென்றபோதுகூட நான் சேர்த்து வைத்திருந்த நூறு ரூபாய் மதிப்பு மிக்க 10 ரூபாய் நாணயங்களை காலை உணவு அருந்திவிட்டு ஒரு உணவகத்தில் மாற்றிவிட்டு வந்தேன்’’ என்று கூறினார்.

``வங்கிகளில் முதலில் வாங்கச் சொல்லுங்கள்!’’

``10 ரூபாய் நாணயங்களை கடையிலோ, சில்லறை மாற்றும் போதோ வாங்கிவிட்டால் அதை மற்றொரு கடையில் வாங்க மறுக்கிறார்கள். இதனால் அந்த 10 ரூபாய் நாணயங்கள் எங்களிடமே தங்கிவிடுகிறது. அது மட்டுமன்றி, 10 ரூபாய் நாணயங்களை எல்லா இடங்களிலும் வாங்குவதில்லை. நான்கு அல்லது ஐந்து 10 ரூபாய் நாணயங்களை வங்கிகளுக்கு எடுத்துச் சென்றாலே, எதற்காக இவ்வளவு 10 ரூபாய் நாணயங்களை சேர்த்து வைத்திருக்கிறீர்கள் என்று பல கேள்விகளைக் கேட்கிறார்கள். இதனாலேயே நாங்கள் 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதில்லை’’ என்று சொன்னார் பெயர் சொல்ல விரும்பாத இன்னொரு மனிதர்!

RBI
RBI
Photo: Vikatan / Ashok kumar.D

டெப்போ அதிகாரிகள் வாங்க மறுக்கிறார்களே!

10 ரூபாய் நாணயங்களை வாங்க பேருந்து நடத்துநர்கள் விரும்புவதில்லை என்பது பொதுவான புகாராக இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என சேலத்தில் உள்ள சில பேருந்து நடத்துநர்களிடம் கேட்டோம்.

``எங்களிடம் பேருந்தில் பல பயணிகள் 10 ரூபாய் நாணயங்களை கொடுத்திருக்கிறார்கள். ஆனால், நாங்கள் வாங்குவதில்லை. காரணம், 10 ரூபாய் நாணயங்களை டெப்போவில் கொடுக்கும்போது அங்குள்ள கேஷியர் மற்றும் எங்கள் உயர் அதிகாரிகள் அதை வாங்குவதில்லை. அப்படியே வாங்கினாலும் முகம் சுளித்துக்கொண்டும், ஏன் இதை வாங்குகிறீர்கள் என்று மறைமுகமாகவும் கூறுகிறார்கள்.

டெப்போவில் இருந்து வங்கிக்கு பணம் செலுத்தும்போது வங்கியில் உள்ள ஊழியர்களும் 10 ரூபாய் நாணயங்களை எண்ணுவதில் சிரமம் இருப்பதால், அதை வாங்குவதற்கும் தயங்குகிறார்கள். டெப்போவில் வாங்காத 10 ரூபாய் நாணயங்களுக்குப் பதிலாக நாங்களே எங்கள் சொந்த பணத்தை கட்டி கணக்கை சரி செய்ய வேண்டியிருக்கிறது. இது எங்களுக்குத் தேவையா?’’ என்று கேட்டார் ஒரு பேருந்து நடத்துநர்.

ஆக, 10 ரூபாய் நாணயங்களை வங்கி அதிகாரிகள் மறுப்பு தெரிவிக்காமல் வாங்கிக் கொண்டாலே போதும், மக்கள் அதை எளிதில் பயன்படுத்தத் தொடங்கிவிடுவார்கள். எனவே, ரிசர்வ் வங்கி முதலில் சரி செய்ய வேண்டியது வங்கி அதிகாரிகளைத்தான்!